2025ஆம் ஆண்டில் என்ன எதிர்பார்க்கலாம்?

 



புதிய எதிர்பார்ப்புகள்

2024ஆம் ஆண்டு பற்றிய விஷயங்களை பூந்தி, டெய்லிகரன் ஆகியோர் இணைப்பிதழை இலவசமாக கொடுத்து புரிய வைத்துவிடுவார்கள். இனி அதை தனியாக எழுதி நேரத்தை வீணடிக்க வேண்டாம். எதிர்வரும் ஆண்டுக்கான விஷயங்களைப் பார்ப்போம்.

விமானநிலையம்
மக்கள் இந்தியாவில் இருந்து தப்பிச் செல்லவா என்று தெரியவில்லை. பிரமாண்ட விமானநிலையங்கள் நொய்டா, நவி மும்பையில் செயல்பாட்டுக்கு வரவிருக்கின்றன. இவற்றை ஆட்சித்தலைவரின் அபிமான நண்பர் இயக்குவாரா இல்லையா என விரைவில் செய்திகள் சொல்லும்.

கூட்டுறவு
இந்தியா குவாட் அமைப்பில் உள்ளது. அமெரிக்க அதிபராக குடியரசு கட்சியைச் சேர்ந்த டிரம்ப் பதவியேற்கவிருக்கிறார். சீனாவின் டிக்டாக்கை தடைவிதிக்க வேண்டாம் என கூறியுள்ளார். வணிகத்தைப் பொறுத்தவரை அதிகவரி ஏற்றுவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டார். சீனாவுக்கு எதிராக அமெரிக்கா என்ன வித நடவடிக்கை எடுத்தாலும் இந்தியா அதற்கு மகிழ்ச்சியுறும்.பின்னே நாம் முன்னேறமுடியவில்லை அடுத்தவர்கள் முன்னேறினால் மட்டும் பார்த்துக்கொண்டு சும்மா இருப்போமா என்ன? இந்த வகையில் இந்தியா ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளோடு இணைந்துகொண்டு இயங்கும்.

மின்னல் வேகம்

டெல்லியில் இருந்து டேராடூனுக்கு செல்ல ஆறரை மணிநேரம் ஆகும். எக்ஸ்பிரஸ் வே வழியை அரசு அமைத்துவிட்டதால் இரண்டரை மணி நேரத்தில் சென்றுவிடலாமாம். அதேநேரம் வழித்தடத்தில் உள்ள மரங்களை அரசு இதுதான் வாய்ப்பு என வெட்டி வீழ்த்திவிட்டது. இது பசுமை போராளிகளுக்கு வருத்தமான விஷயம். மதவாத அரசு சாலைகளை போட்டாலே, பிரித்தானியர்கள் ரயில்ரோட்டை போட்டு சொத்துகளை இயற்கை வளங்களை கொள்ளையடித்து சென்றது நினைவுக்கு வந்து தொலைகிறது ஏனோ?

மத விழா

உபியில் அலகாபாத்தில் கும்பமேளா நடக்கவிருக்கிறது. இதற்காக தென்னக ரயில்களைக் கூட வட இந்தியா பக்கம் திருப்பிவிட்டுவிட்டார்கள். ஜனவரி 13 தொடங்கி பிப்ரவரி 26 வரை விழா நடைபெறவிருக்கிறது. இதிலும் அஜாக்கிரதை காரணமாக மக்கள் செத்து விழுவார்களா என்று தெரியவில்லை. விழாவை நடத்தும் இந்துத்துவ அரசு, நாற்பத்தைந்து கோடி மக்கள் வருவார்கள் என திட்டமிட்டுள்ளது. இதற்காக பாலங்கள், மருத்துவமனைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். மக்களுக்கு அசம்பாவிதம் நடந்தால்தான் அப்படியான வசதிகள் கண்ணில் படுகிறதா இல்லையாவென முழுமையாக தெரியவரும்.

சர்வாதிகாரிகள் சந்திப்பு
ரஷ்ய சர்வாதிகாரியான புதின், இந்துத்துவ சர்வாதிகாரியான ஆட்சித்தலைவரை சந்தித்து பேசவிருக்கிறார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியாவிற்கும் சீனாவுக்குமான எல்லைப் பிரச்னை ஆகியவற்றைப் பற்றி பேசுவதாக கூறப்படுகிறது. ஒரேநேரத்தில் உக்ரைனுக்கும், அதை தாக்கும் ரஷ்யாவிற்கும் இந்தியா எப்படி நட்பாக இருக்க முடியும் என்று தெரியவில்லை. ஆனாலும் ஆட்சித்தலைவர் அப்படித்தான் நடித்துக்கொண்டிருக்கிறார். ரஷ்யாவுக்காக சண்டைபோட வேலையில்லாத இளைஞர்களை பிடித்து இந்திய அரசு அனுப்பிவருகிறது. இதைதான் ஆட்சித்தலைவர் வேலைவாய்ப்பு என கூறி வருகிறாரோ தெரியவில்லை.

சேலை கட்டாத பெண் ஹியூமனாய்ட் ரோபோ

ஏன் சேலை கட்டவில்லை என்பதை காவிக்கூட்டம் விவாதித்து முடிவெடுக்கும். அடுத்த ஆண்டு, ககனியான் ஆளில்லாத விண்கலத்திட்டத்தில் வியோம்மித்ரா எனும் பெண் ரோபோ விண்வெளிக்கு செல்லவிருக்கிறது. இந்த ரோபோ இந்தியும், இங்கிலிஷூம் பேசுமாம். சமஸ்கிருதம் பேசாது என்பது வருத்தத்திற்குரியது. வரும் ஆண்டில் தேங்காய், பழம் வைத்து சைக்கிள் பிராண்ட் ஊதுபத்தி பற்றி வைத்து விண்கலம் ஏவப்படவிருக்கிறது. வியோம்மித்ராவும் விண்வெளிக்கு செல்லப்போகிறார்.

மாநில தேர்தல்களுக்கு ரெடியா?

டெல்லி, பீகாரில் மாநில தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. தேர்தல் ஆணையமே கையில் இருக்கிறது. வாக்களிக்கும் எந்திரத்தின் கோடிங்கும் கூட அரசுக்கு தெரியும். தங்களுக்கு வாக்களிக்காத சிறுபான்மையினரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி தேர்தலை இந்துத்துவ அரசு நடத்தவிருக்கிறது. இதனால் பெரிய மாற்றம் ஒன்றும் நேராது. மதவாத அரசின் கூட்டணி வெல்லும். அவ்வளவுதான். டெல்லியில் தேர்தல் என்ற போர்வையில் ஏதாவது நடந்தாலும் கூட அங்கு ஆளுநர்தான் உண்மையான ஆட்சியாளர். எனவே, பெரிதாக மாற்றம் ஒன்றும் இருக்காது. ஆம் ஆத்மி, மதவாத கட்சிக்கும் இடையில்தான் போட்டி. கைக்கட்சியைப் பொறுத்தவரை எந்த நம்பிக்கையும் இருக்கப்போவதில்லை.

ராஜபாட்டையில் பெண்கள் கிரிக்கெட் கோப்பை
ஐசிசியில் பெண்கள் அணி இருப்பதே பலருக்கும் தெரியாது. சிரித்துக்கொண்டு விளையாடினாலும் பெண்கள் அணி விளையாடிக் கொண்டுதான் உள்ளனர். இ்ந்தியா உலக கோப்பை போட்டியை நடத்தவிருக்கிறது. ஏன் நடத்துகிறது என கேட்காதீர்கள். நடத்துகிறார்கள். கண் பார்வையற்றோருக்கான உலக கோப்பையையும் கூட இந்தியாவே நடத்துகிறது.

பங்கோ பங்கு

ஸெப்டோ, பிலிப்கார்ட், போர்ட்டர், மீசோ, குரோவ், அர்பன் கம்பனி என நிறைய நிறுவனங்கள் பங்குச்சந்தையில் நுழையவிருக்கின்றன. இதனால் எப்போதும் போல அணுக்க முதலாளித்துவம் கொண்ட நாடான இந்தியா, பயன் பெறுமா என்றால் கிடையாது. மேற்கண்ட நிறுவன முதலாளிகள் உலக பணக்காரப் பட்டியலில் இடம் பிடிப்பார்கள். ஆளும் அரசுக்கு தேர்தல் நிதி குவியும்.




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்