சீன வெளியுறவுக்கொள்கையின் அடையாளமாக மாறிய பாண்டா கரடி!

 








பாண்டாவுக்கு பாதுகாப்பு


அமெரிக்காவில் உள்ள இரண்டு வனவிலங்கு காட்சி சாலைகளில் பாண்டா பாதுகாப்புக்கென ஒப்பந்தங்களை சீனா செய்துள்ளது. கூடுதலாக ஸ்பெயின் நாட்டுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி, சீனாவின் கானுயிர் பாதுகாப்பு சங்கம், ஸ்பெயின் நாட்டின் ஜூ அக்வாரியம், அமெரிக்காவின் சாண்டியாகோ ஜூ வைல்ட்லைஃப் அலையன்ஸ் ஆகிய அமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. விரைவில் ஒரு ஜோடி பாண்டா, அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படவிருக்கிறது. 


உலகில் பாண்டா கரடிகள் தற்போதைக்கும் சீனாவில் மட்டும்தான் இருக்கின்றன. உலக கானுயிர் நிதியகம் இதுபற்றி வெளியிட்ட அறிக்கையில், சீனா, வியட்நாம், மியான்மர் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்த பாண்டா கரடிகள், மனிதர்களின் செயல்பாடுகளால் பெருமளவுக்கு அழிந்துவிட்டன என்று கூறியுள்ளது. 


பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் பியர் அர்மாண்ட் டேவிட், சீனாவில் சில காலம் வாழ்ந்தார். விலங்கியலில் ஆர்வம் கொண்டவரான அவரே மேற்குலகைச் சேர்ந்தவர்களில் பாண்டா கரடியைப் பற்றிய குறிப்புகளை எழுதிவைத்து மக்களுக்கு தெரிய வைத்தவர். டேவிட் 1869ஆம் ஆண்டு, சீனாவில் உள்ள யான் நகரில் உள்ள பாவோக்சிங்கில் தங்கியிருந்தார். அப்போதுதான் பாண்டா கரடியை அடையாளம் கண்டு பதிவு செய்துவைத்தார். சீனாவுக்கும், பிரான்ஸிற்கும் இடையே தூதர் போல பாண்டா கரடி பயன்படத்தொடங்கியது. கடந்த ஆண்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங், பாண்டா சீனமக்களுக்கும், அமெரிக்க மக்களுக்கும் உள்ள நட்புறவைக் குறிக்கிறது என்று உரையில் குறிப்பிட்டார். 


அமெரிக்க மக்களுக்கு பாண்டா கரடிகள் எப்போதும் ஆச்சரியத்தை தரும் உயிரினமாகவே இருந்து வந்துள்ளது. 1936ஆம் ஆண்டு, அமெரிக்க அரசு அதிகாரி சீனாவுக்கு சென்று திரும்பியபோது சு லின் என்ற பாண்டா கரடிக் குட்டியை வாங்கி வந்தார். பின்னாளில் அதை சிகாகோ வனவிலங்கு காட்சி சாலைக்கு தானமாக வழங்கினார். முதல் நாளன்று அந்த பாண்டாவைப் பார்க்க 53 ஆயிரம் மக்கள் வந்தனர் என நேஷனல் ஜியாகிராபிக் நிறுவனத்தின் கட்டுரை தகவல் தெரிவிக்கிறது. 


சீன தேசியக்கட்சி, இரண்டாம் உலகப்போரின்போது, ஜப்பானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து போரிட்டது. 1941ஆம் ஆண்டு, அமெரிக்காவுக்கு ஒரு ஜோடி பாண்டாக்களை வழங்கியது. 1957 -1982ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் 23 பாண்டாக்களை ஒன்பது நாடுகளுக்கு வழங்கியுள்ளது. சோவியத் யூனியன், வடகொரியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், ஸ்பெயின், மெக்சிகோ ஆகிய நாடுகள் இதில் உள்ளடங்கும். 

1980ஆம் ஆண்டில் பாண்டாக்களை பரிசாக வழங்குவதை சீனா நிறுத்திக்கொண்டுவிட்டது. அக்காலகட்டத்தில் பாண்டாக்கள் அழிந்து வருகின்றன. அதை பாதுகாக்கவேண்டும் என இயற்கை சூழல் ஆர்வலர்கள் குரல் எழுப்பத் தொடங்கினர். எனவே, சீனா தானமாக பாண்டாக்களை தருவதை நிறுத்திக்கொண்டு அவற்றை கடனாக கொடுத்து அதற்கு குறிப்பிட்ட வாடகையை வசூலிக்கத் தொடங்கியது. பாண்டாக்களுக்கு குட்டிகள் பிறந்தால் அதற்கும் சேர்த்து கூடுதல் கட்டணத்தை தரவேண்டியதிருந்தது. ஓராண்டுக்கு 5 லட்சம் டாலர்கள் தொடங்கி 1 மில்லியன் டாலர்கள் வரை, சீனா பணத்தை சம்பாதித்தது. 


குறிப்பிட்ட கடன் காலகட்டம் முடிந்தபிறகு பாண்டா கரடிகள் சீனாவுக்கு திரும்பின. இதற்கு வசூலித்த பணத்தை வன உயிரினங்கள் பாதுகாப்புக்கு சீன அரசு செயல்படுத்தும் கட்டாயம், பொதுநல வழக்குகள் மூலம் ஏற்பட்டது. பனிப்போர் காலகட்டத்திற்குப் பிறகு, 1972ஆம் ஆண்டு நிக்சன் சீனாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார். அங்கு, அதிபர் மாவோ ஸெடாங்கை சந்தித்து உரையாடினார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் நல்லிணக்கம் ஏற்பட்டது, அதன் சாட்சியாக, அமெரிக்காவுக்கு சீன அரசு இரண்டு பாண்டா கரடிகளை வழங்கியது. 


ஆனால், தற்போதைய சீன அரசு பாண்டாக்கரடிகளை மேற்குலக நாடுகளின் வனவிலங்கு காட்சி சாலைகளில் வைத்திருக்க அனுமதி வழங்கவில்லை. ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள வனவிலங்கு காட்சி சாலைகள், கடன் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாவிட்டால் விலங்குகளை சீனாவுக்கு திரும்ப அனுப்பிவைக்கவேண்டும். 2022ஆம் ஆண்டு ஃபிபா போட்டிகளை நடத்திய கத்தாருக்கு இரண்டு பாண்டாக்களை சீனா வழங்கியது. மேற்குலக நாடுகளை விலக்கி மத்திய கிழக்கில் தனது அரசியல் செல்வாக்கைத் தக்கவைக்கும் செயலாக அதை கருதினர். 


சீன அரசு, அரசியல், வணிகம் ரீதியாக தைவான், கனடா, ஆஸ்திரேலியா, தென் சீனக்கடலில் ஆதிக்கம் செலுத்துவது, இந்தியாவுடன் எல்லைப் பிரச்னை என அண்மைக்கால செயல்பாடு பல்வேறு முரண்பாடுகளைக் கொண்டுள்ளது. சீனாவை அடையாளப்படுத்தும் பாண்டா, இத்தகைய விவகாரங்களில் என்ன மாதிரியான நேர்மறை மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று தெரியவில்லை. 


-இந்தியன் எக்ஸ்பிரஸ் 

பிக்சாபே


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்