அஞ்சலி - எம்டி வாசுதேவன் நாயர்

 



அஞ்சலி - எம்டி வாசுதேவன் நாயர்

மாத்ருபூமி வார இதழின் முன்னாள் ஆசிரியர், எழுத்தாளர் எம்டி வாசுதேவன் நாயர் மறைந்திருக்கிறார். இவரது முழுப்பெயர் மாதத் தேக்கப்பட் வாசுதேவன் நாயர். சுருக்கமாக எம்டி வாசுதேவன் நாயர். மலபார் மாவட்டத்திலுள்ள பொன்னானி தாலுக்காவின் கூடலூர் கிராமத்தில் 1933ஆம் ஆண்டு ஜூலை பதிமூன்றாம் தேதி பிறந்தார். தந்தை நாராயணன் இலங்கையில் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்தார்.

எம்டி, மலபார் மாவட்ட கல்வி வாரியம் நடத்திய பள்ளிகளில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்தார். பாலக்காட்டிலுள்ள எம்பி டுட்டோரியலிலும் கூட வேலை செய்திருக்கிறார். 1956ஆம் ஆண்டு கோழிக்கோட்டிலுள்ள மாத்ருபூமி வார இதழில் உதவி ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார். இங்கு ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். எம்டி மூலமாக அடையாளம் காணப்பட்ட எழுத்தாளர்களில் புன்னத்தில் குஞ்சப்துல்லா, என்எஸ் மாதவன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். எம்டி வாசுதேவன் நாயர், தீவிரமான இலக்கிய எழுத்துக்கு சொந்தக்காரர்.

வளர்த்துமிருகங்கள் என்ற சிறுகதை மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். அடுத்து வெளியானதுதான் நாலுகெட்டு என்ற நாவல். இந்த நாவலில் நாயர் குடும்பம் எப்படி மெல்ல அழிவைச் சந்தித்தது என்பதை விளக்கி எழுதியிருப்பார். 1958இல் வெளியான இந்த நூலுக்காக கேரள சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது. 1970ஆம் ஆண்டு காலம் என்ற நாவலுக்கு சிறந்த நாவல் பிரிவில் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது. 1982ஆம் ஆண்டில் கோபுரனாதாயில் என்ற நாடகத்திற்கு கேரள சாகித்திய விருது வழங்கப்பட்டது. மகாபாரதத்தை பீமனின் பார்வையில் பார்க்கும் ரண்டாமூலம் என்ற நாவலுக்கு 1985ஆம் ஆண்டு வயலார் பரிசு கிடைத்தது.

1965ஆம் ஆண்டு, எம்டி தனது சிறுகதையை அடிப்படையாக வைத்து முறைப்பெண்ணு என்ற திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுதினார். இதைத்தொடர்ந்து ஒரு வடக்கன் வீரகதா, பரிணாயம், சதயம் என நிறைய படங்களுக்கு திரைக்கதை எழுதினார். தோராயமாக ஐம்பது திரைப்படங்களுக்கு மேல் இருக்கும்.  1973ஆம்ஆண்டு இவர் இயக்கிய நிர்மால்யம் திரைப்படத்திற்காக தேசிய விருதைப் பெற்றார். மொத்தம் ஆறு திரைப்படங்களை இயக்கியுள்ளார். திரைப்பட இயக்கத்தை விட கதை, திரைக்கதை எழுதுவதை முக்கியமாக கருதினார்.

1995ஆம் ஆண்டு ஞானபீட விருதைப் பெற்றார் எம்டி வாசுதேவன். 2011ஆம் ஆண்டு கேரள அரசின் எழுத்தச்சன் விருதையும், 2005ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதையும் பெற்றார். 2022ஆம் ஆண்டு கேரள ஜோதி எனும் மதிப்புக்குரிய கேரள மாநில அரசும் வழங்கும் உயரிய விருதைப் பெற்றார்.

தனது திரைப்பட பங்களிப்பிற்காக 21 மாநில அரசு விருதுகளை வென்றுள்ளார். ஏழு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். ஒன்பது நாவல்கள், பத்தொன்பது சிறுகதை தொகுப்புகள், கட்டுரைகள் என இலக்கியத்திற்கு பங்களித்துள்ளார்.

நன்றி
தி இந்து
a life devoted to literature,films.




 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்