பாயும் பொருளாதாரம் - பொருளாதாரத்தை அறிந்தால், பொருளாதார வல்லுநர்கள் நம்மை ஏமாற்றுவதைத் தடுக்கலாம்!
பாயும் பொருளாதாரம்
பொருளாதாரம்
இந்தியாவில் ரூபாய் மதிப்பு தடுமாறிக்கொண்டிருக்கிறது. வேலையிழப்பு பரவலாகி வருகிறது. விவசாயிகள் டெல்லி எல்லையில் போராடிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் உண்ணாவிரதம் கூட இருக்கிறார்கள். எதேச்சதிகார ஆட்சியில் அகிம்சை எப்படி எடுபடும் என்று தெரியவில்லை. சுயதொழில் செய்பவர்கள் நிலைமை எப்படியோ, ஆனால், மாதச்சம்பளக்காரர்களிடம் பறிக்கும் வரிக்கொள்கை புதிதாக அமலாகிவிட்டது.
மாணவர்கள் பயன்படுத்தும் பள்ளி நோட்டு புத்தகங்களுக்கு சேவை வரி பதினெட்டு சதவீதம் என்றால், பணக்காரர்களுக்கு அத்தியாவசியமான வைரத்திற்கு ஐந்து சதவீத வரி விதிக்கப்படுகிறது. இவ்வளவு வரி தீவிரவாதம் அதிகரித்தாலும் கல்வி, மருத்துவம், தங்குமிடம், உணவு என பலவற்றுக்கும் அரசு எந்த பொறுப்பும் ஏற்காது. இதையெல்லாம் தனியார் நிறுவனங்களிடம் தள்ளிவிட்டுவிடுகிறார்கள். பொருளாதாரம் பற்றி அறிந்துகொண்டால் அதைப்பற்றிய விழிப்புணர்வைப் பெற்று நம்மை நாம் காத்துக்கொள்ள முடியும். அதைப்பற்றிய அறிமுகத் தொடர் இது.
பொருளாதாரம் என்றால் வங்கிகள், பங்குச்சந்தை, அப்புறம் வினோதமான வரைபடங்கள் என டிவி சேனல்களில் பலரும் பார்த்து பழகியிருப்போம். இரண்டு வித சுவைகளில் நான்கு கப் கேக்குகள் இருக்கின்றன. ஒரு சுவையில் இரண்டு கப் கேக்குகள். அதில் ஒரு சுவையை மட்டுமே பலரும் விரும்புகிறார்கள். இருப்பதோ நான்கு கப் கேக்குகள். ஆனால் மூன்று பேர் ஒரேவித சுவையைக் கேட்கிறார்கள். அப்போது சரியான அளவில் அவற்றை பகிர்ந்தால் விரும்புபவர்களுக்கு கேக் கிடைக்கும் அல்லவா? அதுதான் பொருளாதாரம்.
இதுகூட கொஞ்சம் குழப்பமாக இருக்கிறதுதானே? ஒருவர் ஒரு பொருளை விற்கிறார் அல்லது வாங்குகிறார். இப்படி வணிகம் நடக்கிறது. இதன் வழியாக பொருளாதாரம் என்பது உருவாகிறது. சிறியதோ பெரியதோ வணிகம் நடந்தால் அங்கு அதையொட்டிய பொருளாதாரம் உருவாகிறது.
குஜராத்தைச் சேர்ந்தவரே ஆட்சியில் இருந்தாலும் அந்த மாநில மக்கள் வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம் என சட்டவிரோதமாக செல்கிறார்கள். இதற்கு பின்னால், பொருளாதார காரணங்கள் முக்கியமாக இருக்கலாம். எப்போதுமே கலவரம் நடந்துகொண்டிருக்க கூடிய நாட்டில் வணிகம் நடக்காது. பொருளாதாரமும் சரிந்துகொண்டே இருக்கும் என அவர்கள் யோசித்திருக்கலாம். குளிரில் உறைந்து செத்தாலும் கூட அமெரிக்காவிற்கு சென்றே தீருவோம் என முடிவு செய்கிறார்கள். பல்வேறு கலாசாரம், இனம் வாழக்கூடிய இணக்கத்தன்மை அமெரிக்காவில் உள்ளது.
கிராமம், நகரம், பெருநகரம் என அனைத்தும் ஒன்றாக சேர்ந்துதான் ஒரு நாட்டின் பொருளாதாரமாக மாறுகிறது. கல்வி கற்கும் பள்ளி, சிகிச்சைக்கு செல்லும் மருத்துவமனை, உணவு உண்ணும் கடைகள் என அனைத்திலும் பணம் அடிப்படையாக உள்ளது, அதைச் சார்ந்து பொருளாதாரம் உள்ளது.
அரிசி, கோதுமை என பயிர்கள் விளைகின்றன. சில சூழ்நிலைகளில் அவை போதுமான அளவு வளராதபோது, உணவுத்தேவையில் பற்றாக்குறை ஏற்படும் என பொருளாதார வல்லுநர்கள் கணிக்கிறார்கள். இதன் விளைவாக சந்தையில் அரிசி, கோதுமைப்பொருட்களின் விலை உயரும். இதைத் தவிர்க்க அரசு நியாயவிலைக்கடைகளில், உணவுக்கழகத்தில் இருந்த பொருட்களை வழங்க கூடும். வலதுசாரி அரசு என்றால், தானியங்களை சந்தையில் குறிப்பிட்ட விலைக்கு விற்கலாம். எகனாமிக் டைம்ஸ், பிசினஸ் ஸ்டாண்டர்ட் ஆகிய நாளிதழ்களில் இதுபோன்ற கருத்துகளை நீங்கள் வாசிக்கலாம்.
விலை உயர்வுக்கு அரசு நியாய விலைக்கடையை அல்லது சந்தையில் தனது தானியங்களை விலைக்கு விற்பதாக கூட செயல்பாடுகள் நடக்கலாம். சந்தையில் அரிசி, கோதுமை விலை உயர்வு என்பது அரசு நடவடிக்கை எடுக்கவே இல்லையென்றாலும் குறிப்பிட்ட காலத்தில் விலை உயர்வு கட்டுக்குள் வரும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கருத்துகளை கூறுவார்கள். ஒருமுறை இங்கிலாந்து பொருளாதார வல்லுநர் ஜோன் ராபின்சன், பொருளாதார வல்லுநர்களிடமிருந்து ஏமாறாமல் இருக்க நீங்கள் பொருளாதாரத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும் என அங்கதமாக குறிப்பிட்ட சம்பவமும் நடந்தது.
கருத்துகள்
கருத்துரையிடுக