திராவிட இயக்கம், கட்சி ஆகியவற்றின் போராட்டம் நிறைந்த நெடிய சமூகநீதிப் பயணம்!
தெற்கிலிருந்து ஒரு சூரியன்
இந்து தமிழ்திசை ஆசிரியர் குழு - அசோகன், கே.கே மகேஷ், சமஸ், ரங்காச்சாரி, ஏஎஸ் பன்னீர்செல்வம்
இந்து தமிழ்திசை, சென்னை
திராவிட இயக்கத்தின் செயல்பாடு, திமுக அரசியல் அதிகாரம் பெற்று செய்த சாதனைகள், அதன் பிரச்னைகள், பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி என மூன்று தலைவர்களின் ஆளுமை, தமிழ்நாட்டின் தனித்துவம், திராவிட ஆட்சியில் நடைபெற்ற சமூகநீதி திட்டங்கள் என ஏராளமான தகவல்களைக் கொண்டதாக நூல் உருவாகியிருக்கிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால், இப்படியான நூலை உருவாக்கியிருப்பது சமூகநீதிக்கு எதிராக இருந்த பார்ப்பன பத்திரிகைக் குழுமம் என்பதுதான். திராவிட இயக்கத்திற்கு ஆதரவாக நின்ற பத்திரிகைகளோ, பத்திரிகையாளர்களோ கூட இப்படியான நூலை தொகுக்கவில்லை என்பது வருத்தமாக உள்ளது. எதிர்க்குழுவோ, ஆதரவான குழுவோ திராவிட இயக்கம் சார்ந்து கருணாநிதி அவர்களை புத்தக அட்டையாக போட்டு நூல் ஒன்று தயாராகிவிட்டது. நூல் எப்படியிருக்கிறது என்று பார்ப்போம்.
நூல் தொடக்கத்தில் நீதிக்கட்சி, பெரியாரின் சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம் என பல்வேறு கட்டுரைகள் வழியாக தமிழ்நாட்டில் உள்ள வளங்கள் எவை, அவற்றை மாகாணமாக இருந்த காலம்தொட்டு மாநிலங்களாக மாறிய காலம்வரை எப்படி அரசுகள் பயன்படுத்தின என விவரிக்கப்பட்டுள்ளது. தேர்தலை ஏற்காமல் சமூக இயக்கமாக பெரியார் செயல்பட்டாலும், அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோர் அரசியல் அதிகாரத்தை மக்கள் வாக்குகள் மூலமாக பெற்று மாநில அரசுக்குள்ள குறைந்த அதிகாரங்களை வைத்து வளர்ச்சியை நோக்கி தமிழ்நாடு எப்படி நகர்ந்தது என்பதை அறியும்போது ஆச்சரியமாகவே உள்ளது.
அதுவும் மாநில முதல்வர்கள் தேசியக்கொடியை ஏற்றும் உரிமையைப் பெற கருணாநிதி அவர்கள் போராடியிருக்கிறார்கள். மாநில சுயாட்சி என முரசொலி மாறன் நூல் எழுதியிருக்கிறார். இதே கருத்தை சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு உறுதியாக செயல்பட்டது அண்ணா, கலைஞர் ஆகிய இருவரும்தான் என கட்டுரைகள் தெளிவாக விளக்குகின்றன. இதுபற்றிய கட்டுரைகள் திராவிட நாடு நாளிதழில் வெளியாகியுள்ளது. பெரியாருக்கு குடிஅரசு போல, அண்ணாதுரை அவர்களுக்கு திராவிட நாடு நாளிதழ் கருத்துகளை சொல்ல உதவியுள்ளது. கலைஞர்,முரசொலி என்ற நாளிதழை கட்சிக்கானதாக தொடங்கி நடத்தினார். இந்த நாளிதழை வீழாமல் எப்படி காப்பாற்றினார் என்பது தனி கட்டுரை. பார்ப்பனர்களின் கையில் இருந்த ஊடகங்கள், எப்படி திமுகவை திராவிட இயக்கங்களை இழிவுபடுத்தின, அழிக்க முயன்றன என்பதும் நாளிதழ் தொடர்பான கட்டுரைகளில் விவரிக்கப்பட்டுள்ளது.
இன்று இணையத்தில் திமுக பற்றிய ஏராளமான மூடநம்பிக்கைகள், வதந்திகள், இழிவு, அவதூறுகள் பரப்பப்படுகின்றன. அவை அனைத்திற்கும் தெற்கிலிருந்து ஒரு சூரியன் நூல் தெளிவான பதில்களை வழங்குகிறது என உறுதியாக கூறலாம். பல்வேறு அணைகள், நீர்ப்பாசன திட்டம், பெண்களுக்கான சொத்துரிமை, சுயமரியாதை திருமணம், இட ஒதுக்கீடு, முஸ்லீம் மக்களுக்கான மேம்பாட்டு திட்டங்கள், கல்விக்கூடங்கள் அமைத்தது, பெரியாரின் நினைவாக சமத்துவபுரம் கட்டியது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை செயல்படுத்தி இன்றுவரை நெடிய போராட்டம் நடைபெற்றுவருவது என நிறைய தகவல்களை கட்டுரைகள் வழியாக வாசிக்க முடிகிறது. எத்தனையோ விஷயங்களை போராடிப் பெற்று நீர்வளம் குறைந்திருந்தாலும் தொழில்வளம், வேளாண்மையில் வளர்ச்சி கொண்ட மாநிலமாக மாறியிருக்கிறோம் என்பது ஆச்சரியமூட்டுகிறது. இவற்றுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை தெரிவித்தபடி டெல்லி இருந்திருக்கிறது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.
கருணாநிதி ஆட்சித்தலைவராக இருந்து செயலாற்றிய திட்டங்கள், அவரின் செயல்பாடு பற்றிய செய்திகளை உடன் இருந்தஅதிகாரிகள், பணி செய்த உதவியாளர்கள் கூறியிருக்கிறார்கள். அதேசமயம் தனிப்பட்ட மனிதராக எப்படி என்பதையும் ஓரளவுக்கு அறிய முடிகிறது. கட்சியைச் சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மதித்து பேசுவது, குறைகளைக் கேட்பது என இயங்கி வந்திருக்கிறார். கருத்தியல் ரீதியாக வேறுபட்டாலும் கூட மதவாத கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து படுக்கையில் இருந்தபோது கலைஞர் சென்று பார்த்திருக்கிறார். இதுபோன்ற காட்சிகளை இனி காண்பது கடினம்.
கூட்டணிக்கட்சி, எதிர்க்கட்சி என யாராக இருந்தாலும் கோரிக்கைகளை கவனித்து கேட்டு நடவடிக்கை எடுப்பவராக கலைஞர் இருந்திருக்கிறார் என்பதை விசிக ரவிக்குமார் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். முரசொலி மாறன், கருணாநிதி என இருவருக்குமிடையே உள்ள உறவு நெருக்கமானது. இருவரின் நெருக்கம், சண்டை பற்றிய கட்டுரைகள் வாசிக்கும்போது நெகிழ்ச்சி தரக்கூடியதாக உள்ளது.
அண்ணா அறிவாலயம் உருவாக்கும் போது அதிமுக முதல்வர் உருவாக்கிய தடைகள், பிரச்னைகள் பின்னர் அதைப்பற்றி சட்டமன்றத்தில் விவாதம் எழுப்பி தீர்த்த விவகாரம் படிக்கும்போது திகைப்பாகவும் நெகிழ்ச்சியூட்டுவதாகவும் உள்ளது. அறிவாலயத்தில் என்னென்ன பகுதிகள்உள்ளன, அதில் பணியாற்றுபவர்கள் யார் என்பது போன்ற தகவல்களும் சிறப்பானவை. எழுத்தாளர் இமையம், பதவிகள் இல்லாதபோதும் கட்சிக்காரராக உணர்வது பற்றி கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அதை தொண்டர்கள் பார்வையிலான கருத்தாக கருதலாம்.
கட்டுமானம் என்பதை யார் வேண்டுமானாலும் உருவாக்க முடியும், ஆனால், அதைக் கலைப்பூர்வமாக உருவாக்குவது, அதில் சந்தேகம் இருக்கும்போது கேள்விகள் கேட்பது என கருணாநிதி செயல்பட்டிருக்கிறார். குறிப்பாக வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமரி வள்ளுவர் சிலை ஆகியவற்றின் வடிவமைப்பு பற்றிய கட்டுரைகள் படிக்கும்போதே உற்சாகம் தருபவை. சென்னையில் சிம்சன் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சட்டமன்ற கட்டிடம் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டாலும் அதை மருத்துவமனை என யாராலும் கட்டுமானத்தைப் பார்த்து கூறிவிடமுடியாது. தனித்துவமான அழகியல் அதில் உள்ளதை எவரும் உணர முடியும்.
கடவுள் மகிழ்ச்சியடைவார்,எங்கள் கட்சிக்கு வாக்களியுங்கள் என மதவாத தீவிரவாத கட்சி பிரசாரம் செய்து வருகிறது. இந்த நேரத்தில் திராவிட இயக்கம்,சித்தாந்தம் சார்ந்து தளர்ச்சியைக் கொண்டுள்ளது. அது பல்வேறு பிரச்னைகளிலும் எதிரொலிப்பதை இடதுசாரிக் கட்சித் தலைவர் நல்லக்கண்ணு, அமரர் முரசொலி செல்வம் ஆகியோர் தங்களது கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்து குழுமம் தேசிய அளவில் நாளிதழை ஆங்கிலத்தில் கொண்டு செல்வதால், இந்த நூலில் பல்வேறு மாநில பத்திரிகையாளர்களும் தமிழ்நாட்டைப் பற்றி அதன் கொள்கைள், மாநில சுயாட்சி பற்றி கருத்துகளை தெரிவித்துள்ளனர். குறிப்பாக மாநில உரிமைகளுக்காக மன்னார் குழு அமைத்து பரிந்துரைகளை ஒன்றிய அரசுக்கு கொண்டு சென்ற முயற்சி எந்த மாநிலங்களும் செய்யாத ஒன்று. இதெல்லாம் கலைஞர் கருணாநிதியை மாநில நலன்களுக்காக பாடுபட்ட உரிமைகளை விட்டுக்கொடுக்காத போராளியாக நிலைநிறுத்துகிறது. காஷ்மீர், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் கருணாநிதியை மாநில நலனுக்காக பாடுபட்ட அயராத போராளியாகவே பார்க்கிறார்கள். தங்கள் மாநிலங்களுக்கு அப்படியான அரசியல் போராளி கிடைக்கவில்லை என வருத்தத்தை கட்டுரைகளில் பதிவு செய்துள்ளனர்.
இன்று இந்தியா சர்வாதிகாரம் கொண்ட அதிபர் ஆட்சியை நோக்கி சென்று வருகிறபோது, மாநிலங்களின் சுயாட்சி பற்றி பேசுவது வினோதமாக தோன்றலாம். ஆனால், மாகாணமாக இருந்து மாநிலமாகி குறைந்த அதிகாரங்கள் கொண்டுள்ளபோது திட்டங்களை எப்படி நிறைவேற்றுவது என யோசித்த அரசியல்வாதிகளில் அண்ணாதுரையும், மு.கருணாநிதியும் முக்கியமானவர்கள். பெரியார் திரைப்படங்களை வெறுத்தாலும், அவரின் வழியில் வந்த அண்ணா, கருணாநிதி என இருவருமே தமது பேனாவால் திரைப்படங்களைப் பயன்படுத்தி தேர்தல் களங்களிலும் கருத்துகளை பிரசாரம் செய்து வெற்றி கண்டனர்.
பிரதமர்களில் விபி சிங்கை கலைஞர் நெருக்கமானவராக நினைத்திருக்கிறார். இன்று மு க ஸ்டாலின் அவர்கள், விபி சிங்கிற்கு சிலை அமைத்து மரியாதை செலுத்தியிருப்பதை இட ஒதுக்கீட்டிற்கான மரியாதையாக கூறலாம். மண்டல் கமிஷன் பரிந்துரைகளை விபி சிங் நடைமுறைக்கு கொண்டுவந்தார். ஆட்சி குறைந்த காலமே இருந்தாலும் கூட அவர் செய்த இச்செயல், வடக்கில் இழிவை தேடித்தந்து ஆட்சி இழப்பை நோக்கி கொண்டு சென்றாலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, அவர்களுடைய வாழ்வில் ஒளியை ஏற்றி வைத்தது. அதை யாரும் மறுக்க முடியாது.
மத்தியில் உள்ள காங்கிரசோ, மதவாத கட்சியோ எது ஆட்சியில் இருந்தாலும் மாநில உரிமைகளை பறித்து மையப்படுத்திய அதிகாரத்தை நிறுவுவதிலேயே குறியாக இருந்துள்ளனர். இதை அறியும்போது, அக்காலகட்ட திராவிட ஆடசியாளர்கள் எந்தளவு போராடி மாநிலத்தை வளர்ச்சியை நோக்கி கொண்டு வந்திருக்கிறார்கள் என அறியமுடிகிறது. திமுக ஒரு கட்டத்தில் தனது ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள மதவாத கட்சியுடன் கூட்டணி சேர்கிறது. நூலில் ஏனோ அந்த இடம் தயக்கத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளதாக தோன்றுகிறது. முஸ்லீம் கட்சிகள், திமுகவை அவநம்பிக்கையுடன் பார்த்த காலகட்டம் அது. இதற்கடுத்து, விடுதலைப்புலிகளை ஆதரித்து, அதனால் தேர்தல் தோல்வியை திமுக எதிர்கொள்கிறது. தனிநாடு கோரிக்கை, அவசரநிலை காலகட்டம் என இருமுறை ஆட்சி கலைக்கப்பட்டு பிறகு தேர்தல் மூலம் திமுக மீண்டெழுந்து வந்தது. இந்த காலகட்டத்தில் திமுக தலைவர்களுக்கு நிச்சயம் எளிதாக இருந்திருக்காது.
வடக்கைப் பற்றி தெற்கு அறியும், ஆனால் தெற்கைப் பற்றி வடக்கு அறியவில்லை என ஒரு வாசகம் நூலில் கூறப்படுகிறது. தெற்கில் இருந்து வடக்கை பல்வேறு விஷயங்களை செய்யவைத்த ஆளுமைகளைப் பற்றி தெளிவாக அறிய உதவுகிற நூல் இது. திராவிட இயக்கங்களைப் பற்றிய ஆவணம் போல என்று கூட கூறலாம். மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு, நவீன இந்திய சிற்பிகள் உருவாக்கிய ஜனநாயக அமைப்புகள், மதவாத இயக்கத்தினால் கைக்கொள்ளப்பட்டு நொறுங்கி வரும் நேரத்தில் நாம் எதில் கவனம் செலுத்தவேண்டும் என அறிவறுத்துகிற நூலாக தெற்கிலிருந்து ஒரு சூரியன் உள்ளது.
கோமாளிமேடை குழு
https://store.hindutamil.in/products/therkkilirunthu-oru-suriyan/1356991000000039033
கருத்துகள்
கருத்துரையிடுக