வணிக சந்திப்பிற்கு உணவகங்களை தேர்ந்தெடுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை என்னென்ன?

 

 

 


 


இன்று வணிக ரீதியாக கூட்டாளிகளை, ஒப்பந்தக்காரர்களை விடுதியில் சந்திப்பது இயல்பாகிவிட்டது. சிலர் எழுத்தாளர்களுக்கென தனி கபே நடத்துகிறார்கள். காபி கடைகளில் இணைய வசதியைக்கூட வழங்குகிறார்கள். வெளிநாடுகளில் நேர்காணல்களை நடத்துகிறார்கள். இப்படியான சூழ்நிலையில் ஓரிடத்தில் முக்கியமான நபரை சந்திக்கச் செல்கிறீர்கள். அப்போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும்.

ஹோட்டல்களில் முன்பதிவு செய்துவிட்டு செல்வது நல்லது. உரிமையாக குறிப்பிட்ட மேசையைக் கேட்கலாம். அங்கே உட்கார்ந்து பேசிவிட்டு சாப்பிட்டுவிட்டு டிப்ஸ் கொடுத்துவிட்டு வரலாம். பதிவு  செய்யவில்லை என்றால் சந்திப்பை உகந்ததாக அமைய வாய்ப்பு குறைவு.

ஹோட்டல்கள், உணவு, பணியாளர்களது நடத்தை பற்றிய மதிப்பீடுகளை இணையத்தில் பார்த்துவிட்டு வரலாம். சமீபத்திய விமர்சனங்களைக் கவனியுங்கள். ஓராண்டுக்கு முந்தையது வேண்டாம். குறைகள், புகார்களுக்கு எப்படி பதில் அளித்துள்ளார்கள் என பாருங்கள். நிறைய புகழ்பெற்ற உணவகங்கள் என பீற்றிக்கொள்பவர்கள் கூட குறைகளை, புகார்களை வாடிக்கையாளர் முன்வைத்தால் மௌனமாக அதை கடந்துசெல்வதை இணையத்தில் கமெண்டுகளைப் பார்த்தாலே அறியலாம். அதுபோல நிறுவனங்கள் காலப்போக்கில் தானாகவே அழிந்துவிடும். அதற்கு முன்னால் நமக்கு மன உளைச்சல் ஏற்படுத்திவிடக்கூடாது பாருங்கள். அதுவே முக்கியம்.

பத்துரூபாய் பிரியாணி தாத்தாவோ, புகாரி ஹோட்டலோ அங்கு என்ன உணவு வகைகள் சிறப்பாக பரிமாறப்படுகின்றன என்பது அங்குள்ள வாசனையை வைத்தே அறியலாம். தார்பாய் ஹோட்டல்களை கூறவில்லை. உங்களுக்குப் பிடித்த உணவு வகைகள் உள்ள ஹோட்டல்களுக்கு செல்லுங்கள். இல்லையெனில் சைவ ஹோட்டலுக்கு போய் சிக்கன் 65 கேட்டு ஏமாந்த கதையாகிவிடும்.

உள்ளூர் ஆட்கள் நிறையப் பேர் வந்து சாப்பிட்டால் சரிதான். ஆனால் சுற்றுலா பயணிகள் வந்து சாப்பிடுகிறார்கள். வெளியே பஸ் தென்படுகிறது என்றால் உணவு வகைகள் தரமாக இருக்கும் என்றெல்லாம் உறுதி கூறமுடியாது. உள்ளூர் ஆட்களைக் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

ஆள் பிடிக்கிற உணவகத்தில் நுழைந்து சாப்பிடுகிறீர்களா, மன உளைச்சலும் பொருள் இழப்புமே மிஞ்சும். அதுபோல உணவகங்களை தவிர்த்து விடுங்கள். நல்ல உணவுக்கு எங்கிருந்தாலும் ஆட்கள் வருவார்கள். பணியாளர்கள் சிலர் முரடர்களாக இருப்பார்கள், மரியாதைக்குறைவாக பேசுவார்கள். அறிகுறிகள் தெரிந்தால் உடனே அங்கிருந்து தப்பி விடுங்கள். சிலர், நிறைய உணவுப்பொருட்களை கூறுவார்கள். உங்களுக்கு அது தேவையா என்று பார்த்து வாங்குங்கள். இல்லையெனில் தின்ற சோற்றுக்கு கடன் வாங்கி கட்டும் வம்பிற்கு ஆளாகிவிடுவீர்கள். நம் நாட்டு நிதியமைச்சர் வேறு, நாட்டிலுள்ள எவனும் நிம்மதியாக சோறு தின்னக்கூடாது என கச்சைகட்டிக்கொண்டு வரியை வேறு ஏற்றிவருகிறார்.

சில உணவகங்களில் மொச்சை கொட்டை பல்லழகி என பாட்டைப் போட்டு தலைவலியை வம்படியாக வரவழைத்து அதை ஒற்றைத் தலைவலியாக மாற்ற முயல்வார்கள். டிவி இருந்தாலும் இப்படித்தான். மென்மையான இசை இருப்பது சரி. உணவு அருந்தும்போது, பேசும்போது சந்தையில் இருப்பது போன்ற சூழல் இருந்தால் கஷ்டம் அல்லவா?

சிலர் காசுக்கு சோறு வாங்கினாலும் கூட அண்டிக் கிடக்கும் நாய்க்கு சோறு வைப்பது போல லொள்ளு பேசுவார்கள். அப்படியான உணவகங்களில் எதுவுமே சரியாக இருக்காது. எனவே, நம் மனதிற்கு உணவகத்திற்கு போனதும் என்ன தோன்றுகிறதோ அதுதான் விஷயம். உடனே நிலைமை சரியில்லை என்றால் தப்பித்து விடுங்கள்.

பிசினஸ் ஸ்பாட்லைட்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்