காவல்துறை ஆட்களை ஆட்டுவிக்கும் கிளர்க்கின் உளவியல் விளையாட்டு!
ஹன்ட்
மலையாளம்
மஞ்சு வாரியர், இந்திரஜித், குஞ்சாகோ கோபன்
சினிமா நடிகை ஒருவர் திடீரென காணாமல் போகிறார். அதுபற்றி விசாரிக்கும்போது, நீதிமன்ற கிளர்க் ஒருவர் பிடிபடுகிறார். விசாரித்தால், அவர் தனது மனைவியைக் கூட கொன்றவர் என தெரியவருகிறது. கடத்திய நடிகை, அவரது கூட இருந்தவர் என இருவரையும் கொன்றுவிட்டேன். ஆனால் புதைத்த இடத்தை மறந்துவிட்டதாக கூறுகிறார். இந்த விசாரணை சிறிபாலா என்ற ஐபிஎஸ் அதிகாரிக்கு பெரும் சோதனையாக மாறுகிறது. எனவே, நண்பரான சைலக்ஸ் இப்ராகிம் என்பவரின் உதவியை நாடுகிறார்.
கிளர்க் விசாரணையின்போது சொல்லும் தகவல்களால் குழந்தையில்லாத சைலக்ஸின் வாழ்க்கையில் நிறைய குழப்பங்கள் வருகின்றன. குறிப்பாக, மனைவி மீது தவறான உறவு உள்ளதோ என சந்தேகப்படத் தொடங்குகிறார். சிறிபாலாவுக்கு கொரியரில் சில தகவல்கள் வருகின்றன. அதன்படி தேடியதில் அவரது அப்பா, பணியின்போது விபத்துக்குள்ளானதில் நண்பர் சைலக்சின் பங்கு இருப்பது தெரிகிறது. நட்பில் உள்ள துரோகம் வலி அதிகமா, காதலித்த மனைவி தனக்கு துரோகம் செய்துவிட்டதால் கொன்றுவிட்டேன் என்று கூறும் கிளர்க்கின் வாழ்க்கையில் வலி அதிகமா என சிறிபாலா புரிந்துகொள்ள முனைகிறார்.
ஸ்லோபர்ன் வகையைச் சேர்ந்த படம். நிதானமாக நகர்கிற படம் அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்காது. ஆனால் பொறுமையைக் கடைபிடித்தால் சிறந்த மர்ம தேடுதல் படத்தைப் பார்த்த மகிழ்ச்சி கிடைக்கும்.
ஒரு சாமானியன், அரசு அமைப்பால் ஏய்க்கப்பட்டு அதை தனது புத்திக்கூர்மையால் பழிவாங்குகிறான். அதற்கு அரசின் வேட்டைநாய் போல உள்ள காவல்துறையைப் பயன்படுத்திக்கொள்கிறான். அவனது புத்திக்கூர்மை எப்படிப்பட்டது என்றால், அவன் யாரை பயன்படுத்திக்கொள்கிறானோ அவர்களுக்கே தான் இப்படி பயன்படுகிறோம் என்று தெரியாது. நீதியல்ல. நீதி விசாரணை முடிந்து தண்டனையை நிறைவேற்ற காவல்துறை ஆட்களேயே பயன்படுத்திக்கொள்வது படத்தை தனித்துவமாக மாற்றுகிறது.
சைலக்ஸ், முன்கோபம் கொண்ட மனிதர். அதனால், துறைசார்ந்த பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறார். இல்லறவாழ்க்கையில் அவருக்கு சிக்கல் உள்ளது. மலட்டுத்தன்மை காரணமாக குழந்தை கிடையாது. தத்து எடுக்க முயல்கிறார். அவரது மனைவி கூட ஓரிடத்தில் மலட்டுத்தன்மை என அவரைக் குத்திக்காட்டுகிறார். இதெல்லாம் சேர்ந்து சைலக்ஸை மனைவி மீது சந்தேகப்பட வைக்கிறது. அதன் பொருட்டு, அவர் ஒரு கொலையைச் செய்கிறார். அந்த கொலை பற்றிய வீடியோ சிறிபாலாவிற்கு வந்துவிடுகிறது. ஆனால், அதை அவர் மேலதிகாரிக்கு கூறாமல் தனியாக விசாரிக்கிறார். நெருங்கிய நண்பர் இல்லையா?
சிறிபாலா, கிளர்க்கை கூட்டிக்கொண்டுபோய் நடிகையின் உடலைத் தேட முயல்கிறார். அப்படி செல்லும் வழியில் காரில் ஏதோ ஒரு விலங்கு மீது மோதி விடுகிறார். அது யார் என்பதை இறுதியாக கூறுகிறார்கள். அதுதான் திருப்புமுனைக் காட்சி. அமைப்பு ரீதியாக குற்றங்களை செய்தால் மட்டுமே வெளிவராமல் இருக்கும் என இயக்குநர் சொல்ல முயற்சித்திருக்கிறார். எளிமையான ஒருவனுக்கு அரசமைப்பில் நீதி கிடைக்க வாய்ப்பு வழி ஏதுமில்லை. தொடர்புகள், அரசியல் செல்வாக்கு மட்டுமே நீதியைப் பெற்றுத்தரும் என்ற நிலை உருவாகிவிட்டது. கிளர்க்கின் மனைவி இறந்த சம்பவம், இன்னொருவரால் திட்டமிடப்பட்டு செய்யப்பட்டது. ஆனால், கொலைகாரர்கள் செல்வாக்கானவர்கள் என்பதால் தவறி கீழே விழுந்தார் என கூற பிணக்கூராய்வு மருத்துவருக்கு அழுத்தம் தரப்படுகிறது. அவரும் அப்படியே எழுதிக்கொடுத்துவிடுகிறார். உண்மை சிறிபாலாவிற்கு தெரியும்போது, அவருமே ஒரு குற்றத்தில் தொடர்பு கொண்டுள்ளவராக மாறிவிடுகிறார். இனி செய்ய என்ன இருக்கிறது.
பள்ளிகளில் பிள்ளைகளை அடித்து சித்திரவதை செய்யும் குரூர முறைகளைப் பற்றி படம் கூறியுள்ளது. தனியார் பள்ளிகளின் லாபவெறி, சிறுபிள்ளையின் உயிரைக் குடித்துவிடுகிறது. ஆனால் அதைக்கேள்வி கேட்கும் பெற்றோர் அதிகாரத்தால், பணபலத்தால் மௌனமாக இருக்கும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். ஒருவர் மனநோயாளி என சான்றளிக்கப்படுகிறார். அவரது மனைவி போதை ஊசி போட்டு வீட்டில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார். இதைபற்றி ஊடகங்கள், காவல்துறை என எங்கும் எந்த பேச்சுமில்லை.
தன் வாழ்க்கையை அடமானம் வைத்தாவது பிள்ளை, மனைவி இறந்துபோனதற்கு பழிவாங்குகிறேன் என கிளர்க் கிளம்புகிறார். அதை வெற்றிகரமாக செய்துமுடிக்கிறார் என்பதே கதை. அவரது கையில் சதுரங்க காய்களாக மாறுகிறார்கள் சைலக்ஸ், சிறிபாலா.
ஊழல், தன்மானமின்மை, சுயமரியாதையின்மை காரணமாக ஒட்டுமொத்த சமூக அமைப்பு எப்படி உருக்குலைந்து போயுள்ளது என்பதற்கான சான்றாகவே படத்தின் கதையைக் கருதவேண்டும். அதையும் கிளர்க் ஓரிடத்தில் சொல்கிறார். நானும் மனைவியும் மட்டும்தான் பிள்ளையைத் தேடிக்கொண்டிருந்தோம் என்று. நடிகை மீட்கப்பட்டபிறகு, கிளர்க்கை ஓராண்டு மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அப்போது, அவர் வலியை வேதனையை உள்ளடக்கிய குறுஞ்சிரிப்போடு காவல்துறை ஜீப்பில் ஏறி உட்காரும் காட்சி மறக்க முடியாதது. இறுதியாக சிறிபாலா, தனியார் பள்ளியில் இறந்த குழந்தையின் வழக்கை மீண்டும் திறந்து விசாரிக்கிறார் என்பதோடு கதை நிறைவடைகிறது.
கோமாளிமேடை குழு
கருத்துகள்
கருத்துரையிடுக