டிக்டாக்கை பொது எதிரியாக கட்டமைக்கும் அமெரிக்கா!

 







மேற்குலக நாடுகளுக்கு வேற்றுகிரகவாசிகள் என்றுமே எதிரியாகவே இருக்கமுடியும். ஏன் என்று தெரியவில்லை. அந்தளவுக்கு பயம் கொள்கிறார்களா என்ன? முதலில் ரஷ்யாவை நினைத்து பீதியடைந்தவர்கள், திரைப்படம், பாடல், டிவிநிகழ்ச்சி, செய்தி என அனைத்திலும் அதற்கு எதிரான கருத்துகளை உருவாக்கினார்கள். இந்த ஆண்டுகூட உக்ரைனில் எடுக்கப்பட்ட ரஷ்ய எதிர்ப்பு ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் கிடைத்திருக்கிறது. அதேசமயம், வெள்ளையர்கள் செவ்விந்தியர்களை கொன்ற உண்மையைப் பேசும் ஸ்கார்சி படத்திற்கு ஒற்றை விருது கூட வழங்கப்படவில்லை. இப்போது சில ஆண்டுகளாக பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் சீனாவை பலவீனப்படுத்த வழி தேடுகிறார்கள். அந்நாட்டு நிறுவனங்களை முடக்கி வருகிறார்கள். அதற்கு தேசப்பாதுகாப்பு என்ற ஒற்றைக் காரணத்தைக் கூறுகிறார்கள். 


டிக்டாக் ஆப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். பதினைந்து நொடி வீடியோக்கள் மூலம் புகழ்பெற்ற ஆப். தற்போது, இசை, நூல் வாசிப்பு என வளர்ந்து வருகிறது. இதில் வீடியோ போட்டு சம்பாதிப்பவர்கள் உலகம் எல்லாம் உண்டு. இந்த நிறுவனத்தில் நாற்பது சதவீத பங்குகளை பைட் டான்ஸ் நிறுவனம் வைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் பூர்விகம் சீனா. எனவே, தானியங்கியாகவே தேசப்பாதுகாப்பு பற்றிய அக்கறை அமெரிக்க அரசுக்கு வந்துவிட்டது. அண்மையில் கூட நாடாளுமன்ற கூட்டத்தில் பைட் டான்ஸ் அதன் பங்குகளை விலக்கிக்கொள்ள வேண்டும் இல்லையெனில் ஆறுமாதத்தில் டிக் டாக் ஆப்பை ஆப்பிள், கூகுளில் இருந்து நீக்குவோம் என கூறியிருக்கிறார்கள். 


நீக்குதல், தடை என்பது டிக்டாக்கிற்கு புதிதல்ல. ஏற்கெனவே இந்தியா, பாகிஸ்தான், நேபாளத்தில் தடை இருக்கிறது. கனடா, இங்கிலாந்தில் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு பதிவாகியுள்ளது. அரசு இயந்திரத்தில் ஆப்பை தரவிறக்க தடையுள்ளது. 2020ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப், டிக்டாக்கை சீன பூர்விகம் கொண்டது என்ற காரணத்திற்காக எதிர்த்தார். அதை தொண்ணூறு நாட்களுக்குள் விற்கவேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் பின்னாளில் இந்த உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டது. பின்னாளில் ஃபேஸ்புக்கில் இருந்து வெறுப்புவாத பேச்சுக்காக டிரம்ப் நீக்கப்பட்டார். அதன் காரணமாக வேறுவழியின்றி டிக்டாக்கை ஆதரிக்க தொடங்கினார்.  


கூகுள், மெட்டா ஆகிய நிறுவனங்கள் மக்களின் தகவல்களை விற்றுத்தான் பெரும் பணக்கார நிறுவனங்களாக மாறின. ஆனால் டிக்டாக்கை மட்டும் தடை செய்ய குறிவைத்து எதற்கு இயங்குகிறார்கள்? டிக்டாக் சீனாவைப் பூர்விகமாக கொண்ட நிறுவனம் என்பதால், அமெரிக்கா பற்றிய தகவல்கள் எல்லாம் சீனாவுக்கு செல்கிறது என அமெரிக்க அரசு கவலைப்படுகிறது. அதாவது தகவல்களை திருடினால் கூட அது அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமாக இருக்கவேண்டும். சீனாவாக இருக்க கூடாது என்ற பொதுநல அக்கறைதான். அதிபர் பைடன் கூட இதுதொடர்பாக மக்கள் அவை எடுத்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட உள்ளார். அவை உறுப்பினர்கள் 352 பேர் டிக்டொக்கிற்கு எதிராகவும், 65 பேர் ஆதரவாகவும் உள்ளனர். அமெரிக்க அரசியல்வாதிகளில் பலரும் டிக்டொக்கில் இணைந்து அரசியல் பிரசாரம் செய்து வருவதுதான் வேடிக்கையான உண்மை. 


அமெரிக்காவில் மட்டும் 170 மில்லியன் பயனர்கள் உள்ளனர். 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டிக்டாக் உலகம் முழுக்க பெருவெற்றியைப் பெற்றது. இதில்  அல்காரிதம், பயனர் விரும்புகிறாற்போல வீடியோக்களை சிறப்பாக தொகுக்கிறது. இதற்கு போட்டியாக கூகுள், மெட்டா கூட நிற்கமுடியவில்லை. எனவே, டிக்டாக்கின் வசதிகளை அப்படியே காப்பியடித்து தங்களின் ஆப்களில் உள்ளே வேறு பெயரில் வைக்கத் தொடங்கினர். பிறகு அதன் வளர்ச்சியை தடுக்க மறைமுகமாக களமிறங்கினர். அமெரிக்க உள்நாட்டு காவல்துறையும், குடியரசு கட்சியினரும் டிக்டாக்கை சீனாவைச் சேர்ந்த ஆப் என்று கூறி புகார்களை அடுக்கினர். 


தேசிய தகவல்தொடர்பு கமிஷன் தலைவரான பிராண்டன் கெர், சீனா, டிக் ஆப் மூலம் பிற நாடுகளை கண்காணிக்க முயல்கிறது. இந்தியாவில் கூட தேசியபாதுகாப்பு காரணமாக டிக்டாக்கை தடை செய்திருக்கிறார்கள். பயனர்களின் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி எடுத்து பயன்படுத்துகிறார்கள் என்றார். 


அமெரிக்காவை பிளவுபடுத்துகிறார்கள். அறமதிப்பீடுகளை தகர்க்கிறார்கள். இஸ்ரேலை, ஹமாஸ் தாக்கும்போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவான பதிவுகளே டிக்டாக்கில் நிறைய வலம் வந்தன. சீனா தனது செயற்கை நுண்ணறிவை டிக்டாக் மூலம் பயன்படுத்தி, கம்யூனிச சிந்தனைகளை பரப்ப முயல்கிறது என அமெரிக்க தேசப்பற்றறாளர்கள் ஆதாரமற்ற கருத்துகளை பேசி எழுதி வருகின்றனர். 


டிக்டாக் வழியாக தகவல் தொடர்பு கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கூடவே அதில் பொருட்களை விற்பனை செய்வதும் கூடி வருகிறது. பெரும்பாலான இளைஞர்கள் டிக்டாக்கில் இருப்பதை அரசியல்வாதிகள் தடுக்க நினைக்கிறார்கள். டிக்டாக் அளவுக்கு மெட்டா, எக்ஸ் கூட பிரபலம் பெறவில்லை. 


பைட் டான்சின் ஆளுமையில் உள்ள டிக்டாக்கை மைக்ரோசாஃப்டிற்கு விற்க அமெரிக்க அரசியல்வாதிகள் நிர்பந்தம் செய்தனர். ஆனால் அந்த செயல்பாடு நினைத்த திசையில் செல்லவில்லை. வெற்றியும் பெறவில்லை. லிங்க்டு இன் நிறுவனம் மூலம் வருமானம் சம்பாதித்தாலும் கூட மெட்டா, எக்ஸ் அளவுக்கு மக்கள் மத்தியில் மைக்ரோசாஃப்ட் புகழ்பெறமுடியவில்லை. இப்போதும் கூட ஓப்பன் ஏஐ என்ற நிறுவனத்தை துணையாக வைத்தே தன்னை சந்தையில் உள்ள நிறுவனமாக காட்டிக்கொள்கிறது. கூகுள், மெட்டா, எக்ஸ் ஆகியவற்றோடு போட்டியிடும் தனித்தன்மையான எந்த சேவையும், மென்பொருளும் அதனிடம் இல்லை. 


டிக்டாக், சீனாவிலும் இயங்குகிறது. ஆனால் அதன் பெயர் டூயின். இதில் சீன அரசின் பங்கு ஒரு சதவீதம் உள்ளது. மற்றபடி உலகளவில் டிக்டாக் என பெயர் மாற்றம் செய்து இயங்கி வருகிறது. இதன் தலைமையகம் சிங்கப்பூரிலும், லாஸ் ஏஞ்சல்சிலும் உள்ளது. டிக்டாக்கை தடை செய்வதற்கான மசோதா, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக மக்களுக்கு முறையாக அறிவிக்காமல் கூட நிறைவேற்றப்பட்டுள்ளது. எங்களது நிறுவனத்தின் அறுபது சதவீத பங்குதாரர்கள் உலக நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள்தான் என டிக்டாக்கின் துணை தலைவர் கூறியுள்ளார். 


டிக்டாக் அமெரிக்காவின் தேசியப்பாதுகாப்புக்கு எப்படி எதிராக இருக்கிறது என்பதற்கு ஆதாரங்கள் காட்டாமல் அதை தடை செய்ய முடியாது. இப்படி செய்தால், உலகளவில் உள்ள முதலீட்டாளர்கள் அமெரிக்காவின் மீது அவநம்பிக்கை கொள்வார்கள். சீனாவை பூர்விகம் கொண்டதற்காக டிக்டாக்கை முடக்குவது, தடை செய்வது நேர்மையான போட்டி என்ற சூழலை மாசுபடுத்துவது போலாகும என சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கருத்து தெரிவித்துள்ளார். 


நாட்டில் தீர்க்கவேண்டிய பிரச்னைகளாக உள்நாட்டு தீவிரவாதம், நிறவெறி, வறுமை என இருக்கும்போது அதை திசைதிருப்பும் விதமாக ஒரு பொழுதுபோக்கு ஆப்பை பொதுஎதிரியாக கட்டமைப்பதை என்ன மனநிலையென எடுத்துக்கொள்வது?


ஐஇ கட்டுரையைத் தழுவியது. 


தீரன் சகாயமுத்து -பிரதர்ஹூட் சொசைட்டி

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்