பாயும் பொருளாதாரம் முடிவுகளும் விளைவுகளும்

 

பாயும் பொருளாதாரம்

முடிவுகளும் விளைவுகளும்

மதவாத கட்சிக்கு வாக்களித்துவிட்டு சிறுபான்மையினரின் வீடு கோவில்களை புல்டோசர் இடிப்பதை சிரித்துக்கொண்டே வேடிக்கை பார்ப்பது போன்றதல்ல. ஒருவர், குறிப்பிட்ட பொருளை கடையில் வாங்கிவிட்டு அதன் மதிப்பை அதிகமாக கருதிக்கொள்வதுண்டு. சிலர் ஒருவர் வைத்துள்ள பொருளுக்கு ஆசைப்பட்டு அதிக விலை கொடுப்பதாக சொன்னாலும் சம்பந்தப்பட்டவர் அதெப்படி இதை நீ வெலைக்கு கேட்கலாம். எனக்கு பிடிச்ச பொருள். விற்கமாட்டேன் என்று கூறுவதுண்டு. சூதாட்டம் விளையாடுவதைக் கூட மனிதர்களின் முடிவு தொடர்புடையதாக சொல்லலாம். இன்று ஆன்லைன் ரம்மியை ஒன்றிய, மாநில அரசுகளே ஊக்குவிக்கின்றன. சில மாநிலங்களில் லாட்டரி குலுக்கல் நடைமுறையில் உள்ளது. இதில் எல்லாம் வெல்வது அரிதிலும் அரிதாக நடைபெறுவது. இதன் அர்த்தம் பெரும்பாலும் நடக்காது என்பதுதான்.

வானிலை ஆய்வு மையம், பகல் வெயில் பளிச்சென அடிக்கும் என்று அறிக்கை வெளியிடும் அன்றைக்கு அடைமழை பெய்வது போல்தான். எதையும் கணிக்க முடியாது. சந்தையில் பங்குகள் ஓகோவென உயரத்திற்கு செல்லும் என்று வணிக டிவி சேனல்கள் ஒப்பாரி வைக்கும். அந்த சமயம் பார்த்து ரூபாயின் மதிப்பு பாதாளத்திற்குப் பாயும். சீனாவின் எல்லை அபகரிப்புக்கு நடவடிக்கை எடுக்கவேண்டிய அமைச்சர், சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்துகொண்டிருப்பார். ஆட்சித்தலைவர், மேப்பில் புது நாட்டைக் கண்டுபிடித்து அங்கு சுற்றுலா சென்றிருப்பார். டெக்கன் கிரானிக்கலில் எப்போதும்போல ஐயர் ஒருவர் கைக்கட்சி என்னதான் செய்கிறது என ஊளையிட்டு கடிதம் எழுதியிருப்பார். இதையெல்லாம் எப்படி ஏன் நடக்கிறது என துல்லியமாக கணிக்க முடியாது.

பொதுவாக இருகடைகள் அருகருமே அமைந்திருக்கிறது என வைத்துக்கொள்வோம். இரண்டில் ஏதாவது ஒன்றில் வியாபாரம் நடக்கும். இந்தக்கடை இல்லையா அந்தக்கடை என செல்வார்கள். இதனால்தான் குளிர்பானங்களை அடுக்கிவைத்துள்ள பதனப்பெட்டிகள் அருகருகே வைக்கப்பட்டுள்ளன. ஐஸ்க்ரீமை எடுத்துக்கொள்வோம். ஒன்றின் விலை இருபத்தைந்து இன்னொன்று ஐம்பது என்றால் அனைவரும் விலை மலிவானதையே தேர்ந்தெடுப்பார்கள். இப்படி விலை மூன்றாக பிரிக்கப்பட்டால் குறைவு, மத்திய விலை,அதிக விலை என மூன்றில் மத்திய விலையில் உள்ளதை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

மக்களுக்கு தேர்ந்தெடுக்க வாய்ப்பு கொடுத்தால் அவர்கள் அதில் ஆரோக்கியமான பொருட்களை தேர்ந்தெடுக்க கூடும். அந்த வகையில் ஒருவரின் பார்வைமட்ட அளவில் காய்கறிகளை வைத்துவிட்டு பதப்படுத்தப்பட்ட பொருட்களை பிஸ்கெட்டுகளை கீழாக வைத்தால் மக்கள் காய்கறிகளை, பழங்களை அதிகம் தேர்ந்தெடுப்பார்கள். வறுத்த பொரித்த உணவுகளின் விற்பனை குறையும்.

ஐடிசி போன்ற நிறுவனங்கள் தங்களின் பிஸ்கெட் பாக்கெட்டை பெரிதாக போட்டு பத்து ரூபாய்க்கான பிஸ்கெட்டை விற்கிறார்கள். பாக்கெட்டைப் பார்த்தால் இருபத்தைந்து ரூபாய் மதிக்கத்தக்க அளவு தெரியும். ஆனால் பத்து ரூபாய்க்கு பிஸ்கெட்டின் அளவு, க்ரீம் என அனைத்தையும் குறைத்து வைத்து விற்கிறார்கள். இதில் வேறு இருபத்தைந்து சதவீதம் உபரி என போட்டிருக்கிறார்கள். பிஸ்கெட் மேலுள்ள கவர் பெரிதாக உள்ளதைக் கூறுவார்கள் போல...

ஆட்களை நிறுத்தியும் கூட ஸ்வீப் ஷாட் அடித்து இயல்பான கிரிக்கெட்டை ஆடி டீமை தெருவில் நிறுத்தும் ரிஷப் பாண்ட் போல மிகச்சிலர்தான் இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாருமே பாதுகாப்பாக விளையாடுவோமே என நினைக்கும் வாஷிங்டன் சுந்தர் போன்றவர்கள்தான். எந்தளவு ஒருவர் ரிஸ்க் எடுக்கிறாரோ அந்தளவு அவருக்கு அதில் பயன் கிடைக்கும். சலூனில் எப்படி வெட்டவேண்டும் என்று கேட்டாலும் பலருக்கும் முடிவெடுக்க தெரியாது. என்னிடம் வழக்கமாக சலூன்காரர் எப்படி வேண்டும் என்பார். நான் என்ன சொன்னாலும் அவருக்கு தெரிந்தது வட்ட கிராப்தான். இருந்தாலும் சலித்துக்கொள்ளாமல் கேட்பார். ஆங்கிலமொழியே தெரியாவிட்டாலும் நம்பிக்கை மட்டும் எவரெஸ்ட் உயரம் இருந்தால் எப்படியிருக்கும்? கோளாறாகத்தான இருக்கும்.

பரிசுகள் அல்லது இழப்பு என இரண்டையும் கூறினால் மக்கள் இழப்பை முக்கியத்துவம் கொடுத்து பார்க்கிறார்கள். ஒரு பெட்டியில் பத்து ரூபாய் இருக்கிறது. இன்னொரு பெட்டியில் ஆயிரம் ரூபாய் இருக்கிறது. அதேசமயம் அப்படி இல்லாமலும் போகலாம் என எழுதிவிட்டால், மக்கள் பத்துரூபாயைப் பெறத்தான் அதிகம் முயல்வார்கள். ஏனெனில் அதில் உறுதித்தன்மை உள்ளது. அதேசமயம் இழப்பின் வாய்ப்பிற்கு அதிக வேறுபாடு இல்லை என்றால் மக்கள் இரண்டாவது வாய்ப்பை முயல்வார்கள். அடிப்படையில் மக்கள் பணத்தை இழக்க விரும்புவதில்லை.

ஒரு விஷயம் வெற்றி பெற்றால், மக்கள் கூட்டம் செம்மறி ஆடுகள் போல ஒன்றையே செய்கிறதோ அது அனைத்திற்கும் பொருந்தும். ஆடுகளை மேய்க்கிறார்கள் என்றால், அதற்கென விளைச்சல் நிலம் வேண்டும். தீனிப்பயிர்களை அதிகம் பயிரிடாமல் கிராமத்தில் உள்ள அனைவரும் கால்நடைகளை வாங்கித் தள்ளினால் உணவுக்கு திண்டாட வேண்டிவரும். மக்கள் தொடக்கத்தில் லாபம் சம்பாதித்தாலும் இறுதியாக நஷ்டத்தோடு உட்கார வேண்டியிருக்கும்.


https://substack.com/profile/5467650-ar/note/c-83888643











கருத்துகள்

பிரபலமான இடுகைகள்