மாருதி 800 காரை உருவாக்கிய கர்த்தா - ஒசாமு சுசுகி
மாருதி 800 காரை உருவாக்கிய கர்த்தா - ஒசாமு சுசுகி
அண்மையில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகனின் விருப்பமான கார் மாருதி 800. பிஎம்டபிள்யூவைத் தாண்டி மாருதி காரையே முன்னாள் பிரதமர் நம்பினார். மக்களின் காரான மாருதி 800 ஐ உருவாக்கி சாலைகளில் ஓடவைத்த ஒசாமு டிசம்பர் 25 ஆம் தேதி மறைந்தார். 1930ஆம் ஆண்டு பிறந்தவருக்கு ஒசாமு மட்சுடா என்பதான் வைக்கப்பட்ட பெயர். பின்னாளில் சுசுகி மோட்டார் கார்ப் நிறுவன குடும்பத்தில் பெண் எடுத்த காரணமாக ஒசாமு மட்சுடா மாறி ஒசாமு சுசுகி என்றானது.
இந்தியாவில் தொழில் தொடங்க முடிவெடுத்ததே ஒசாமுவின் துணிச்சலான குணத்திற்கு சான்று. அப்போது கார்களின் சந்தையே நாற்பதாயிரம் கார்கள் என்றுதான் நிலை இருந்தது. பதினான்காயிரம் பேர்களில் ஒருவர் காரை வாங்கிப் பயன்படுத்தி வந்தார்.
அன்றைய காங்கிரஸ் அரசு, மாருதி என்ற நிறுவனத்தை தொடங்கி சுசுகியுடன் கைகோர்த்து கார் ஒன்றை உருவாக்க முனைந்தது. இதற்கான ஒப்பந்தத்தில் ஆர்சி பார்க்கவா, வி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர். அன்றைய சூழலில் ஜப்பானைச் சேர்ந்த கார் தயாரிப்பு வாகனமாக சுசுகி தடுமாறிக்கொண்டிருந்தது. அப்போது இந்தியாவில் கார் தயாரிப்பு நிறுவனம் தொடங்க ஃபோக்ஸ்வேகன், ரினால்ட், ஃபியட், டைஹாட்சு ஆகிய பெரிய நிறுவனங்கள் முயன்று கொண்டிருந்தன. எனவே சுசுகி ஒப்பந்ததை விரைவுபடுத்தி, தனது முழு ஆண்டு வருமானத்தை இந்தியாவில் அரசு கூட்டுறவு நிறுவனத்தில் முதலீடு செய்ய முன்வந்தது. நிறுவனத்தில் சுசுகியின் பங்கு 26 சதவீதம் ஆகும்.
மாருதி - சுசுகி ஆகிய இரு நிறுவனங்களும் சேர்ந்து தயாரித்த மக்கள் காரான மாருதி 800யின் முதல் காரை பிரதமர் இந்திரா காந்தி, விமானசேவை நிறுவனத்தின் பணியாளரான ஹர்பால் சிங்கிற்கு வழங்கினார். அன்றைய நாளைத் தொட்டு மாருதி நிறுவனம் திரும்பி பார்க்கும் அவசியமே எழவில்லை. போட்டிகளை சமாளித்து இன்றும் மாருதி சுசுகி நிறுவனம் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இந்திய அரசு, ஜப்பானிய அரசோடு கார்களை தயாரிக்கும் நிறுவனம் பற்றி உரையாடியபோது அந்த நாட்டு அரசு சுசுகி நிறுவனத்தை பரிந்துரைத்தது. காரணம், அப்போது சுசுகி நிறுவனம் பாகிஸ்தானில் இயங்கி வந்தது. நிசான், மிட்சுபிசி, டொயோட்டா ஆகிய நிறுவனங்கள் பரிசீலனையில் இருந்தன.
மாருதி உத்யோக் என்ற நிறுவனத்தில் அரசு தனது பங்குகளை குறைத்துக்கொண்ட விவகாரம் பின்னாளில் நடைபெற்றது. குர்கானில் தொடங்கிய தொழிற்சாலைக்கு பிறகு தமிழ்நாட்டில் சென்னை, மகாராஷ்டிராவில் புனே என இரு இடங்களில் கார் தயாரிப்பு தொழிற்சாலைகளை மாருதி அமைத்தது. அலுவலக கலாசாரத்திலும் மாருதி நிறுவனம் மாற்றங்களை ஏற்படுத்தியது. அலுவலகத்தில் யாருக்கும் கேபின்களை அமைக்கவில்லை. திறந்தவெளியாக அலுவலகம் அமைய, பணியாளர்கள் இயங்கினார்கள். பலருக்கும் சீருடை வழங்கப்பட்டு, அதை உடுத்துமாறு பணிக்கப்பட்டனர். அலுவலகத்தில் அமைக்கப்பட்ட உணவகம் கூட அனைவருக்குமானது. அப்போது ஒசாமு சுசுகி கூட விமானத்தில் எகனாமி வகுப்பில் பயணித்து சென்று கொண்டிருந்தார். இப்படியான சீர்திருத்தங்களின் வழியாகவே கடும்போட்டி எழுந்த சூழ்நிலையிலும் இந்தியாவில் நாற்பது சதவீத சந்தை பங்களிப்பை மாருதி சுசுகி கொண்டுள்ளது.
இந்தியாவில் தொழில்மயமாக்கலுக்கு ஒசாமு சுசுகி பெரிய உதவிகளைச் செய்தார். கார் துறையை நவீனமாக மாற்றினார். இதன் காரணமாக அவரது உழைப்பை பாராட்டி 2007ஆம் ஆண்டு, பத்ம பூஷன் விருதை ஒன்றிய அரசு வழங்கி கௌரவித்தது.
இன்று மாருதி 800 காரைத் தயாரிப்பது நிறுத்திக்கொண்டாலும் ஆல்டோ 800 என்ற கார், மாருதி 800 போன்ற வடிவமைப்புடன் வெளிவந்துகொண்டிருக்கிறது. மாருதி 800 அழகான நான்கு பேர் உட்கார கூடிய வடிவமைப்பில் இருந்தது. காரை பழுதுபார்க்க ஏதுவான சேவை மையங்களும் முன்னமே அமைக்கப்பட்டுவிட்டதால் மற்ற கார் நிறுவனங்களை விட மாருதி வலிமையானதாக மாறிவிட்டது. உள்நாட்டு கார் நிறுவனமான டாட்டா கூட மாருதியை முந்த முடியவில்லை என்பதுதான் அதன் வெற்றிக்கான சாட்சி.
osamu suzuki man who have indias its people's car
pankaj doval@toi.com
கருத்துகள்
கருத்துரையிடுக