ரோனி சிந்தனைகள் - நன்மையின் இன்னொரு பரிமாணம்!

 

 









 

ரோனி சிந்தனைகள்

நம் கையை விட்டு அனைத்தும் விலகிப்போய்விட்ட நிலையில் விரக்தியில் சொல்லும் வார்தைகள்தான் எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துப்பான் என்பது.

ஒருவர் உங்களுக்கு உதவுகிறார் என்றால் அவர் நல்லவராக இருக்கவேண்டுமென்பதில்லை. முன்னர் உங்களுக்கு செய்த கெடுதலுக்கு பரிகாரமாக நன்மையைச் செய்யக்கூடும்.

பணத்திற்கு வாய் உண்டு. காதுகள் கிடையாது. அதனால்தான் காசு இருக்கிறவர்கள், தன்னால் யாராவது எளியோர் செத்தால்கூட கவலையேபடாமல் கேக் வெட்டி சாப்பிடவும், மது அருந்திக் கொண்டாடவும் முடிகிறது. கைது செய்ய காக்கிப்படை வந்தாலும் டீ குடித்தபடி மாட்லாடலாம். கையில் காசுள்ளவரையில் இங்கு எதுவும் தவறே கிடையாது.

சோளப்பொரிக்கு வரி என அலறவேண்டியதில்லை. குறைந்த வரி கொண்ட சோளப்பொரியை வாங்கிச் சாப்பிடுங்கள் என நிதி அமைச்சர் விரைவில் கூறி மக்களுக்கு வழிகாட்டக்கூடும். சாப்பிட சோறு இல்லையா, கோதுமையில் ரொட்டி சுட்டு சாப்பிடுங்கள் என அரசு கூறக்கூடிய நாள் அருகில் உள்ளது.

மேல், நடு, கீழ் என பல்வேறு வர்க்கங்கள் உள்ளனவே என சிலர் வருத்தப்படுகிறார்கள். பின்னே அவர்களை வைத்துத்தானே அரசுகளும் திட்டங்களைத் தீட்டி பிழைக்கின்றன. அதற்காகவாவது அவர்கள் வேண்டாமா?

கோபத்தோடு எழுந்தால் நஷ்டத்தோடு உட்காருவார்கள் என கூறுகிறார்கள். அப்படி உட்காருபவர்களிடம் கோவணம் மட்டும்தான் இருக்கிறது. அதையும் பிடுங்க முயன்றால் கோபம் வராதா என்ன?

மக்களை ஒன்றுபடுத்த உதவுவது முன்னர் தங்கம். இப்போது கரன்சி. நாளை கிரிப்டோ கரன்சி. நிச்சயமாக தத்துவம் அல்ல.

தன்னைவிட பலவீனமான, பாதுகாப்பு இல்லாத உயிர்களை பார்த்தவுடனே மனிதர்களுக்கு ஏளனமும் இளக்காரச்சிரிப்பும் காலந்தோறும் தோன்றிக்கொண்டே இருக்கிறது.

காந்தி எவ்வளவு நகல்களாக கைகளில் சிரிக்கிறாரோ, அந்தளவு உங்களுக்கான தண்டனை தள்ளிப்போடலாம். முடிந்தால் இம்முறை மக்களையல்லாது, நீதிதேவதையைக் கூட மோதிச்சாய்க்கலாம். தவறில்லை.

துரோகம் செய்வது எளிதானது கிடையாது. நம்பிக்கையை நிதானமாக வளர்த்து சரியான சமயத்தில் அதற்கான பயன்களை முழுமையாக ஒரு சொட்டு கூட விடாமல் பெறவேண்டும். அதுதான் துரோகத்தின் அதிருசி.

போலிச்செய்திகள் வெறும் குறுஞ்செய்தி தளங்களில் மட்டும் இருந்தால் போதாது என அரசு ஓடிடி தளம் ஒன்றைத் தொடங்கியுள்ளது. போலிச்செய்திகள் இனி ஓயாது என்பதை நினைவுபடுத்துவது போல அதற்கு அலைகள் என பெயரிட்டிருக்கிறார்கள். அலைகளுக்கு ஓய்வேது?

புத்தகத்தின் விலையைக்கூட நைசாக நன்கொடை என்று சொல்லி விற்று காசு பார்க்கிறார்கள். இந்த வகையில் நன்கொடைகளுக்கு கூட தனிவரியை அரசு அமல்படுத்தலாம். கோவில் உண்டியல்களுக்கும் வரி போடலாம். நிறைய காசு பார்க்கலாம். 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்