ஹீரோவும் நான்தான் வில்லனும் நான்தான் - எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த துயரச்சம்பவம்

 


ஆன்சியன்ட் டிடெக்ட்டிவ்
சீன தொடர்
யூட்யூப்

ஒருவர், தான் செய்யும் செயல் காரணமாக இன்னொரு தரப்பிற்கு மாபெரும் வில்லனாக மாறியிருப்பார். ஆனால், அப்படி செய்த செயலை குறிப்பிட்ட பாத்திரம் மறந்திருக்கும். அல்லது அதைப்பற்றி பெரிதாக கவனம்கொண்டிருக்காது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் மூலமாக விஷயம் தெரியவரும்போது, தன்னுடைய தவறை உணர்ந்து அதை சரிசெய்துகொள்ள முயலும்.

ரவி மரியா இயக்கிய மிளகா படத்தின் கதை இதையொட்டியது. ஆன்சியன்ட டிடெக்ட்டிவ் தொடரின் மையமும் கூட இத்தகையதே. முதல் காட்சியில், உணவகம் காட்டப்படுகிறது. அங்கு நால்வர் இருக்கிறார்கள். அதில் ஒருவரின் கைகளை கட்டி கைதி போல வைத்துக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டே அவரை தங்க புத்தர் சிலை எங்கே என விசாரிக்கிறார்கள். இவர்களது மேசை அருகே வெள்ளுடை அணிந்த இன்னொருவர் அமைதியாக நடப்பதை கவனித்தவாறே நூடுல்ஸ் உண்டுகொண்டிருக்கிறார். இந்த உணவகத்திற்கு ஆறடி உள்ள இன்னொரு வீரர் கத்தியோடு வருகிறார். விசாரணையில் கைகள் கட்டப்பட்டவர், நான் சிலையை திருடவில்லை என்று சாதிக்கிறார். அப்போது வெள்ளுடை அணிந்தவர், கைகளை கட்டப்பட்டவருக்கு ஆதரவாக பேசுகிறார். குற்றவாளி அவர்களில் ஒருவர் என கூறி, யாரென்பதையும் அடையாளம் காட்டுகிறார். இந்த சம்பவத்தில் ஆறடி  வீரர், வெள்ளுடை அணிந்தவரை திடீர் தாக்குதலில் இருந்து காக்கிறார். வெள்ளுடைக்காரரின் புத்தியை வியக்கிறார். அவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துகொள்கிறார்கள். ஆம். வெண்மையும் பொன் சரிகையும் கொண்ட உடை அணிந்தவரே நாயகன் ஜான் பூசி. ஆறடி வீரரின் பெயர் சாவோ. இவர்கள்தான் தொடர் முழுக்க பல்வேறு வழக்குகளை ஆய்ந்து அறிந்து குற்றவாளிகளை கண்டுபிடிப்பவர்கள்.
பொதுவாக யாருமே இன்னொருவரிடத்தில் தன்னுடைய பலவீனத்தை சொல்ல மாட்டார்கள். அது இளக்காரமாக பார்க்கப்படும். தவறாக பயன்படுத்திக்கொள்ளப்படலாம் என சில காரணங்களை அடுக்கலாம். ஜான் பூசிக்கு புத்திசாலித்தனம், பகுத்தறிவு, ஆய்ந்தறியும் நோக்கு உண்டு. ஆனால் பலவீனமான தேகம், சிறுவயதில் ஏற்பட்ட துயரச்சம்பவத்தால் தற்காப்புக்கலைகளை கற்க முடியாது போய்விடும். அதுவே அவருக்கு பலரிடமும் நட்பைப் பெற்றுத்தருகிறது. கூலிக்கொலைகாரி ஸான் காதலியாகிறாள். காயங்களை தைக்கும் மருத்துவர் காங் கூட ஒருதலைக் காதலில் விழுகிறாள். ஆனால் ஜான் பூசி யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு திகைப்பு ஏற்படுத்துபவர் என வயதான பிச்சைக்காரர் ஒருவருக்கு மட்டுமே தெரியும். அவரும் கோழைத்தனமாக சம்பவம் ஒன்றின் காரணமாக தன்னுடைய நண்பர்களைக் கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோகிறார். ரகசியங்களை பிறருக்கு சொல்வதில்லை. தன்னோடு புதைத்துக்கொள்கிறார். அந்த ரகசியம் என்னவென்று அறிய இருபத்து நான்கு எபிசோடுகளை நீங்கள் பார்த்தே ஆக வேண்டும்.

ஜான் பூசி, கண்பார்வையில்லாத அப்பாவின் நண்பர் ஒருவரைப் பார்க்கச் செல்கிறார். அவரிடம் அறிவதற்கு எட்டு ஆண்டுகள் முன்னர் நடந்த சம்பவம் ஒன்று உள்ளது. அதில் ஜானின் அப்பா இறந்துபோகிறார். அவரைக் கொன்றவனின் உடல் காணப்படுவதில்லை. நிறைய வீரர்கள் அந்த சண்டையில் மரணத்தை சந்திக்கிறார்கள். தற்காப்புக்கலை உலகில் அச்சம்பவம் பெரிய அதிர்வை ஏற்படுத்துகிறது. அதில் உயிர்பிழைத்தது நால்வர் மட்டுமே. அவர்களைத் தேடி சென்று நடந்த உண்மையை அறிய ஜான் பூசி முயல்கிறார். அவரும் கூட நடந்த சம்பவத்தில் தலையில் அடிபட்டு அனைத்தையும் மறந்துபோகிறார். அதுவரை கற்ற தற்காப்புக்கலைகள் எல்லாம் கைவிட்டு போகின்றன. உயிரைக் காக்க பிறரை நம்பியிருக்கும் சூழ்நிலை வருகிறது.

ஜான் போகும் இடங்களில் எல்லாம்கொலைகள் நடக்கின்றன. தற்செயலாக இல்லை. தொடரின் இயக்குநர் அப்படியே திரைக்கதையை எழுதியிருக்கிறார். அதன்படியே ஜான் பூசி அதன் பின்னணி மர்மங்களைக் கண்டறிகிறார். இப்படியான துப்புதுலக்கும் கதைகளில் மூடிய அறைக்குள் கொல்லப்படும் மனிதர்கள், விடுதி ஒன்றில் கொல்லப்படும் இருவர் என இரண்டு கதைகள் சுவாரசியமாக உள்ளன.

ஆறடி உள்ள மலைமனிதர் ஸாவோ, லீ குடும்ப வாள் வித்தையை தானாகவே கற்று அதில் மேம்பாடு அடைவதை நிதானமாக காட்சிபடுத்தியிருக்கிறார்கள். ஜான் சி என்ற கூலிக்கொலைகாரரை எதிர்த்து அவர் சண்டையிட்டு வெல்லும் சண்டைக்காட்சி சிறப்பாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது. பத்தாவது கொலைக்கதவு எனும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அனைவருமே கூலிக்கொலைகாரர்கள். இவர்களின் ரகசியம் ஜான் பூசி தேடிச்செல்லும் ஒருவரான பப்பெட் லீயிடம் உள்ளது. அதற்காக ஜான் பூசியை கொல்ல ஆட்களை அனுப்புகிறார்கள். அவர்களை ஜான் பூசியின் சகோதரன் ஆறடி ஸாவோ, காதலி ஸான் ஆகியோர் எதிர்கொண்டு வீழ்த்துகிறார்கள்.

ஜானின் காதலி ஸான், பத்தாவது கொலைக்கதவு இயக்கத்தைச் சேர்ந்தவள்.சுதந்திரமான வாழ்க்கையைத் தேடி அங்கிருந்து ஓடி வந்துவிடுகிறாள். அவளைக் கொல்ல முழு இயக்கமும் வெறிகொண்டு அலைகிறது. ஆட்களை அனுப்புகிறது. அத்தனை பேர்களையும் வெட்டி வீழ்த்துகிறாள். ஒரு தற்காப்புக்கலை போட்டிக்கு வரும்போது ஜானைப் பார்க்கிறாள். அவன் செய்யும் உதவிகளைப் பார்த்து காதலில் விழுகிறாள். தொடர் நெடுக இவர்கள் நான் உன்னை காதலிக்கிறேன் என்றெல்லாம் எதையும் கூறுவதே இல்லை.

கொலை, அதன் பின்னணி காரணங்கள், எப்படி கொலையாளியைப் பிடித்தனர் என்பதை முடிந்தளவுக்கு சுவாரசியமாக காட்ட முயன்றுள்ளனர். தொடரின் இறுதியில்தான் முக்கியமான திருப்புமுனை விஷயத்தை சொல்லுகிறார்கள். அதுவரைக்கும்தான் யூட்யூபில் தொடரின் எபிசோடுகள் உள்ளன. புலனாய்வு தொடரை பார்க்க விரும்புபவர்களுக்கானது.

கோமாளிமேடைக்குழு













கருத்துகள்

பிரபலமான இடுகைகள்