ரோனி சிந்தனைகள்!
தினமணி கதிரில் சுவாமிநாதன் என்ற ஆயுர்வேத பேராசிரியர், குஷ்டம் நோயைப் பற்றி கூறும்போது, தொடக்க பத்தியில் பிறரை சித்திரவதைப்படுத்துவது, முன்னோர்களது சாபம் என்றெல்லாம் கூறி அதன் காரணமாக வந்த நோய் என குறிப்பிடுகிறார். அதாவது சுருக்கமாக கர்மா. இப்படி சொல்லி மருத்துவம் பார்த்தால் அந்த நோயாளி, மருத்துவத்தை ஏற்பானா? திரிதோஷ அடிப்படையில் மருந்துகளை கூறினாலே போதுமே? எதற்கு இந்த இழிவுபடுத்தல்கள் பேராசிரியரே?
செருப்பால் அடித்துவிட்டு சோறு போட்டால் நாய் வேண்டுமானாலும் சோறு தின்னும், மனிதர்கள் அப்படி செய்வார்களா? ஒருநாள் உடல்நலம் குன்றிய உறவினரை விசாரித்துவிட்டு தின்பண்டம் கொடுத்துவிட்டு, வந்து இரண்டே நாட்களில் சாமி பூசைக்கு காசு குடுக்கலீனா, சாமி கொன்னுடுமான்னு கேட்டவன்தான் அவன் என ஒருவர் பேசினால் அதை எப்படி எடுத்துக்கொள்வது? இரட்டை முகம் என்றா, இல்லை மனச்சிதைவுள்ள ஆள் என்றா?
இன்று ஊழல் எல்லாம் பிரச்னை கிடையாது. கையூட்டு தவறும் கிடையாது. கையூட்டு கொடுத்தும் கூட வேலை செய்யமாட்டேன்கிறார்களே இந்த கேடுகெட்ட அரசாங்கத்தான்கள் என்பதுதான் வேதனையும் புலம்பலுமாக உள்ளது.
ஆத்திக நம்பிக்கையிலிருந்து மனிதர்கள் விடுபட்டு அறிவியல் ரீதியான அணுகுமுறைக்கு மாறும்போது மனிதநேயம் கொண்டவர்களாக மாறுகிறார்கள் என குழந்தைகள் எழுத்தாளர் ராபர்ட் டாகின்ஸ், பேட்டியொன்றில் கூறியுள்ளார். அதாவது, ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறும்போது அழிவு சக்தியாகவில்லை என்பதை அழுத்தமாக குறிப்பிடுகிறார். இவரது நூல்களை வாங்கி குழந்தைகளுக்கு வாசிக்க கூடாது என கிறிஸ்துவ சபை அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. பின்னே கடவுள் நம்பிக்கைதானே பெரிய வியாபாரம், அதிலேயே கைவைத்தால் விடுவோமா என்ன?
பசி, பட்டினி, பஞ்சம் என வாடிய தேசம் இது. பிரியாணியை தின்றுகொண்டிருக்கிறார்கள் என்று புலம்பவேண்டியதில்லை. அதைக் கடந்து வர சில காலம் ஆகும் என எழுத்தாளர் ஜெயமோகன் உரையொன்றில் கூறுகிறார். கோவில் அன்னதானத்திற்கு உறவினர் குடும்பமே வரிசையில் நிற்பதைப் பார்க்கும்போது, ஒரு தலைமுறைக் காலம் தேவையோ என்று தோன்றுகிறது.
மொட்டை மாடியில் நின்றுகொண்டிருப்பவர்கள் தங்களை கடவுளாக நினைத்துக்கொள்கிறார்கள். அங்கிருந்து கீழே சாலையில் செல்வோரை இகழ்ச்சியான பார்வையோடு குனிந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் தலைக்கு மேலே எல்லைகளற்ற வானம் இருப்பதை மறந்துவிடுகிறார்கள்.
https://anbarasushanmugam.substack.com/notes
கருத்துகள்
கருத்துரையிடுக