பாயும் பொருளாதாரம் - செயலின் நோக்கமும் கிடைக்கும் பரிசும்
பாயும் பொருளாதாரம்
செயலின் நோக்கமும் கிடைக்கும் பரிசும்
பெற்ற தோல்வியை எதிர்கொள்ள முடியாமல் சமாளிப்பதை இந்தியாவில் அனைவருமே செய்பவர்கள்தான். இந்திய அணி கோப்பையைத் தவறவிட்டால், மற்ற நாட்டு ஊடகங்கள் போல உதவாக்கரை பயல்கள் என எழுத முடியாது. எனவே, இதயங்களை இந்திய அணி வென்றது என எழுதி ஆறுதல் தேடுவது வழக்கம். அணியில் உள்ளவர்களுக்கு இதனால் எந்த நன்மையும் கிடையாது. அவர்கள் அப்படியே குறைகள் குறையாமல் ஆடுவார்கள். ஒரு ரன்னுக்கு ஓடி வரும்போது கூட ஈகோ பார்த்து இளம் வீரனை அவுட் ஆக்கி கௌரவம் பார்ப்பது இப்படித்தான் உருவாகிறது. அதாவது குணநலன். ஆட்டோவில் ஒரு நகைப்பை கிடைக்கிறது. அதை ஓட்டுநர் வைத்துக்கொள்ள நினைக்கிறார் இதனால் அவருக்கு, வாங்கிய கடனைத் தீர்க்க முடியும், ஆனால், பொருளை தொலைத்தவர் வழக்கு பதிந்தால் காவல்துறையில் மாட்டிக்கொள்ள நேரும், அதேநேரம் பிறர் பொருளை திருடியதால் குற்றவுணர்ச்சி இருக்கும். அடுத்து, அதை உரியவர்களிடம் ஒப்படைப்பது. இந்த வகையில் ஒருவருக்கு நல்ல செயலை செய்தோம் என்ற ஆறுதல் கிடைக்கும். அதற்காக அவர் செய்கிறார் என்றே வைத்துக்கொள்ளலாம். பொருளை இழந்தவருக்கு அப்பொருள் திரும்ப கிடைக்கிறதே.. இன்னொன்று எதையும் செய்யாமல் சாமியார்த்தனமாக அப்படியே இருந்துவிடுவது. ஆட்டோவில் கிடைத்த நகையை எடுத்து முருகன் கோவில் உண்டியலில் போடுவது.. போடும்போது போன் விழுந்தால் கூட முருகனுக்கே சேரும். அதில் கவனமாக இருக்கவேண்டும்.
அண்மையில் நாளிதழில் படித்த செய்தி. ஆட்டோக்காரர், பயணியை மிரட்டி அடித்து உதைத்து நகையைப் பறித்துக் கொள்கிறார். ஆட்டோக்காரர், தான் வாங்கிய கடனைக் கட்ட இப்படியான கீழ்மையான செயலில் இறங்குகிறார். இதை அறிந்த மகன், அப்பாவை காவல்துறையில் பிடித்துக்கொடுத்து நகையைக் கூட மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கிறார். இந்த குணத்திற்கு என்ன பெயர் வைப்பது?
அப்பா கட்டினால் என்ன மகன் கட்டினால் என்ன கடன் கட்ட வேண்டியது அவசியம். பொதுவாக பொருளாதார வல்லுநர்கள், ஒருவர் எடுக்கும் முடிவு என்பது அவரது சுயநலனை அடிப்படையாக கொண்டது என்கிறார்கள். மேற்குறிப்பிட்ட செய்தி விதிவிலக்கானது. அங்கு சுயநலமான பயன் இல்லை. ஆனால், நேர்மைக்கான பாராட்டு பரிசாக கிடைக்கிறது. செய்த செயலில் குற்றவுணர்ச்சி கிடையாது. அதிலிருந்து அவர் தப்பித்துக்கொள்ளலாம்.
ஒரு வேலையை செய்தால் பணம் கிடைக்கிறது. தவறு செய்தால் தண்டனை கிடைக்கிறது. தேர்வில் சிறப்பாக செயல்பட்டால், பட்டத்தோடு பாராட்டும் புகழும் கிடைக்கும். வேலை செய்வதை சிலர் கண்றாவியே என கடன் தவணைக்காக செய்வார்கள். அந்த வேலை இன்றோ நாளைக்கோ புட்டுக்கும் என வையுங்களேன். அர்ப்பணிப்பாக, அனுபவித்து செய்பவர்கள், பெயர் புகழைப் பெறுவார்கள். அவர்களது லட்சியம் செயல்தான். மாதம்தோறும் வரும் பணமில்லை. சிலர், பாதுகாப்பு இல்லாத பிடித்தமாதிரியான வேலையைத் தேர்ந்தெடுத்து செய்கிறார்கள்.
ஒரு செயலை செய்ய எது ஊக்குவிக்கிறது? அதன் மீதான ஆர்வமா, அதில் கிடைக்கும் பணமா?
இன்றைக்கு பணம் சம்பாதிப்பவர்கள், பெரும்பாலும் மோசடியான வழியை நாடுகிறார்கள். அடிப்படைவாத அரசும் மோசடிகளை ஊக்குவிக்கிறது. குற்றவாளிகளை சட்ட உரிமை என்ற பெயரில் பிணையில் விடுவிக்கிறது. எனவே, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், காவல்துறை என அனைத்தும் சிதைவில் சிக்குகிறது. அடிப்படைவாத அரசுக்கு நோக்கம் என்னவாக இருக்கும்? மதத்தால் பிளவுபட்டு கலவரம் தோன்றவேண்டும். எப்போதும் பதற்றம் இருந்துகொண்டே இருக்கவேண்டும். வழிபாட்டுத்தலங்களை புல்டோசர் இடித்துக்கொண்ட வரவேண்டும். போரால் இடிபட்ட கட்டிடங்கள் போலவே நாடு முழுக்க சிதிலமான கட்டிடங்கள் தெரியவேண்டும். வரி கட்டுவதற்காக மக்கள் உயிரோடு இருக்கவேண்டும். மூன்றாம் உலக நாடுகளில் இப்படியாக நோக்கம் வேரூன்றி வருகிறது. இதற்கான பலன்கள் அரசியல்வாதிகளுக்கு லாபமாகவும், மக்களுக்கு நிகர நஷ்டமாகவும் மாறுகிறது.
ஊக்கம்
அடிப்படை வாத அரசுகள், மக்கள் வரிப்பணத்தை மதவாதத்தை வளர்க்கவும், பகுத்தறிவாதிகளை கொல்லவும் செலவிடுகின்றன. வணிகம் என்றால் காபி கடைகள், அடிக்கடி வரும் வாடிக்கையாளர்களுக்கென சிறப்பு விலை குறைப்பு அட்டைகளை வழங்குகின்றன. சினிமா நடிகர்கள், சாமியார்களின் தரமற்ற கலப்பட பொருட்களை வாங்குமாறு ரசிகர்களைக் கோருவார்கள். மாசுபாடுகளை ஏற்படுத்தும் தொழில் நிறுவனங்களுக்கு அதிக வரி விதிப்பது, மேற்கு நாடுகள் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு பரிசு அறிவிப்பது ஆகியவற்றை ஊக்கம் தரும் செயல்பாடுகளாக கூறலாம்.
ஊக்கத்தொகை திட்டம் குறைவாக இருந்தால் தவறாக திட்டமிடப்பட்டால் பொருளாதார ரீதியாக சுமையாக மாறும். ஆரோக்கியமாக உள்ளவர் நீண்டகால நோய்க்கு ஆட்படாமல் இருந்தால் ரத்த தானம் செய்யலாம். அதற்கு காசு கொடுத்தால், நிறையப் பேர் ரத்த தானம் செய்வார்களே என நினைக்கலாம். ஆனால், காசுக்கு ரத்தத்தை விற்க நிறைய மக்கள் விரும்புவதில்லை. ரத்தம் வழங்குவது கருணையான செயல். அதற்கு காசு கொடுக்கிறோம் என்பது ரத்தம் வழங்கும் எண்ணத்தை குறைக்கச் செய்கிறது.
ஆவின் ஐஸ்க்ரீம் வேண்டாம் தரம் எப்படியிருக்குமோ, அமுலுக்கு போய்விடுவோம். அமுல் ஐஸ்க்ரிம் வாங்க முடிவு செய்கிறீர்கள். அப்போது அதைச்சுற்றி என்ன கேள்விகள் எழும்? கடைக்கு எவ்வளவு தூரம் போகவேண்டும், கோன், பார், டப் என எந்த வடிவில் வாங்குவது, என்ன சுவை நன்றாக இருக்கும், சளி பிடித்துவிடுமா, என்ன செலவு பிடிக்கும் என பல்வேறு கேள்விகள் மனதில் ஓடும்.
பொதுவாக மனிதர்கள் ஒன்றை எளிமையாக இருப்பதாக தேர்ந்தெடுக்கிறார்கள். வெனிலா ஐஸ்க்ரீமை கோனில் வாங்கி சாப்பிடுவது இருப்பதில் எளிமையான தேர்வு. நிறைய வாய்ப்புகள் இருப்பது பலருக்கு முடிவெடுக்க முடியாத குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
ஒரு ஹோட்டலில் நிறையப் பேர் சென்றால், அங்கு இயல்பாகவே மக்கள் செல்வார்கள். பெரும்பாலான மக்களின் தேர்வு சரியானதாகவே இருக்கும். இந்த வகையில் உணவகங்கள் உள்ளன. தனக்கு தெரிந்த பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் புத்திசாலிகளாக இருப்பார்கள் என சிலர் நம்புகிறார்கள். அப்படி வேலைக்கு எடுக்கும் பாகுபாடுகள் உண்டு. பியூனாக உள்ளவர்களை அடிமை போல நடத்தி வேலை கற்றுக்கொடுத்து பதவி உயர்வு, சம்பள உயர்வு இல்லாமல் நன்றியுணர்வை சொல்லி வேலை வாங்கும் உத்தியை சில பத்திரிகை நிறுவனங்கள் செய்கின்றன. சுருக்கமாக சொன்னால் சுரண்டல். கற்றவர்கள்,திறமையானவர்களை ஒதுக்கிவிட்டு சூதும், வஞ்சகமும் கொண்டவர்களுக்கு வாய்ப்புகளை நிர்வாகம் வழங்கும்போது நாளடைவில் அந்த நிறுவனம் என்னாகும்? நாசமாகி கீழே வீழும்.
புதிய செல்போன்களை இணையத்தில் குறிப்பிட்ட நேரத்தில் விற்கிறார்கள். ஒரே நேரத்தில் மக்கள் செல்போன்களை வாங்கும்போது விலையும் உயர்கிறது. அதேநேரம் மக்கள் கூட்டமும் அதிகரிக்கிறது. இதை வணிகர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
நன்றி
எகனாமிக்ஸ் ஃபார் பிகின்னர்ஸ் - ஆன்டி பிரென்டிஸ் லாரா பிரையன்
பிக்சாபே
கருத்துகள்
கருத்துரையிடுக