வங்கிப் பணத்தைப் பார்த்தால் உலகை மறந்துபோகும் நாயகன்!
வங்கிப் பணத்தைப் பார்த்தால் உலகை மறந்துபோகும் நாயகன்!
ஜீப்ரா
சத்யதேவ், பிபிஎஸ், சத்யா, தாலி தனஞ்செயா
தெலுங்கு
இதுவும் ஒரு வங்கியை ஏமாற்றும் அதிகாரியைப் பற்றிய கதை. அதாவது வங்கிக்குள்ளே இருந்துகொண்டே ஊழலை எளிதாக கண்டுபிடிக்காத வகையில் செய்கிறார். அப்படி செய்யும்போது, மாஃபியா டான் ஒருவரிடம் மாட்டிக்கொண்டு ஐந்து கோடியை நான்கு நாட்களில் திரட்டுமாறு மிரட்டப்படுகிறார். அதை நாயகன் எப்படி சமாளித்தார் என்பதே கதை.
இயக்குநர் ஈஸ்வர கார்த்திக் நம்பிக்கையுடன் படத்தை எடுத்திருக்கிறார். வணிக ரீதியான குத்துப்பாட்டு உண்டு. நாயகி பவானியுடன் அடல்ஸ் ஒன்லி வசனங்களை வைத்தே காதலை சொல்லிவிட்டு அடுத்த விஷயத்திற்கு செல்கிறார்கள். பிரியா அக்கட தேசத்தில் காட்டும் தாராளம் பொறாமையாக உள்ளது. விஷாலுக்கு அம்மாவாக நடித்தே சாதனை செய்துவிட்டவரை என்ன சொல்வது?
நாயகன் சூர்யா, அபார்ட்மென்ட் ஒன்றை காசுக்கு வாங்கி நீரிழிவு நோய் வந்த அம்மாவை குடிவைக்க ஆசைப்படுகிறார். அதேநேரம், இன்னொரு வங்கியில் வேலை செய்யும் காதலியைம் மணக்க நினைக்கிறார். அதற்கு காசு வேண்டுமே... அதற்கு வங்கியில் உள்ள சட்ட திட்ட ஓட்டைகளை கற்று வைத்திருக்கிறார். காதலிக்கு திருமணமானபிறகு தனியாக ஆடைக்கென கடைவைத்து நடத்தவே இஷ்டம். வங்கிப் பணியில் தொடர்வதில் விருப்பமில்லை. எனவே, நாயகன் தனது அறிவைப் பயன்படுத்தி காசை சம்பாதித்து தனது நண்பன், காதலி என அனைவரோடும் சந்தோஷமாக இருக்க நினைக்கிறான். அப்படி சூசா என்பவரின் கணக்கில் இருந்து நான்கு லட்சம் பணத்தை எடுக்கிறார். அதற்குப் பிறகு, அவரது கணக்கில் ஐந்து கோடி வந்து அமர்கிறது. எப்படி என நாயகன் கண்டுபிடிக்கப் போகிறார். அதில்தான் எல்லாமே அடங்கியுள்ளது.
உடல் ஊனமான பெண்தான் அனைத்திற்கும் காரணமாக இருக்கிறார். அதை யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. ஊனமானவர் எளிதாக பிறரின் அனுதாபத்தை சம்பாதிக்க முடியும். இந்த பெண்ணால் நாயகன் வம்பில் மாட்டிக்கொள்கிறார். நாயகனுக்கு முதலிலேயே ஊனமான பெண்தான் பிரச்னைக்கு காரணம் என்பதை இறுதியாகவே காட்டுகிறார்கள்.
தனஞ்செயாவின் அறிமுகம், சண்டைக்காட்சி எல்லாமே சிறப்பாக உள்ளது. சண்டைக்காட்சியை இன்னும் அழகாக ஆக்ரோஷமாக படம்பிடித்திருக்கலாம். அவருக்கு அடிதடியில் இருந்து விடுதலையாகி அரசியலுக்கு செல்லும் ஆசை உள்ளது சரி. அதற்கு அவர் செய்யும் விஷயங்கள், முழுக்க சரியானவை கிடையாது. ரத்தக்களறியானவைதான். ஏறத்தாழ தொழிலதிபர், அரசை கட்டுப்படுத்துவதை சொல்லியிருக்கிறார்கள். எலன் மஸ்க் நிழல் அதிபராக அமெரிக்காவில் இருக்கிற நிலையை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்.
நாயகியின் வங்கியில் அவள் தவறாக தட்டச்சு செய்த விவகாரத்தை நாயகன் சரிசெய்து தருகிறான். அதிலேயே அவனது விதிகளை மீறும், காசு சம்பாதிக்கும் பேராசை தெரிந்துவிடுகிறது. நாயகி, இனி அப்படி செய்யாதே என்று சொன்னாலும் அவளும் பின்னர் அதுபோல நிதி மோசடியில் இணைந்து கொள்கிறாள் என்பதுதான் பரிதாபம்.
படம் வங்கிக்கொள்ளை என சாகச அனுபவத்தை தேர்ந்தெடுப்பதால் வயது வந்தோருக்கான வசனக்காட்சிகளைத் தவிர்த்து வேறு ஏதும் செய்ய வாய்ப்பில்லை. நேரடியாக கதைக்குள் வந்துவிடுகிறார்கள். சத்யதேவ் சூர்யா பாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார்.
நினைவுகொள்ளக்கூடிய வசனங்கள் என கூற ஏதும் இல்லை. காட்சிகளை அழகாக மாற்ற மெனக்கெட்டிருக்கிறார்கள். மக்களுக்காக நாயகன் தொடர்ச்சியாக வங்கியில் நிதி முறைகேடுகளை செய்வதாக காட்டி படத்தை முடித்திருக்கிறார்கள். தெலுங்கில் படம் வெற்றி என நாயகனே பேட்டியொன்றில் கூறினார். இயக்குநர் ஈஸ்வர கார்த்திக் திரைக்கதையை பரபரப்பாக அமைத்து வெற்றி கண்டிருக்கிறார். கௌரவ தோற்றத்தில் நடித்துள்ள பாபா சத்யராஜ் ஆச்சரியம் தருகிறார். ஒருகட்டத்தில் மாபியா டான், பாபா, சூர்யா என அனைவரும் கூட்டணி அமைத்து எதிரிகளை வெல்கிறார்கள். அந்த கூட்டணி அப்படியே தொடர்வதாக படம் காட்டுகிறது. நல்லது.
ரிசர்வ் வங்கி, செயல்பாட்டில் உள்ள வங்கிகளில் இரண்டு வங்கிகள் மட்டுமே பாதுகாப்பானவை என்று கூறியுள்ளது. பதினான்கு வங்கிகள் உள்ள நாட்டில் இப்படி சொல்வது எதற்காக? ஜீப்ரா பார்த்தால் புரிந்துகொள்ளலாம்.
கோமாளிமேடை குழு
கருத்துகள்
கருத்துரையிடுக