மரபணு நோய்களை தீர்க்க உதவும் மரபணு வரிசை வரைபடத் திட்டம்!

 














ஜெனோம் இந்தியா - மரபணு வரைபடத்திட்டம்


இந்தியாவிலுள்ள 20 அறிவியல் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து 10 ஆயிரம் ஆரோக்கியமான மனிதர்களின் மரபணு வரிசையை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இதுபற்றிய செய்தி, கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியிடப்பட்டது. ரத்த மாதிரிகளை சேகரிப்பது, மரபணுக்களை வரிசைப்படுத்துவது, செயல்பாட்டுமுறையை மேம்படுத்துவது, தகவல்களை சேகரிப்பது ஆகியவை முக்கியமான அம்சங்களாகும். 


ஒரு மரபணு வரிசையை சேமித்து வைக்க 80 ஜிபி நினைவகம் தேவைப்படுகிறது. 8 பீட்டபைட்ஸ் அளவுள்ள தகவல்கள் ஃபரிதாபாத்தில் உள்ள இந்திய உயிரியல் தகவல் மையத்தில் சேமிக்கப்பட்டுள்ளது. இத்தகவல்கள் பொதுமக்களின் நன்மைக்காக ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. புதிய நோய் கண்டறியும் முறைகள், சிகிச்சைகள், அரியவகை நோய்களை அடையாளம் கண்டறிவது, நோய்களை குணமாக்குவது ஆகியவற்றுக்கு மரபணு வரிசை தகவல்கள் உதவக்கூடும். 


மக்கள்தொகையில் உள்ள மரபணுக்களின் பன்மைத்தன்மையை அறிய மரபணு வரிசை வரைபடம் தேவை. அதை வைத்து பரிமாண வளர்ச்சியை அறிந்துகொள்ளலாம். கூடுதலாக, நோய் அதற்கான சிகிச்சைகளை மேம்படுத்தலாம். இதற்கு உலக நாடுகளில் சேகரிக்கப்பட்டுள்ள மரபணு வரிசை வரைபடம் பயன்படாது. இந்தியர்களின் மரபணு மேற்குலக மக்களிடமிருந்து வேறுபட்டது. எனவே, இந்திய அரசு 2020ஆம் ஆண்டு மரபணு வரிசை வரைபடம் திட்டத்தை தொடங்கியது. ஆராய்ச்சியாளர்கள் ஏற்கெனவே 5,750 மரபணு வரிசைகளை ஆய்வுசெய்துவிட்டனர். 135 மில்லியன் வேறுபட்ட மரபணுக்கள் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளன. 


1.4 பில்லியன் மக்கள்தொகையினர், 4,600 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட சாதிக்குள் திருமணம் செய்துகொள்வது வழக்கமாக இருப்பதால், மரபணுக்கள் பெரிதாக மாறுபடாமல் அப்படியே தொடர்கின்றன. இதுபற்றி அறிவியல் அமைச்சர் ஜிதேந்திர சிங், இந்தியா, உலகின் மாபெரும் மரபணு ஆய்வகம் என்று குறிப்பிட்டு பேசினார். 


மரபணு வரிசை வரைபடத்தை வைத்து ஒருவரின் தோல் நிறம், உயரம், கண்களின் நிறம், மரபணு நோய்கள் ஆகியவற்றை அறியலாம். மரபணு என்பது குழந்தைக்கு அதன் பெற்றோரிடமிருந்து பாரம்பரியமாக வருகிறது. இதை ஏ, சி, ஜி, டி என்ற எழுத்துகள் மூலம் குறிப்பிடுகிறார்கள். முழுமையான மனித உடலுக்கு 3 பில்லியன் ஜோடி மரபணுக்கள் தேவைப்படுகின்றன. இவற்றை சற்று சுருக்கிவைத்து பயன்படுத்துகிறார்கள். இதைப்பற்றி ஆராய ஒருவரிடமிருந்து ரத்த மாதிரி பெற்றாலே இதற்கு போதுமானது. 


மாரடைப்பு, தோல் நோய் போன்றவை ஒருவருக்கு ஏற்படும் வாய்ப்பு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த இந்தியர்களுக்கு அதிகமாக உள்ளது. ஆனால், இந்த நோய்கள் மேற்குலக நாடுகளின் மரபணுக்களில் இல்லை. எனவே, இத்தகைய வினோதமான தன்மையைப் புரிந்துகொள்ள நோய்க்கு சிகிச்சையை உருவாக்க மரபணு வரிசை வரைபடம் தேவை. கணையப் புற்றுநோயை அழிக்க, ஒரு  எம்ஆர்என்ஏ ஊசியை உருவாக்கினால் அது துல்லியமாக நோய் செல்களை தாக்கி அழிக்க வாய்ப்புள்ளது. ஆனால், மரபணுக்களை கருத்தில் கொள்ளாத மருந்தைப் பயன்படுத்தினால் சாதாரண நிலையில் உடலில் உள்ள நல்ல செல்களும் சேர்ந்து அழிந்துவிடும். சில இனக்குழு மக்களுக்கு, குறிப்பிட்ட வேதி மருந்துகள் ஒத்துக்கொள்ளாது. இதை அறிந்துகொள்ளவும் நமக்கு மரபணுக்கள் தேவை. 


உலகளாவிய திட்டமாக மரபணுக்களை வரிசைப்படுத்தும் பணி பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி, 2003இல் நிறைவுபெற்றது. செலவு 3 பில்லியன் டாலர்கள். 


-இந்தியன் எக்ஸ்பிரஸ் 

பிக்சாபே

கருத்துகள்