ரோனி சிந்தனைகள்! - உன்னதம் குரூரம் இரண்டுக்குமான நடுநிலை

 

 

 

 





 

 

ரோனி சிந்தனைகள்

குடமுழுக்கு நன்கொடைகள் இப்போதெல்லாமாம் அதிகரித்துவிட்டன. கதவை முட்டி மோதிக்கொண்டு இரு தலித் பெண்கள் நின்றனர். என்னவென்று கேட்டதற்கு, கோயிலுக்கு செல்லும் பாதையை செப்பனிடுகிறோம். காசு குடுங்க என்றார்கள். விவரம் கேட்டால் கூட பொறுமையின்றி பதில் சொன்னவர்கள், இவ்ளோ பேசுறீங்க ஒரு ரூபா கைல தரமாட்டீங்கறிங்க என்று அலுப்போடு சொல்லிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றார்கள். அங்கே இன்னும் மோசம். கோவில் அன்னதானத்தை நம்பித்தான் உறவினரின் குடும்பமே வாழ்கிறது. அவர்களிடம் ஒற்றை ரூபாய் வாங்கிவிட்டால் கெட்டிதான்.


எங்கள் பக்கத்து கடைகளில் புரோட்டா ஒன்று பதினைந்து ரூபாய்க்கு விற்கிறது. ஒரு செட் முப்பது ரூபாய். நிலத்தகராறுக்கு தாயாரை கவசமாக்கி போராடும் சிறிய மாமனின் புகார் கடித ரசீதை பார்க்கும்போதெல்லாம் பசியில் அல்லாடும் அவரது இரு மகன்கள் முகம் நினைவுக்கு வந்து போகிறது. ஒரு பதிவுத்தபாலின் செலவு இருபத்தொன்பது ரூபாய் ஐம்பது பைசா மட்டுமே. நீங்கள் முப்பது ரூபாயாகவும் கொடுக்கலாம்.

மனிதர்களின் மனம் உன்னதம், குரூரம் என்ற இரண்டு திசைகளில் அமைந்த தொடமுடியாத துருவங்களைத் தொட்டுவிடும் ஆசையுடன் துடித்துக்கொண்டே இருக்கிறது.

எப்போதும் அனுமதி பெற்று துளசி இலைகளை பறித்துச்செல்லும் தாழ்த்தப்பட்டோர் இனப்பெண் இன்று, கேட்டில் போர்வை காயப்போடப்பட்டு இருந்ததால் இலைகள் அல்ல செடியையே பாதி முறித்து சென்றிருக்கிறார். எதற்காம், மாரியம்மனுக்கு துளசி இலைகளை அர்ப்பணித்து நலன்களை ஷேமநலன்களை வேண்டிக்கொள்ளத்தான்.

எனக்கு கல்யாணம் செய்துவைக்க தந்தையாரை விட உறவுக்கார அம்மாயி ஒருவர்  ஆசைப்பட்டார். அவர் இறந்த பிறகுதான் புற்றுநோய் அவரை அரித்து தின்றிருப்பது தெரிய வந்தது. எனது ஜாதகத்தில் கோள்கள் காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் இருப்பது தெரியாமல், அம்மாயி சில முயற்சிகளை செய்தார். வழக்கம் போல அவை வெற்றிகரமாக ஃபாலோஆன் ஆகி தோற்கடிக்கப்பட, அன்போடு அரவணைத்த அம்மாயி காலமானார். அவரை நினைத்துப் பார்க்க ஏதாவது மனிதர்கள் இருக்கவேண்டுமென நினைத்திருக்கிறார். ஆனால் அது நானாக இருக்க காலமே விரும்பவில்லை.

பொறாமையும் கயமைத்தனமும் கிராமத்தின் குணங்கள் என தி ஜானகிராமன் தனது சிறுகதையில் கூறியிருக்கிறார். படித்தவுடன் மறுக்கத்தான் தோன்றுகிறது. உண்மையல்லவா? எப்போதும் அப்படித்தான் தோன்றும்.

ஊர்மக்கள் ஆளுக்கொரு விறகுக்கட்டை கொடுத்தால், மூட்டும் நெருப்பு பெரிதாக எழும் என சீன பழமொழி கூறியது. பிள்ளையாருக்கு அசல் பால் ஊற்றும் கதைதான். அவன் அல்லது இவன்  பால் ஊற்றியிருப்பான் என ஊர் மொத்தமும் பச்சைத் தண்ணீரைக் கொண்டு வந்து ஊற்றியிருப்பார்கள். அதே சிந்தனைதான். இங்கு நிலப்பரப்பிற்கு ஏற்ப மாறியிருக்கிறது. சீனா குளிர்ப்பிரதேசம் இல்லையா, நெருப்பு, விறகு என்றால் செல்வராகவன் படம் போல சும்மா ஜிவ்வென்றிருக்கும்.

சுதந்திரமணியின் ஆங்கிலப் பதிப்பில் திப்புசுல்தான், கோவில்களை இடித்தார். இதைச் சொன்னால் என்னை விமர்சிக்கிறார்கள் என வலதுசாரி வரலாற்று எழுத்தாளர் இரண்டு பக்கங்களுக்கு பொங்கியிருந்தார். அதாவது, சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களை மதவாத அரசு இடித்தால், பொதுமக்கள் தவறில்லை. அன்று திப்பு நமக்குச்  செய்தார்தானே என தங்களுக்குள் சமாதானம் செய்துகொண்டு வேடிக்கை பார்க்கவேண்டும். அதைத்தான் எழுத்தாளர் இரண்டு முழு பக்கங்களிலும் சொல்ல முயன்று தடுமாறியிருக்கிறார். நேரடியாக இரண்டு வரியில் சொல்லும் விஷயத்திற்கு எதற்கு ஐயா நூல் எழுதுகிறீர்கள்?

இலவசம், கட்டணம் என இரண்டுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது. இலவசமாக இரு கண்களையும் அறுவைசிகிச்சை செய்துகொண்ட தந்தையார், ஒத்தைக் கண்ணையாவது காசு கொடுத்து ஆபரேஷன் செஞ்சிருக்கணும். அப்படி பண்ணியிருந்தா ஒரு கண்ணாவது தெளிவாக தெரியும் என வருந்தினார். நீரிழிவு, மிகு ரத்த அழுத்தம், வயது என எதுவும் அவரை சமாதானப்படுத்த முடியவில்லை.

நாமாக ஏதாவது செய்தால்தான் புகழ் கிடைக்கும் என்பதில்லை. மற்றவர்கள் செய்திருந்தால்கூட சகோதரர், நண்பர், நண்பரின் நண்பர் என எதையாவது சொல்லி அதில் சிறிதளவேனும் பங்கு போட்டுக்கொள்ளலாம் என எனது சகோதரர் தெம்புடன் நம்புகிறார். அப்படியே வாழ்கிறார்.



 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்