மருத்துவரை வல்லுறவு செய்து படுகொலை செய்தவர்களை பழிவாங்க வரும் ராவணாசுரா!
ராவணாசுரா
இயக்கம் சுதீர் வர்மா
ரவிதேஜா, பரியா அப்துல்லா, அனு இம்மானுவேல், மேகா ஆகாஷ்
பின்னணி இசை - ஹர்ஷ்வர்தன் ராமேஷ்வர்
நகரில் உள்ள முக்கியமான தொழிலதிபர் ஒருவரை, மற்றொரு பிரபலமான ஒருவர் பகிரங்கமாக மதுபான பாட்டிலால் குத்திக்கொன்றுவிட்டு துப்பாக்கியைக் காட்டி ஓட்டல் ஊழியர்களை மிரட்டிவிட்டு தலைமறைவாகிறார். அந்த வழக்கு ரவீந்தர் என்பவரின் அலுவலகத்திற்கு வருகிறது. அவரது முதலாளி சட்டநிறுவனத்தை நடத்தி வருகிறார். கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டவரின் மகள் வழக்கை ஏற்று வாதாட கூறுகிறாள் அவள் கூற்றுப்படி, அவளது தந்தை, தான் அந்தக்கொலையை செய்யவில்லை. கொலை நடந்தபோது தான் மயக்கமாக காரில் இருந்ததாக கூறுகிறார். ஆனால், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர் கொலை செய்துவிட்டு நிதானமாக நடந்து சென்றதற்கான அழுத்தமான ஆதாரங்கள் மனிதர்களின் நேரடி சாட்சியமாகவும் சிசிடிவியில் காணொலியாகவும் பதிவாகியுள்ளது.
இதற்கடுத்து, இன்னொரு பிரபலமான அடியாள் ஒருவர போலீஸ் கமிஷனரின் அலுவலகத்திற்கு வந்து கமிஷனரை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிக்கிறார். இதை காவலர்களே நேரடியாக பார்த்துவிடுகிறார்கள். அவரை தேடிப்பிடித்து கைது செய்யும்போது அவரும் தான் கமிஷனரை கொல்லவில்லை. கொலை நடந்த நேரம், கல்யாண நிகழ்ச்சி ஒன்றில் இருந்ததாக கூறுகிறார். போலீசுக்கு அதெல்லாம் அநாவசியம் அல்லவா? சிசிடிவியில் அவரின் புகைப்படம் தெளிவாக உள்ளது. அடையாளம் தெளிவாக இல்லை. இதை விசாரிக்க ஜெயராம் வருகிறார்.
வழக்குகளை விசாரித்து அதன் பேட்டர்னை எளிதாக கண்டுபிடித்துவிடுகிறார். அதாவது, கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்களின் அருகில் பலூன் ஒன்று வெடிக்கிறது. பிறகு அவர்கள் மயக்கமடைகிறார்கள். கொலை நடந்தபிறகு காவல்துறை வந்து கைது செய்யும்போதுதான் அவர்களுக்கு என்ன நடந்திருக்கிறதென தெரிகிறது. இவர்கள் அனைவருமே சற்று பெரிய புள்ளிகள். இதைப்பற்றி ஜெயராம் விசாரிக்கும்போது, சில வழக்குகள் ரவீந்தர் வேலை செய்யும் சட்டநிறுவனம் சார்ந்து நடந்துள்ளதை அறிகிறார். அங்கு சென்று பார்த்தால், குற்றவாளி ரவீந்தர்தான் என சில அடையாளங்களை வைத்து கண்டுபிடிக்கிறார். ஆனால் நிரூபிக்க எந்த சாட்சியமும் இல்லை. அதேநேரம், அவன் ஜெயராமுக்கு முடிந்தால் என்னைப் பிடி, ஆதாரங்கள் இல்லையே என்ன செய்வாய் என சவால்விடுகிறான். அவன் சிரிப்பு அவருக்குள் தான் தோற்றுப்போய்விடுவோமோ என பயமுறுத்துகிறது. மிரட்சி தருகிறது.
உண்மையில் ரவீந்தர் என்ற வக்கீல் யார், அவன்தான் உண்மையான குற்றவாளியா என்று படம் விவரிக்கிறது.
படத்தில் இயக்குநரை விட அதிக உழைப்பைப் போட்டிருப்பவர் பின்னணி இசையமைப்பாளர் ஹர்ஷ்வர்தன் ராமேஷ்வர்தான். படம் நெடுக அவரின் பிஜிஎம்தான் நம்மை அயர்ச்சி வராமல் காப்பாற்றுகிறது. ராவணாசுரா என்ற தீம் பாடலை ஹாரிகா நாராயணன் உச்சபட்ச சக்தியோடு பாடி சக்தியூட்டியிருக்கிறார். அதற்கான சண்டைக்காட்சியும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது.
பிராஸ்தெட்டிக் மேக்கப் கலைஞரான சுஷாந்தின் உதவியை அவரை மிரட்டிப் பெற்று வக்கீல் ரவீந்தர் பெற்று பயன்படுத்துகிறார். அவரது காதலியை சவுண்ட் பரூஃப் உள்ள இடத்தில் கட்டி வைத்திருக்கிறார். சுஷாந்த் அவரை ஏமாற்ற முயன்றால், வல்லுறவு அல்லது கொலை அல்லது இரண்டுமே கூட தன்னால் செய்யமுடியும் என மிரட்டுகிறார். இதனால் சுஷாந்த், ரவி சொல்லும் ஆட்களை முக அளவு எடுத்து முகமூடிகளை தயாரித்து தருகிறார். இதெல்லாம் ஓகேதான். ஆனால் உடல் கட்டமைப்பு, உயரத்தை எப்படி மேட்ச்அப் செய்கிறார் என்பதைக் காட்டவில்லை. எனவே, அதில் லாஜிக் எடுபடவில்லை. கொரிய தொடர்களில் முகமூடி மட்டுமல்ல, உடலைக்கூட குறிப்பிட்ட முறையில் குறுக்கி நீட்டி வேடங்களை போடுவதை செய்துகாட்டியிருக்கிறார்கள். இப்படியெல்லாம் கொஞ்சம் காட்டியிருந்தால் இன்னும் நேர்த்தியாக இருந்திருக்கும்.
வழக்கமான பழிவாங்கல் கதைதான். அதில் பிராஸ்தெட்டிக் மேக்கப்தான் புதிது. மற்றவையெல்லாம் அப்படியேதான் உள்ளது. காவல்துறை அதிகாரி ஜெயராம் அநியாயத்திற்கு ஏமாற்றப்பட்டிருக்கிறார். அவருக்கான ஒரே வேலை, வக்கீல் ரவியை வியந்து பார்த்து ஓரமாகப் போய் நிற்பதுதான். வேறு எதையும் செய்வதில்லை. ரவிக்கு பெரிய சவால்கள் ஏதுமில்லை. அவர் தான் நினைத்ததை அதேவிதமாக செய்கிறார். சட்டத்தில் இருந்து இறுதியாக தப்பித்துவிடுகிறார். சுஷாந்தின் காதலியை இறுதியாக அவரிடம் ஒப்படைத்துவிடுகிறார். அவரும் ரவியின் கதையைக் கேட்டு அவருக்கு உதவுகிறார். அடேங்கப்பா... ஏதோ நீதிக்கதை கேட்டது போல இருக்கிறதல்லவா?
படத்தில் நாயகன் ரவிக்கு நிகராக வேறு எந்த பாத்திரமும் இல்லை. அனைத்துமே பலவீனமாக இருக்கிறது. எனவே படம் நிறைடையும்போது, பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை. நாம் அனைவருமே யாரோ இன்னொருவரின் கதையில் வில்லனாகத்தான் இருப்போம் என ஜோக்கரின் போஸ்டர் வாசகம் ஒன்றைக் காட்டுகிறார்கள். உண்மையில் ஜோக்கரின் கதையோடு ராவணாசுராவை ஒப்பிட முடியாது. அந்தளவு ரவியின் பின்னணிக் கதை நமக்கு பொருந்திப்போகவில்லை. ஃபிளாஷ்பேக் கதையில், மருத்துவர் சாந்தி, மருத்துவ நிறுவனம் நடத்தும் சட்டவிரோத மருந்து பரிசோதனையைக் கண்டுபிடித்து அவர்களிடமே சென்று லூசுத்தனமாக அதை நிறுத்துங்கள் என்று சொல்கிறார். எனவே, அவர்கள் சில ரவுடிகளை வைத்து அந்த பெண்ணை வல்லுறவு செய்து கொல்கிறார்கள். உடலை குப்பைக்கிடங்கில் எறிகிறார்கள். அந்த உடலை எடுத்து ரவி அடக்கம் செய்துகிறர். பிறகு என்ன? வல்லுறவு கொலைக்கு காரணமானவர்களை அதே முறையில் ரவி பழிவாங்குகிறார். இதுதான் கதை. மருத்துவர் சாந்தி, மருத்துவ மோசடி பற்றி ரவியிடம் பகிருவதற்கான காரணம் என்ன, அவர் ரவியின் அப்பாவிற்கு மருத்துவ சிகிச்சை செய்பவர் அவ்வளவே. அதைத்தாண்டிய உறவு ஏதுமில்லை.
உண்மையில் இந்த பழிவாங்கல் கதையை படத்தில் காட்டாமல் இருந்தாலும் பெரிய மாறுதல் ஏதும் ஏற்பட்டுவிடாது. இந்தக்கதை நல்லவன், கெட்டவன் என இரண்டாக மனிதர்களைப் பிரிக்கிறது. ராவணன் அசுரனாக இருந்தாலும் அவன் கூறவும் ஒரு கதை இருக்கிறது. அப்படியான கதை ஒன்றை ரவி கூறுகிறான். படத்தில் குற்றம் செய்தவர்களை, அனைவரையும் கொல்வதில்லை. சிலரை தப்பிக்க முடியாதபடி ஆதாரங்களை உருவாக்கி சிக்க வைக்கிறான். ஆனால் இறுதியில் அவன் அமைச்சரின் ஆள் ஒருவனைக் குற்றவாளி என்று கூறுகிறான். அதற்கு சுஷாந்தும் அவன்தான் மிரட்டி காதலியை கடத்தி தவறான விஷயங்களை செய்யவைத்தான் என்று சாட்சியம் சொல்கிறான். அப்படிப் பார்த்தால், அதுவரை ரவியால் சிக்கவைக்கப்பட்டு குற்றவாளி என குற்றம்சாட்டப்பட்டு லாக்கப்பில் இருப்பவர்களும் விடுதலையாகிவிடுவார்களே?
ரவியைப் பற்றி முழுமையாக விசாரித்து உண்மையைக் கண்டுபிடித்த ஜெயராமும் இறுதியாக அமைதியாக ஓரமாக நின்றுவிடுகிறார். மனசாட்சியா, கடமையா என வரும்போது அவர் மனசாட்சியைத் தேர்ந்தெடுக்கிறாரோ? அவர் அதுவரை சட்டத்தை, நீதியை நம்பி வாழ்ந்து வருகிறார். ரவியின் வாழ்க்கை அவரை முழுக்க மாற்றிவிட்டது என எப்படி நம்புவது? அப்படியானால் அவர் தொழில் வாழ்க்கையில் அதுவரை கடைபிடித்த லட்சியம் முழுமையாக நொறுக்கப்பட்டு விடுகிறது. ஊழல் என்பது காவல்துறையில் புதிதானது கிடையாது. அவர் அதிர்ச்சியடைவதோ, ரவியைப் பற்றி தனது மனைவியிடம் பேசுவதோ இயல்பானதாக இல்லை. நாயகத்துதியாகவே உள்ளது. ஜெயராம், ஊழல் செய்யும் மருத்துவரை தான் அறியாமலேயே ரவி என நினைத்து சுட்டுக்கொல்வது உண்மையில் திருப்புமுனையான காட்சி. இந்த சம்பவத்தை வைத்து காவல்துறை ஜெயராம் மீது விசாரணை நடத்தி தண்டிக்கிறது. இதனால் ரவீந்தர் விவகாரத்தில் அவர் சற்று அமைதியாகிவிடுகிறார். அவர் குழுவில் உள்ள துணிச்சலான பெண் அதிகாரியையும் ரவி பிரியாணி போட்டு உளவியல் ரீதியாக தாக்குதல் நடத்தி விசாரணைக் குழுவில் இருந்து பின்வாங்க செய்கிறான்.
இதில் அனு இம்மானுவேல் படுக்கை அறைக் காட்சிக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார். பரியா அப்துல்லா பரவாயில்லை. நடிக்க முயன்றிருக்கிறார். மேகா ஆகாஷ்தான் வில்லி. ரேப் என்று சொல்லும் இடத்தை ம்யூட் செய்கிறார்கள். ஆனால் படம் நெடுக ரேப் என்பதை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக