பிச்சைக்காரன், பேராசையும் கொலைவெறியும் கொண்ட பணக்காரர்கள் வாழும் அரண்மனைக்குள் நுழைந்தால்....

 

 



 

பிளடி பெக்கர்
தமிழ்
இயக்கம் சிவபாலன்

பிச்சைக்காரர் ஒருவருக்கு மாளிகை ஒன்றில் சாப்பாடு இலவசமாக போடுவதைச் சாப்பிட வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வீட்டுக்குள் நுழைபவர், சொத்துப்பிரச்னையில் சிக்கிக்கொண்டு உயிர் பிழைக்கப் போராடுகிறார். உண்மையில் அவர் எதற்கு அங்கு சென்றார், உயிர்பிழைத்து வெளியே வந்தாரா என்பதே கதை.

படத்தின் தலைப்பு பற்றி சில சர்ச்சைகள் எழுந்தன. படத்தின் உள்ளடக்கத்திற்கு ஏற்ற தலைப்பு. படத்தில் அனைத்தும் உள்ள பணக்காரர், எதுவுமே இல்லாத பிச்சைக்காரன் என இரண்டு அதீத நிலைகள் காட்டப்படுகின்றன. இந்தப்படம் ஆங்கிலப்படத்தின் தாக்கம் பெற்றது என ஒருசாரார் கூறினர். இருக்கலாம். மறுக்க முடியாது. படத்தை தயாரித்த இயக்குநர் நெல்சனே அமெரிக்க டிவி தொடர்களால் உந்துதல் பெற்று காட்சிகளை அமைப்பவர்தான். அப்போது அவரின் மாணவரான இப்பட இயக்குநர் எப்படி மாறுபட்டு இருப்பார்?

கடினமாக உழைத்தால் பணக்காரராகிவிடலாம் என்று நினைப்பதையே படம் பகடி செய்கிறது. ஒருவர் உழைப்பது சரி. ஆனால், தான் செய்வது சரி. தனக்கு கீழே சிலர் இருக்கிறார்கள் என மனநிம்மதி பெறுகிறார். சிலசமயங்களில் அதை சொல்லிக்காட்டவும் வன்மத்தை கொட்டவும் செய்கிறார்கள். அதை உரையாடல் வழியாகவே அங்கதம் செய்திருக்கிறார் இயக்குநர்.

பிச்சைக்காரருக்கும், புத்தகம் விற்கும் சிறுவனுக்குமான உறவு நன்றாக காட்டப்பட்டுள்ளது. படத்தில் உள்ள அனைத்துக்கும் குறியீடுகள், அடுத்தடுத்த காட்சிகளை புரிந்துகொள்ளும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. சந்திரபோஸ் என்ற நடிகரின் திரைப்படத்தை பார்க்க பிச்சைக்காரர், சிறுவனை அழைத்துக்கொண்டு போகிறார். பத்துரூபாய் குறைவாக உள்ளதால் சிறுவனுக்கு டிக்கெட் வாங்கித்தர மறுக்கிறார். அவரே படம் பார்த்துவிட்டு படம் நன்றாயில்லை என்று கூறிவிட்டு வெளியே வருகிறார். அந்த நேரம் சிறுவன், படத்தின் போஸ்டரில் சிவன் வேடத்தில் உள்ள சந்திரபோஸ் என்ற நடிகரை கடவுளாக நினைத்து பிச்சைக்காரரை தண்டிக்கச் சொல்லி கேட்பான்.

அதைப் பின்தொடர்ந்து இலவச சோறு கிடைக்கும் இடம், அதே நடிகரின் மகா நடிகரின் இல்லம்தான். அங்கு சென்றுதான் வாழ்வா சாவா என்ற விவகாரத்தில் பிச்சைக்காரர் மாட்டிக் கொள்கிறார். அதேநேரம், தனது மனைவியைக் கொன்றவர்களையும் அங்கு சந்திக்கிறார்.அவர்களை பழிவாங்க முனைகிறார். அதில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதே இறுதிக்காட்சி.

சந்திரபோஸ் என்ற மகா நடிகருக்கு நான்கு பிள்ளைகள். அவர்களுக்கு பிள்ளைகள் உண்டு. இவர்கள் அனைவருமே சொத்து கிடைக்கவேண்டுமென ஆசைப்படுகிறார்கள். அதேநேரம் அவர்களுக்கு மனதில் கிஞ்சித்தும் ஈரம் இருப்பதில்லை. பணத்திற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என துணிகிறார்கள். அதையே இறுதிக்காட்சியில் நான் பிச்சைக்காரன்னா நீங்க எல்லோரும் யாரு? என கேலியாக கேட்கிறார் பிச்சைக்காரர்.
காலமான நடிகர் சந்திரபோஸ், அவரைப்போலவே உருவம் கொண்ட தம்பி என இருவருமே குரூரமானவர்கள்தான். சந்திரபோஸ், தனக்கு கள்ள உறவில் பிறந்த குழந்தையை அனாதை ஆசிரமத்தில் வளர்க்கிறார். இறுதியாக சாகும்போது உயிலில் ஆசிரமத்தில் வளர்ந்த பிள்ளைக்கு அதிக சொத்துக்களை எழுதி வைக்கிறார். இப்படி எழுதி வைத்தால் மற்றவர்கள், அந்த பிள்ளையை சும்மா விடுவார்களா?  இதை அவர் நிச்சயம் தெரியாமல் செய்திருக்க முடியாது. ரெடின் கிங்க்ஸ்லி, ஆவியாக நடித்திருக்கிறார். கொலைகார கும்பலிடமிருந்து பிச்சைக்காரரைக் காப்பாற்ற உதவுகிறார். சொத்தின் அசல் வாரிசும் கூட இவர்தான். வக்கீலே இவரை இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து கொலை செய்துவிடுகிறார்.

அவரது தம்பி, இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டு வருபவர்.கேமரா வைத்து அனைத்து விஷயங்களையும் கண்காணிப்பவர். இவரும் நல்லவர் கிடையாது. அவருக்கு குடும்ப உறுப்பினர்களை பழிவாங்க காரணம் இருக்கிறது. அதற்கு பிச்சைக்காரரை பயன்படுத்திக்கொள்கிறார். அவன் இறந்தாலும் கூட கவலையேபடாமல் என்னை மன்னிச்சிரு என்கிறார். அந்த குடும்பத்தில் மன்னிப்பு என்பதை இவரைத் தவிர கனி மீது காரை ஏற்றிக்கொன்ற இன்னொரு இளம்பெண் மட்டுமே கேட்கிறாள். இதற்காக இவர்கள் கனிவானவர்கள் என நினைத்துவிடக்கூடாது. அவர்களுக்கு மனதில் குற்றவுணர்ச்சி சற்று மிச்சமிருக்கிறது. அதனால், மன்னிப்பு கோருகிறார்கள். குரூரம் என்பது அந்த குடும்பத்தின் ரத்தத்தில் ஊறியது. அதை சந்திரபோஸின் தம்பியே ஓரிடத்தில் கூறுகிறார்.

தெலுங்கு நடிகரான பிரிதிவி ராஜ், தமிழை பேசும்போது சற்று தடுமாறி நிதானித்து பேசுகிறார். குரூரமான பேராசைக்கார பாத்திரத்தில் அவரும் மெல்ல பொருந்திப்போகிறார். நகைச்சுவை பாத்திரத்தில் நடித்திருந்தாலும் குணச்சித்திர பாத்திரங்களையும் அவரால் செய்ய முடியும் என்பது தெரிகிறது.

பிச்சைக்காரர் திடீரென கர்மா, ஆண்டவன் என்று பேசுவது தொடக்க காட்சிகளுக்கான இயல்பைக் குறைக்கிறது. உழைப்பு, கருணை என பலவற்றையும் இகழ்ந்து அவற்றுக்கு எதிர்மறையாக செயல்படும் பிச்சைக்காரர், திடீரென ஆண்டவன் தீர்மானிக்கட்டும் என்றெல்லாம் பேசுவது ஒட்டவில்லை. அதுவேண்டும் இதுவேண்டும் போதாது என கூறிக்கொண்டிருக்கும் வரை அனைவரும் பிச்சைக்காரர்கள்தான் என திரைப்படம் கூற வருகிறது. இதுவும் கூட தனிப்பட்ட அனுபவம்தான். படம் பார்ப்பவர்களுக்கு மனதில் என்ன தோன்றுகிறதோ அதுதான் அவருக்கான அனுபவம். விமர்சனம்.

கோமாளிமேடை குழு

 






 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்