பொருட்களின் விலையே அதன் விற்பனையை தீர்மானிக்கும் காரணி - பாயும் பொருளாதாரம்

 



பாயும் பொருளாதாரம்

ஆதிகாலத்தில் மனிதர்களுக்குத் தேவையாக இருந்தது உணவு, உடை, இருப்பிடம். இன்றும் கூட அதே தேவைக்காகவே பெரும்பாலான மக்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். உழைக்கிறார்கள்தான். ஆனால், அதன் பயன் அவர்களுக்கு கிடைப்பதில்லை. முதலாளித்துவ தத்துவத்தில், அரசு பெரும் சக்தியாக இருந்து மக்களிடமிருந்து பணத்தை வரியாக பிடு்ங்கி பெரு நிறுவனங்களுக்கு கடனாக வழங்கிவிடுகிறது. வேலைவாய்ப்பு, வளர்ச்சி என ஏதேதோ பிதற்றல்கள்... மனிதர்களின் அடிப்படைத் தேவைகள் இன்றுவரை அப்படியே உள்ளன. கூடுதலாக, அவை பின்வரும் தலைமுறையினருக்காகவும் சேர்த்துவைக்கத் தொடங்கியுள்ளனர்.

நீர், காடு, வன விலங்குகள், பாறைகள்,மரம் செடி கொடிகள், மணல், எண்ணெய், தாது, எரிவாயு என அனைத்துமே தீர்ந்துவிடக்கூடிய வளங்கள். அவற்றை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். நீரை மழை பெய்யும்போது குட்டைகள், ஏரிகளை தூர்வாரி வைத்து சேமித்தால் நிலத்தடி நீர் உயரும். இதன்விளைவாக குடிநீர் பற்றாக்குறை தீரும். அப்படி இல்லையெனில், பற்றாக்குறை உருவாகும். பட்டினி, பஞ்சம் எல்லாமே இப்படி உருவானவைதான். நடப்பு காலத்தில் வணிகர்கள் செயற்கையாக பொருட்கள் தட்டுப்பாட்டை உருவாக்குகிறார்கள்.

கனிமவளங்கள் நிரம்பிய பகுதி. அவற்றை வெட்டியெடுக்க மக்கள் விரும்பாமல் போராடுகிறார்களா? ஊடகங்களுக்கு காசு கொடுத்துவிட்டு மக்களை தீவிரவாதி, நக்சல், நகர நக்சல், மாவோயிஸ்ட்டுகள், தேசவிரோதி எனபெயர் சொல்லி அரசே படுகொலை செய்ய முற்படுகிறது. ஆண்கள் என்றால் இப்படி. ஆதிவாசி பெண்கள் என்றால் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டு, விபச்சாரி என பட்டம் சூட்டப்படும். கைக்கூலி ஊடகங்கள் இப்பணியை தலைமேல் வைத்து நிறைவேற்றுகின்றன.

காட்டில் மரம் ஒன்றை வெட்டுகிறார்கள் என கொள்வோம். அதைப் பயன்படுத்தி இசைக்கருவி செய்யலாம். பிளந்தால் விறகு, குளிருக்கு எரிக்கலாம். கருவிகள், ஆயுதங்கள் செய்யலாம். ஆனால் இவற்றில் ஏதேனும் ஒன்றைத்தான் செய்யமுடியும்.எனவே, எது அப்போதைக்கு முக்கியம் என நினைக்கிறோமோ அதைச் செய்யலாம்.

தினைப்பயிரை விளைவித்து பறவைகள் தின்னாமல் அல்லது ஓரளவுக்கேனும் பாதுகாத்து அறுத்தால்தான் தினைமாவு உணவாக கிடைக்கும். தேனும் அப்படித்தான். எது அடிப்படையோ அதற்கு முக்கியத்துவம் தருவது முக்கியம்.

காட்டில் வசிக்கிறீர்கள் என்றால், உங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேலி அமைத்துக்கொள்வது முக்கியம். மரங்களை பிளந்து வேலியை கட்டமைக்கலாம். அதைக் கட்டுவதற்கு பணியாளர்கள் இருந்தால் அவர்களது உழைப்பிற்கு சம்பளம் தரவேண்டும். தீர்வு, அதற்கான ஆதாரம், உழைப்பு, கருவிகள் ஆகியவை ஒரு செயலுக்கு முக்கியமானவை.

உடைகளை தைப்பது, கட்டுமானங்களை உருவாக்குவது பிறகு அதை விற்பது ஒருவகை திறமை. வணிகம் எனலாம். அதைப்போலவே குழந்தை வளர்ப்பு, அவர்களுக்கான கல்வி வழங்குவது, குறிப்பிட்ட மனிதர்களை, சொத்துகளை பாதுகாப்பது கூட சேவைதான். இவையும் சந்தையில் கட்டணம் செலுத்திப் பெறவேண்டியவைதான்.

குறிப்பிட்ட தேவைக்கு மேல் உற்பத்தி சென்றால் அதை உபரி எனலாம். பொதுவாக ஒருவர் தனது தேவைக்கு போக அதிகமாக உள்ளதையே வணிகத்திற்கு கொண்டு செல்வார்கள். பண்டமாற்றுமுறையில் பொருட்கள் பரிமாறக்கொள்ளப்பட்டன. இப்போதுதான் ரூபாய் நோட்டில் காந்தி சிரிப்புடன் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. வெளிநாடுகளில் தொழில் இருந்தால் அங்கு ஒரு வங்கிக்கணக்கு தொடங்கி அதில் இருந்து உள்நாட்டு வங்கிக் கணக்கிற்கு மாற்றிக்கொள்ளும் வசதிகள் வந்துவிட்டன.

உற்பத்தி, வணிகம், நுகர்வு என அனைத்தும் சேர்ந்துதான் பொருளாதாரம்.

சாதாரணமாக ஒரு பாறை உள்ளது. அதற்கு பெரிய மதிப்பு கிடையாது. ஆனால் அதில் புடைப்பு சிற்பம் செய்தால் அதற்கு ஒரு மதிப்பு கிடைக்கிறது.சிற்பிகள் செய்யும் சிலைகளை, சிற்பங்களை விற்க உலகமெங்கும் சந்தைகள் உள்ளன. அகோரா, சிசாங்,சுக்வா என இவையெல்லாமே தொன்மையான சந்தைகளைக் குறிப்பிடுகின்றன.

கடைவீதியில் உள்ள கடைகளைத் தேடி வாங்கலாம். இணையத்தில் உள்ள அமேசான் ஹால், டேமு ஆகிய வலைத்தளங்களில் பதிவு செய்து வாங்கலாம். குறிப்பிட்ட தனிநபர்களிடம் விலை பேசி பொருட்களை வாங்கலாம். அனைத்து ஊர்களிலும் கறுப்புச்சந்தை இருக்கும். இங்கு, சட்டவிரோதமாக அனைத்துப் பொருட்களும் விற்கப்படும். பங்குச்சந்தை என்பது அரசே பகிரங்கமாக நடத்தும் சூதாட்ட மையம். இங்கு நிறுவனங்கள் பங்குகளை வெளியிட்டு நிதியைத் திரட்டலாம். இதில் மக்கள் பங்கேற்கலாம்.

சங்கீதா என்ற ஹோட்டல் இருக்கிறது. அங்கு காலை உணவு ஐம்பது ரூபாய்க்கு தருகிறார்கள். அதில் இட்லி, பொங்கல், தோசை அல்லது பூரி, காபி என அனைத்தும் அடங்கும். ஒரேபிளேட்டில் வைத்து கொடுத்துவிடுவார்கள். இதற்கான டிமாண்ட் பொருட்கள் தரமாக இருக்கிறது என்பதைவிட விலை குறைவாக இருப்பது காரணமாகவே உருவாகிறது. அதாவது விலை, தேவை. விலை குறைவாக வைத்தால் அந்தப் பொருட்கள் வேகமாக விற்கும். அதிக விலை வைத்தால் பொருட்கள் வேகமாக விற்காது. ஆனால் விற்கும். அளவு குறைவாக இருக்கும்.

போட்டி அறிவித்து பரிசு என்பதைக் கூறவில்லை என்றால் அங்கு போட்டியோ, பங்கேற்போ இருக்காது. ஆனால் பணப்பரிசு அறிவித்துப் பாருங்கள். அதிகளவு பங்கேற்பாளர்கள் வருவார்கள். பணம் என்பது அனைவரின் வாழ்க்கையில் அல்டிமேட்டான விஷயம். பென்ஸ் காரில் வந்து பணம் முக்கியமல்ல என சிலர் கூறுவார்கள். அதைப்பற்றி நாம் பெரிதாக கவலைகொள்ளத் தேவையில்லை. அவர்களுடையே தேவை வேறாக மாறியிருக்கும்.


அன்னாசிப் பழத்தை ஒருவர் விற்கிறார் என வைத்துக்கொள்வோம். அதிக பழங்களை வைத்திருக்கிறார். பெரிதாக விற்கவில்லை. அப்போது அவர் விலையைக் குறைக்க முயல்வார். அதேசமயம் பழங்கள் வரத்து குறைவாக உள்ளது. மக்கள் அதிகம் பேர் பழத்தை கேட்டு வருகிறார்கள் என்றால் பழத்தின் விலையை அதிகரிக்க வியாபாரி முனைவார். இதை ஈக்குலிபிரியம் என்று குறிப்பிடுகிறார்கள்.

மக்களிடம் கொள்ளையடிக்க முனையாமல் குறிப்பிட்ட விலையை வைத்தால், வியாபாரிக்கும் வியாபாரம் நடக்கும். நிறைய மக்களால் பழங்களை வாங்க முடியும். அந்த விலையைக் கண்டுபிடித்தால் விற்பனையாளருக்கு பழங்கள் சேதமாகாது. 





thanks

usborne.com

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்