வன்முறையை ஒத்திகை செய்து பார்த்து பின்தொடரும் குழந்தைகள்!
albert bandura
குழந்தைகளின் வன்முறை பற்றி பார்த்தோம். வன்முறையை ஒருவர் செய்வதைப் பார்த்து நாம் கற்கிறோமா அல்லது பொழுதுபோக்காக பார்க்கும் திரைப்படங்கள், விளையாடும் விளையாட்டுகளில் இருந்து கற்கிறோமா என்ற விவாதம் எப்போதும் உள்ளது. ஆல்பெர்ட் பாண்டுரா, குழந்தைகளின் மனதில் வன்முறை எப்படி படிகிறது என்பதை அறிய பொம்மை சோதனை ஒன்றை நடத்தினார். 36 சிறுவர்கள், 36 சிறுமிகள் என கூட்டி வந்து அவர்களை மூன்று பிரிவாக பிரித்தார். இதில், ஒரு குழுவுக்கு பெரியவர்கள் பொம்மையை அடித்து உதைத்து திட்டுவது ஆகியவற்றை செய்வதைப் பார்க்க வைத்தனர். அடுத்து, இன்னொரு பிரிவினருக்கு பொம்மையை மென்மையாக கையாள்வதைக் காட்டினர். இதில் வயதில் மூத்தவர்கள் பொம்மைகளை திட்டி, அடித்து உதைத்து சேதப்படுத்துவதைப் பார்த்த குழந்தைகள் அதை அவர்களும் நினைவில் வைத்துக்கொண்டு திரும்ப செய்தனர்.
டிவி சேனல்கள், திரைப்படங்கள், கணினி விளையாட்டுகளில் முன் அறிவிப்போடு வன்முறையான அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. இவற்றை ஒருமுறை விளையாடுபவர்கள் அதிலுள்ள சுவாரசியத்திற்காக திரும்ப விளையாடுவார்கள். இப்படி வெற்றியடைந்த திரைப்படங்கள், விளையாட்டுகள், டிவி தொடர்கள் ஏராளம் உண்டு. இத்தகைய படங்களைப் பார்ப்பவர்கள் மனநிலை எப்படி இருக்கும்? வன்முறையால் கவர்ந்திழுக்கப்பட்டு குற்றங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு உண்டா? உளவியலாளர்களைப் பொறுத்தவரை பொழுதுபோக்காக வன்முறையைப் பார்ப்பவர்கள் தங்கள் மனதில் உள்ள வன்முறை உணர்வை தீர்த்துக்கொள்கிறார்கள். அது ஒரு வடிகாலாக அமைகிறது என்று கூறுகின்றனர். இதை கதார்சிஸ் என்று குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலையை ஆல்பர்ட் பாண்டுரா ஏற்கவில்லை. பிறரைப் பார்த்து முன்மாதிரியாக கொண்டு வன்முறையில் குழந்தைகள் இறங்குகிறார்கள் என்ற கோட்பாட்டைக் கூறியவர், மேற்சொன்ன கருத்தை ஆதரித்தால்தான் ஆச்சரியம். சமூக அறிவுத்திறன் சார் கோட்பாடு, ஆளுமை கோட்பாடு, சிகிச்சை முறைகள் ஆகியவை ஆல்பெர்டின் பங்களிப்பு. குண இயல்பு சார்ந்த கோட்பாடுகள், அறிவுத்திறன் கோட்பாடுகள் ஆகிய இரண்டுக்கும் இடையில் பாலமாக அமைந்த கோட்பாடுகள் என இவரைக் கூறலாம்.
கவனம், நினைவகம், ஊக்கம் ஆகியவற்றைப் பற்றிய ஆய்வுகளை ஆல்பெர்ட் செய்து வந்தார். மக்கள் தகவல்களை எப்படி பெறுகிறார்கள், அதை எப்படி பரிசீலித்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அறிய முனைந்தார். இந்த காரணத்திற்காகவே உலகில் செல்வாக்கான உளவியலாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
கருத்துகள்
கருத்துரையிடுக