டிமென்சியா நோயாளிகளுக்கு உதவும் க்யூடி ஹியூமனாய்ட் ரோபோட்!

 











டிமென்சியா நோயாளிகளுக்கு உதவும் சமூக ரோபோட்டுகள்! 



சமூக ரோபோட்டுகள் என்பதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாய், பூனை, உதவியாளர் என பல்வேறு வடிவங்களில் நிறைய ரோபோக்கள் உண்டு. அவையெல்லாம் இந்த வகையில் சேரும். இப்படியான ரோபோட்டுகள் நமக்கு ஏதாவது ஒரு வகையில் உதவும், குறைந்தபட்சம் மனிதர்களின் வஞ்சனையிலிருந்தேனும் விலக்கி நட்பு பாராட்டும். நோயாளிகளுக்கு வழிகாட்டியாக உதவும். 


ஆனால் தற்போது இந்தியானா பல்கலைக்கழக ரோபோட் ஆராய்ச்சியாளர் செல்மா செபானோவிக் (selma sabanovic) உருவாக்கியுள்ள ஹியூமனாய்ட் ரோபோட்டான க்யூடி வேறு வகையில் உள்ளது. அதாவது, சாட் ஜிபிடி 4 எனும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் சமூக ரோபோட்டான க்யூடி, டிமென்சியா நோயாளிகளுக்கு உதவுகிறது. இத்தொழில்நுட்பம் மூலம் இந்த ரோபோட் பல்வேறு உணர்ச்சிகளை தனது திரையில் காட்டி உரையாடுகிறது. டிமென்சியா நோயாளிகளுக்கு நினைவுகள் மெல்ல அழிந்துகொண்டே வரும். அதுவரை நன்கறிந்த திறனான கார் ஓட்டுவது கூட மெல்ல மறந்துபோகும். மைக்ரோவேவ் ஓவனை இயக்குவது எப்படி என தடுமாறுவார்கள். உச்சபட்சமாக உணவு சாப்பிடுவது, உடை மாற்றுவது கூட மறந்துபோகும். 


சில ஆண்டுகளுக்கு முன்புவரை டிமென்சியா வந்தால் நீங்கள் கருந்துளையில் சிக்கியது போல்தான். மருத்துவர்களும் அதே கருத்தை தங்கள் முகத்தில் துயரத்தைத் தேக்கி வைத்து முடிவுகளைக் கூறுவார்கள். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. அதை சமாளிக்கும் விதமாக அறிவியல் நமக்கு கைகொடுக்கிறது. 


க்யூடி பிற ரோபோட்டுகளைப் போல அதைச் செய், இதை மறந்துவிடாதே என அதிகாரம் செய்வதில்லை. நான்கு புகைப்படங்களைக் காட்டி அதை ஒன்றாக்கி ஒரு கதையைச் சொல்லச் சொல்கிறது. அதன் வழியாக அவர்களது இழந்துகொண்டிருக்கும் நினைவுகளை மீள நினைவுபடுத்துகிறது.  இரண்டு அடி உயரம். செவ்வக முகம். அதி்ல்தான் அதன் கண்கள், உதடு ஆகியவற்றைப் பார்க்க முடியும். ஹலோ நான் க்யூடி உங்கள் ரோபோட் நண்பன் என பிறரிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறது. சமூக ரோபோட்டுகளுக்கு சந்தையில் குறையொன்றுமில்லை. ஏற்கெனவே காஸ்மோ, ஆர்ஐபி குரி, பெப்பர், அசிமோ  என நிறைய ரோபோட்டுகள் சந்தையில் உண்டு. இவை எல்லாமே அதிக விலை கொண்டவை. 


க்யூடியில் உள்ள அம்சங்களைப் பார்ப்போம். 3டி கேமரா, முகமறியும் நுட்பம், தகவல்களை பதிவுசெய்யும் திறன், மைக்ரோபோன்கள் ஆகியவை உள்ளன. டிமென்சியா நோயாளிகளின் தேவைக்கு ஏற்ப அதை மாற்றி பயன்படுத்த முடியும். நோயின் பாதிப்பு அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. 


ரோபோட் ஆராய்ச்சியாளர் செல்மா சபானோவிக்கின் பெற்றோர்கள் இருவருமே பொறியாளர்கள். அவரது அப்பா, தொழிற்சாலை ரோபோட்டுகளை உருவாக்கி வந்தார். அந்த காலத்தில் சமூக ரோபோட்டுகள் என்பது, புனைவு கதையில் மட்டுமே சாத்தியம். செல்மாவுக்கு ஒன்பது வயதானபோது, அவர் யோகோஹாமாவில் கோடை விடுமுறையைக் கழித்தார். 1987ஆம் ஆண்டு ஜப்பானில் சமூக ரோபோட்டுகள், அங்குள்ள மக்களுக்கு பல்வேறு விதமாக உதவிகளை செய்து வந்தன. அங்கிருந்தவை ஆங்கில திரைப்படங்களில் வருவது போல மனிதர்களை அழிப்பவை அல்ல. மனிதர்களுக்கு இணக்கமான நாய், பூனை, உதவியாளர் போன்றவை.  


சமூக ரோபோட்டுகளை உருவாக்கவே செல்மா விரும்பினார். அதற்கான கண்டுபிடிப்பாளர்களைக் கண்டுபிடித்து அவர்களின் ரோபோட் உருவாக்கத்தைக் கற்க நினைத்தார். அதற்கான வாய்ப்பும் கிடைத்தது. 2005ஆம் ஆண்டு, ரோபோட் வல்லுநரான டகோனாரி ஷிபாட்டாவிடம் பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொண்டார். அப்போது டகோனாரி, தேசிய மேம்பட்ட தொழில்துறை அறிவியல் தொழில்நுட்ப கழகத்தில் இயங்கி வந்தார். அவர் உருவாக்கிய ரோபோட் ஒன்றின் பெயர் பாரோ. இந்த ரோபோவை செல்லப்பிராணி போல ஒருவர் வெளியில் கூட்டிச்செல்ல முடியும். அதை செல்மா தனது வீட்டுக்கு அழைத்து சென்றபோது, மக்கள் அதை வித்தியாசமாக பார்த்தார்கள். சிலர் ஆச்சரியப்பட்டார்கள். இன்று அந்தளவு ஆச்சரியம் மக்களிடம் இல்லை.ரோபோட்டுகளின் புழக்கம் அதிகமாகிவிட்டதே இதற்கு காரணம். 


இன்றைய சூழலில் சமூக ரோபோட்டுகளின் தேவை பெருகியுள்ளது. க்யூடி ரோபோட்டின் ஆராய்ச்சியே இதற்கு சான்று. 



வயர்ட் இதழ்

கேட் மெக்கோவன் 

மூலக்கட்டுரையைத் தழுவியது.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்