விலை உயர்வெனும் பற்றியெரியும் காட்டில் பட்டாம்பூச்சி!

 

 







 

 

3
பாயும் பொருளாதாரம்

விலை உயர்வெனும் பற்றியெரியும் காட்டில் பட்டாம்பூச்சி!

பனிரெண்டு லட்சம் கோடி ரூபாயை இந்திய வங்கிகள் தொழிலதிபர்களுக்கு கொடுத்து அவற்றை வசூலிக்க முடியவில்லை. அணுக்க முதலாளித்துவ ஒன்றிய அரசு, எப்போதும்போல கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது. விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்றால் அத்துறை சார்ந்த முன்னேற்றம் என்று பொருள் கொள்ளலாம். கொரோனா காலத்தில் கூட லாபம் சம்பாதித்த தொழிலதிபர்களுக்கு எதற்கு கடன் தள்ளுபடி? இப்படி அரசியல்வாதிகளின் உதவிகளைப் பெற்று வரி கட்டாமல் சம்பாதித்தாலும் கூட லஞ்சம் வழங்குவது, பங்கு விலையை அதீதமாக காட்டுவது என இந்திய தொழிலதிபர்கள் சர்க்கஸ் காட்டி வருகிறார்கள். சரி சந்தைக்கு செல்வோம்.

சந்தையில் மக்கள் பொருட்களை வேண்டும் என கோரவில்லை என்றாலும் கூட அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை வணிகர்கள் வாங்கி வைத்து விற்பார்கள். சந்தை அதன் இயல்பில் இயங்கி வரும் என பொருளாதார வல்லுநர் ஆடம் ஸ்மித் கூறியுள்ளார். இவர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். காலம் பதினெட்டாம் நூற்றாண்டு.

சந்தை இயங்குவது கண்ணுக்குத் தெரியாத கரம் மூலம் என விநியோகம், தேவை ஆகியவற்றைக் குறிப்பிட்டு கூறினார். ஆங்கிலேய பொருளாதார வல்லுநரான ஆல்பிரட் மார்ஷல், விநியோகம் தேவை என்பது கத்தரிக்கோலைப் போன்று செயல்படுகிறது. இரண்டு பிளேடுகள் சேர்ந்து இயங்கினால்தானே காகித தாளை வெட்ட முடியும் என்று வரையறுத்தார். விலை சரியாக வைக்கப்படும்போது தேவையும் விநியோகமும் கூட சமமாகிவிடும் என்று கூறினார். இக்கருத்தை வரைபடமாக பார்த்தால் உங்களால் எளிதாக புரிந்துகொள்ள முடியும்.

இன்று பங்குச்சந்தை வீழ்ந்துவிடும் என்று சொல்லி மதவாத அரசுகள் தேர்தலைக் கூட தங்களுக்கு ஆதரவாக மாற்ற முயன்று வருகிறார்கள். இதையெல்லாம் பொருளாதார வல்லுநர்கள் யோசித்திருக்க மாட்டார்கள். சந்தை எப்படி மாறுகிறது என்று பார்ப்போம்.

கொரோனா காலத்திற்குப் பிறகு சூழல் எப்படி மாறியிருக்கிறது. பலரும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை கைக்கொள்ள முயல்கிறார்கள். நடைப்பயிற்சிக்கு சென்றுவிட்டு வரும் வழியில் சரவணபவனில் சாம்பார் வடை சாப்பிட்டு அதே ஆட்கள்தான். இப்போது சற்று மாறுபட்டு யோசிக்கிறார்கள்.

கபசுர குடிநீர் குடிக்கிறார்களோ இல்லையோ, மூலிகைகள் சார்ந்த பொருட்களை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள். அதனால்தான் யுனிலீவர் என்ற ஆங்கிலேய நிறுவனம், ஆயுஷ் என்ற பிராண்டை விளம்பரப்படுத்தி பற்பசை, சோப்பு என ஆயுர்வேதம் பக்கம் நகர்கிறது. வியாபாரம் அந்தப்பக்கம் மாறுகிறது. அவர்களும் அப்படி மாறுகிறார்கள். அடுப்புக்கரி,உப்பு ஆகியவற்றை வைத்து பல்தேய்ப்பது ஆபத்து என்று சொல்லி பற்பொடி, பற்பசை விற்ற கோல்கேட் அதே பொருட்களை வைத்து இன்று பற்பசை, பிரஷ் விற்கும் நிலைக்கு வந்திருக்கிறது.

உணவுகளும் கூட சிறுதானியம் சார்ந்து மாறியுள்ளது. வேதிப்பொருட்கள் இல்லாத சர்க்கரை, தேன், கோதுமை பிரெட் என பொருட்களைத் தேடத் தொடங்கியுள்ளனர்.

இதற்கெல்லாம் ஒரே காரணம், நோய்த்தொற்று ஏற்பட்டபோது மனிதர்கள் நுரையீரல் பழுதாகி மூச்சுவிடாமல் துயரப்பட்டனர். அப்போதுதான் வேதிப்பொருட்களை ஏராளம் பயன்படுத்தி உடல்நலம் பலவீனமாகி இருந்ததை அடையாளம் கண்டனர். அதற்குப் பிறகுதான் ஆயுர்வேத மருந்துகள், தாவர உணவுகள் என சிந்தனைகளே மாறுகின்றன. சந்தையும் அந்த தேவைக்கு ஏற்ப மாறிக்கொள்கிறது.

பொதுவாக சைக்கிளில் செல்பவரை கிராமங்களிலேயே இழிவாக பார்க்கிறார்கள். அங்குள்ள பணக்காரர்கள் மின் வாகனங்களில் வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டு பறக்கிறார்கள். உண்மையில் மக்கள் சைக்கிளை எதற்காக வாங்கி ஓட்டவேண்டும் என பின்னணி காரணங்களைக் காண்போம். சைக்கிளை வாங்கினால் அதை ஓட்டிச்செல்வது முழு உடலுக்கான உடற்பயிற்சி. சைக்கிளை பல்லாயிரம் ரூபாய்க்கு வாங்கி ஹெல்மெட் போட்டு ஓட்டுபவர்களை விட்டுவிடுங்கள். அவர்கள் மேல்வர்க்க ஆட்கள். பேருந்தில் டிக்கெட் விலை கூடியிருக்கலாம். எனவே, சைக்கிளைப் பயன்படுத்துவது சிக்கனம். மின்வாகனமோ, பெட்ரோல், டீசல் வாகனமோ அவையெல்லாமே விலை அதிகம் கொண்டவை. அடிப்படையான விலையில் சைக்கிளை நீங்கள் வாங்கி உள்ளூர் கடையில் பொருத்தி ஓட்டலாம். அதைத்தான் பொருளாதார நோக்கில் இங்கு கூற வருகிறேன். மற்ற வாகனங்களை ஒப்பிட்டால் மாசுபாடு குறைவு. பத்து அல்லது பதினைந்து கி.மீ தொலைவுக்குத்தான் சைக்கிளை பயன்படுத்தவேண்டும். அதற்குமேல் பயன்படுத்தினால் உடல் கடுமையாக சோர்வடைந்து விடும்.

சந்தையைப் பொறுத்தவரை சைக்கிள் தயாரிப்பு சீராக இருக்கவேண்டும். மாநில, ஒன்றிய அரசுகள் வரியை உயர்த்தாமல் இருக்கவேண்டும். எதிர்காலத்தை தொலைநோக்காக பார்த்து உணரும் தொழில்நுட்ப வல்லுநர்கள் நிறுவனத்தில் இருந்தால் சைக்கிளை புதுமையாக உருவாக்கி வழங்கமுடியும். மக்களுக்கும் ஆர்வம் குறையாமல இருக்கவேண்டும். சைக்கிளை எளிதாக வாங்கும்வகையில் கடைகள், பரவலாக அமையவேண்டும் என நிறைய அம்சங்கள் சரியாக அமைய வேண்டும்.

சைக்கிள் என்பது அரிசி, பிரெட் போல அத்தியாவசியமான தேவையல்ல. எனவே, சைக்கிளை வாங்குவதை ஒருவர் இப்போதைக்கு வேண்டாம் என தள்ளிப்போடலாம் அல்லது அதை கைவிடக்கூட செய்யலாம்.

அரசு சில விதிகளை விதித்து குறிப்பிட்ட செயல்களை உருவாக்கலாம். மாசுபாட்டைக் குறைக்க பல்வேறு நாட்டு அரசுகள் கார்பன் வரியை விதிக்கின்றன. இதனால் கரிம எரிபொருட்களின் பயன்பாடு குறிப்பிட்ட அளவு குறையும். தனிநபர் வாகனங்களை  குறிப்பிட்ட நேரம், நகரில் நுழையாமல் தடுப்பதும் கூட பயன் அளிக்கக்கூடியது. போக்குவரத்து நெரிசலை அதிகப்படுத்தும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது கூட சிறந்ததுதான்.

பிளாஸ்டிக் பேக்கை பயன்படுத்தாதீர் என அரசு பிரசாரம் செய்கிறது. இதை சிலர் கேட்பார்கள். மற்றவர்கள், அதைப் பற்றி கவலைப்படமாட்டார்கள். ஆனால் கையில் உள்ள காசு செலவானால் வழிக்கு வந்துதானே ஆகவேண்டும். பேரங்காடிகளில் பிளாஸ்டிக் பை அல்லது துணிப்பை தருகிறார்கள். ஆனால் அதற்கு நீங்கள் காசு கொடுக்கவேண்டும். எனவே, மக்கள் பைகளை கொண்டு செல்லத் தொடங்கியுள்ளனர்.  சட்டம் என்று சொன்னால் சற்று பலன் இருக்கத்தான் செய்கிறது. தேவாலயங்களை இடிப்பவர்களின் தலைவரிடமே கேக்கை வெட்டச்சொல்லி கொடுக்கும் முரண்பாடும், பிழைப்புவாதமும் இங்கு நேராது.

அரசே, ஆட்சித்தலைவரே தான் செய்த உறுதிமொழியை எழுதிய சட்டத்தை மறந்துவிட்டார், நேர்மையாக இல்லை என்றால் மக்களும் எப்படி சட்டத்தை மதிப்பார்கள் என சீன தத்துவவாதி கன்பூசியஸ் கூறுகிறார்.

அத்தியாவசியமான பொருட்கள் சந்தையில் குறிப்பிட்ட விலைகளுக்குள் விற்கப்படவேண்டும். குறிப்பாக அரிசி ,பருப்பு, காய்கறிகள், சமையல் எண்ணெய் ஆகியவை. இதில், விலை உயர்வு ஏற்பட்டால் அரசு தலையிட்டு விதிகளை இடும். சட்டங்களை மாற்றும். நடவடிக்கை எடுக்கும். இந்தியாவைப் பொறுத்தவரை அரசின் அதிகாரப்பூர்வ விமான நிறுவனத்தைக்கூட காசுக்கு தனியாரிடம் விற்றுவிட்டனர். எனவே, மக்கள் தமக்கு தேவையானவற்றை அவர்களே காசு கொடுத்து வாங்கிக்கொள்ள வேண்டும். அரசு, பெரிய தொழிலதிபர்களுக்கு கடன் பெற்றுக்கொடுப்பது, அவற்றை தள்ளுபடி செய்வது, மதக்கலவரம் உண்டாக்குவது, சிறுபான்மையினர் வழிபாட்டு இடங்களை அழிப்பது, பழங்குடிகளை சுட்டுக்கொல்வது தவிர வேறு எதையும் செய்வதில்லை.

பொதுவாக மேற்கு நாடுகளில் வரிகள் அதிகம். ஆனால், அங்கு மக்களுக்கு அவசியமான மருத்துவம், கல்வி, இருப்பிடம் ஆகியவற்றை அரசு இலவசமாக வழங்கிவிடுகிறது. அதாவது, மக்களிடமிருந்து வரி வாங்கி, பல்வேறு திட்டங்களாக அவர்களுக்கே அளிக்கிறது. அரசு, மனிதவள மேம்பாட்டு திட்டங்களை லாபநோக்கமின்றி செய்யும். ஆனால், பொது நிறுவனங்களை தனியார் வாங்கிவிட்டால் அவர்கள் அனைத்தையும் சுரண்டி கொழிக்கவே முயல்வார்கள்

தனியார் நிறுவனம் ஒரு பொருளை குறிப்பிட்ட வட்டாரத்தில் தனியாக விற்று ஏகபோகம் செய்கிறது என்றால் அதை அரசு தடுக்கவேண்டியது அவசியம். ஏனெனில் நான் மட்டும்தான் பொருளை வாங்கி விற்கிறேன். எனவே, நான் சொன்னதுதான் விலை என வியாபாரி பேசக்கூடும். இதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

துணிகளுக்கு சாயம் போடும் தொழிற்சாலை இருக்கிறது என்றால், அதில் வெளியேறும் கழிவுநீர் ஆறுகளைக் கெடுக்கிறது. எனவே, அரசு விதிமுறைகளை உருவாக்கி சாயநீரை சுத்திகரித்து செய்து நிலத்தில் விடுமாறு உத்தரவிடும். இதனால் ஆறுகள் பாதிக்கப்படாது. நிலம் கெட்டுப்போகாது. தொழில்வளர்ச்சி, வேலைவாய்ப்பு வேண்டும் என்றால் தொழிற்சாலைகள் தேவை. அவற்றை முற்றாக மாசுபாட்டை காரணம் சொல்லி மூட முடியாது. முடிந்தளவு செயல்பாடுகளை மேம்படுத்திக்கொள்ள முயலலாம். வேறுவழியில்லாத நிலையில், தொழிற்சாலை மூடப்படக்கூடும்.
thanks - usborne.com

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்