உலகிற்கு சிந்தனையால் வழிகாட்டும் சீன செவ்வியல் சிந்தனையாளர்களின் கருத்துகள்!
ஷி ச்சின்பிங் - ஹவ் டு ரீட் கன்பூசியஸ் அண்ட் அதர் கிளாசிக் திங்கர்ஸ்
ஸான் பாங்சி
சிஎன் டைம்ஸ் புக்ஸ்
2013 - 2014 என இரண்டு ஆண்டுகளில் சீன அதிபர் உள்நாடு, வெளிநாடுகளில் பல நூறு பேச்சுகளை பேசியுள்ளார். அப்படி பேசியுள்ளதில் சீன இலக்கிய எடுத்துக்காட்டுகள் அதிகம் இருந்தன. இருநூறுக்கும் மேற்பட்ட சீன பழமொழிகள் நூலில் இடம்பெற்றுள்ளன. அவற்றை ஷி எங்கே, எப்படி, என்ன பொருளில் சொன்னார் என நூலாசிரியர் விவரித்துக் கூறியிருக்கிறார்.
நூலில் உள்ள மேற்கோள்கள் கல்வி, அரசு, அரசியல் என பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒரு பிரிவுக்கு இருபத்தைந்து முதல் முப்பத்தைந்து வரை மேற்கோள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேற்கோள்களை கூறிவிட்டு அதை அதிபர் ஷி எப்படி பயன்படுத்தினார், என்ன பொருளில் என விளக்கிவிட்டு விரிவான விளக்கத்திற்கு செல்கிறார்கள். இப்பாதையில் நாம் பழமொழியை, கருத்தை சொன்னவர் பெயர், அவரது தகவல்களை சுருக்கமாக அறிய முயல்கிறது.
அறிவுக்கூர்மை எளிதாக மரணத்தை கையோடு கூட்டி வரும் என்பதுபோல, பெரும்பாலான சீன சிந்தனையாளர்கள், தத்துவவாதிகள் தாம் சொன்ன கருத்துக்காக செயல்பாட்டிற்காக சிறைவாசம் அனுபவித்து பிறகு, தூக்கிலிடப்பட்டுள்ளனர். இதை அறியும்போது வருத்தமாக இருந்தது. அரசர்களைப் பொறுத்தவரை யாரை ஆதரிக்கிறோமோ அதைப் பொறுத்து நம் எதிர்காலம் நிர்ணயிக்கப்படும். இதில் பொய்க்குற்றச்சாட்டில் தூக்கிலிடப்பட்ட சிந்தனையாளர்களும் உண்டு. இன்று சீன அரசு கன்பூசியஸை கொண்டாடி சீன மொழியைக் கற்றுத்தரும் மையங்களை உலக நாடுகளில் அமைத்து வருகிறது. ஆனால், அவரே தனது கருத்துகளுக்காக நாடெங்கும் நாடோடியாக அலைந்து திரிந்து உயிர் பிழைத்தவர்தான். தனது சிந்தனைகளை வாய்ப்பு கிடைத்தபோது செயல்படுத்தி மக்களின் அன்பை அங்கீகாரத்தை பெற்றவர் கன்பூசியஸ்.
இந்த நூல் ஷி ச்சின்பிங் மேற்கோள் காட்டிய சீன சிந்தனையாளர்களைப் பற்றியது என்பதால் அரசியல் சார்ந்த பழமொழிகள் சற்று தீவிரத்தன்மையுடன் உள்ளன. முதல் பழமொழியாக, ஒரு பிரதேசத்தில் நடந்த பிரச்னையை தொலைநோக்காக பார்த்தால்தான். அதன் வீரியம் தெரியும்.என கூறுகிறார். பல்வேறு மக்கள் இனங்கள் இருந்தாலும் அவர்களை ஒத்திசைவாக அணுகி எதிரியாக கருதாமல், இனப்படுகொலை செய்யாமல் அனைவருக்குமான நலவாழ்வுத் திட்டங்களை தீட்டவேண்டு்ம் என கூறப்படுகிறது.
தொன்மைக்கால சிந்தனையாளர்கள் பலரும் அரசு பதவிகளில், அல்லது அரசின் ஆலோசகர்களாக இருந்து பல்வேறு தத்துவங்களை, சிந்தனைகளை நூலாக்கி தொகுத்து இருக்கிறார்கள். நூலில் அவை பற்றிய தெளிவான விவரங்களும் உள்ளன. வாசகர்கள், அவற்றைத் தேடியும் படிக்கலாம்.
பொதுவான சுயமுன்னேற்ற சிந்தனைகளை சன்பூசியஸ் கூறியதாக அதிபர் ஷி கூறியிருக்கிறார். குறிப்பாக வெற்றுப்பேச்சு பேசிவிட்டு செயலாக செய்யாமல் இருப்பது, செய்யமுடியாத ஒன்றுக்கு வாக்குறுதி கொடுப்பது, வாக்குறுதியை காப்பாற்றாமல் கைவிடுவது ஆகியவற்றை கடுமையாக கண்டித்து பேசியிருக்கிறார். வாக்குறுதியை, சொன்ன சொல்லைக் காப்பாற்றாதவர்களின் ஆளுமை பலவீனமாகிவிடும் என விளக்கம் கொடுக்கப்படுகிறது.
நாட்டிற்கு ஒற்றை பெரும்பான்மை மதமோ, இனமோ பலம் தராது என்பதை உணவுக்கு நீரே சுவை தந்துவிடாது என சுவோ கியுமிங் என்ற சிந்தனையாளர் குறியீடாக சொல்லிச் சென்றிருக்கிறார். பழமொழியை திரும்பத் திரும்ப படிக்கும்போது அர்த்தம் புரிபடுகிறது.
உள்நாட்டுப் போர்களால் பலவீனமடைந்து கொண்டுள்ள நாடு, வெளிநாட்டு உறவுகளை வளர்த்துக்கொள்ள முடியாது என லூ ஷெங்சியாங் என்ற சீன தத்துவவியலாளர் கூறியிருக்கிறார். உள்நாட்டில் சாதி, மதம், இனம் என தேர்தல் ஆதாயத்திற்காக மூட்டிவிட்ட நெருப்பில் மக்கள் சாகும்போது அயல்நாட்டு உறவில் மட்டும் என்ன வந்துவிடப்போகிறது. ஏதாவது கேள்வி கேட்டாலும் கூட முந்தைய ஆட்சியாளர்கள்தான் காரணம் என கூறிவிடலாம். அப்படியில்லையென்றால், இப்போது ஆட்சியிலிருப்பது நீங்கள்தானே என்று மக்கள் கூறினால் அரசின் கையாலாகத்தனம் வெளியே தெரிந்துவிடலாம் அல்லவா?
நாட்டை ஆள்பவர் சிறந்த மனிதராக ஆளுமை கொண்டவராக இருந்தால் மக்களிடையே உள்ள பன்மைத் தன்மையில் இணக்கம் காண்பவராக, ஒற்றுமையை உருவாக்குபவராக இருப்பார். ஆதாயம் பார்க்கும் மோசமான ஆட்சியாளர், மக்களிடையே பூசல்களை தூண்டிவிட்டு ஒற்றுமையைக் குலைத்து பயன் பெறுபவராக இருப்பார் என கன்பூசியஸ் கூறியுள்ள கருத்து முக்கியமானது. இது, உலகில் வலதுசாரி மதவாத சக்திகள் வலிமை பெறுவதை சுட்டிக் காட்டுவதைப் போலவே உள்ளது.
நூலில் மாவோ கூறியுள்ள கருத்துகள் சற்று கவிதைத்தன்மை கொண்டவை. அவை ராணுவ வீரர்களின் தியாகத்தையும் மக்களின் ஒற்றுமையையும் விடுதலைப் போராட்டத்தையும் பாராட்டுபவை. ஓரிடத்தில் மாவோ, மலை அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது என்கிறார். பொதுவாக மலைக்கு ஏது அலங்காரம், செடியா, கொடியா, மரக்கன்றுகளா, மலையைத் தொட்டு நிற்கும் மேகங்களாக எவையுமில்லை. துப்பாக்கியால், வெடிகுண்டுகளால் துளைக்கப்பட்ட தடங்கள் என்பதையே மாவோ, மலை மீதுள்ள அலங்காரமாக காண்கிறார்.
சொத்து, நீதி, நேர்மை, பெருமை ஆகியவற்றை தவறவிடும் நாடு பிழைத்திருக்காது என சிந்தனையாளர் குவான் சொல்கிறார். உண்மையில் இப்படி கூறுவதற்கான காரணங்களை அவர் சீன பேரரசுகளின் வரலாற்றில் அடையாளம் கண்டிருக்க வேண்டும். ஒரு நாட்டின் அதிபர், உள்நாட்டு வெளிநாட்டு பயணங்களில் சீன கலாசாரம் சார்ந்த சிந்தனையாளர்கள், தத்துவவாதிகளின் படைப்புகளை பேசுவது என்பது திட்டமிட்டு நடத்தப்படும் நாடகம் அல்ல.
சீன அதிபர் ஷி ச்சின்பிங், கிராமத்தில் பல்வேறு வேலைகளை செய்து வளர்ந்தவர், தொடர்ச்சியாக உள்ளூர் நாளிதழ்களில் மக்களின் பிரச்னைகளைப் பற்றி விளக்கி கட்டுரைகளை எழுதி வந்தார். சீன இலக்கியங்களை ஆழமாக வாசிக்காத ஒருவர், அவற்றை பேச்சில் குறிப்பிட்டு பேசுவது மிக கடினம். தேர்தல் ஆதாயத்திற்காக, தன்னைச் சார்ந்தவர்களின் சுயநலனுக்காக இயங்கும் ஆட்சித்தலைவர்களிடையே சீன அதிபர் ஷி மாறுபட்டுத் தோன்றுகிறார். காலத்தில் தொன்மையான கருத்தாக இருந்தாலும் அதை சமகாலத்திற்கு பொருத்தமாக கூறி விளக்குவது அருமை.
சீனக்கனவு என்பதைக் கூறிவிட்டு வெளிநாடுகளுக்கு இன்பச்சுற்றுலா செல்லாமல், முந்தைய ஆட்சியாளர்களை குறைசொல்லாமல் மக்களின் பொருளாதார வளர்ச்சிக்காக உழைப்பது சாதாரணமல்ல. சீனமொழியில் பேசுவது மட்டுமல்ல உலகம் முழுக்க கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட் என்பதைத் தொடங்கி, பல்வேறு நாட்டினரும் மொழியைக் கற்றுக்கொடுக்கும் செயல்பாட்டை பல்லாண்டுகளாக செய்துவருகிறார்.
ஒரு மொழி காலாவதியாகிவிட்டது என்றால் அதிகாரம் இருப்பதற்காக அதை மிரட்டி மக்களைக் கற்றுக்கொள்ளச் செய்வதில் எந்த பயனும் இல்லை. வழக்கொழிந்த மொழியின் பூர்வ மக்களே சாலையின் ஓரத்தில் நின்று பலகாரங்களை விற்றுப் பிழைக்கிறார்கள். அல்லது உள்நாட்டில் இடம்பெயர்ந்து அதே பலகார பாரம்பரியத்தை தொடர்கிறார்கள். சீனாவில் உள்ள தொழில் நிறுவனங்கள் பல்வேறு உலக நாடுகளுக்கு தொழிலைத் தொடங்கி வருகிறார்கள். இச்சூழ்நிலையே, சீன மொழியை பிற நாட்டினர் கற்றுக்கொள்ள உதவுகிறது. வெட்டிப்பேச்சால், சூதும் தந்திரத்தையும் கொண்டு ஆக்கப்பூர்வ மாற்றங்களை செய்ய முடியாது.
சீன அதிபர் ஷி ச்சின்பிங் தனது நாட்டு கலாசாரத்தை, பழமொழியை தனது பேச்சு வழியாக வெளியுலகிற்கு கொண்டு சென்று வருகிறார். சீனாவோ, அதிபரோ பிடிக்காது என்றாலும் சீன பழமொழிகளை, அதைக்கூறிய சிந்தனையாளர்களை அறிய நூலை வாசிக்கலாம். அந்த வகையில் நூல் சிறப்புற வடிவமைக்கப்பட்டுள்ளது.
கோமாளிமேடை குழு
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://www.amazon.co.jp/Xi-Jinping-Confucius-Classical-Thinkers-ebook/dp/B01N9D4FBM&ved=2ahUKEwiArYmkn7WKAxWQcvUHHTdXAb4QFnoECEUQAQ&usg=AOvVaw1LYUFUnC8BHFN_qi64zTdd
கருத்துகள்
கருத்துரையிடுக