ரோனி சிந்தனைகள் - மண்ணிலே சொர்க்கம் கிடைக்கும்!
ரோனி சிந்தனைகள்
குடியுரிமை அமைப்புகள், பழங்குடி மக்களுக்கான அமைப்புகளை தடை செய்துவிட்டு, நிதியுதவியை நிறுத்திவிடுவது சர்வாதிகாரத்திற்கு உதவும். பின்னே, இவர்கள் போராட தொடங்கினால் தீவிரவாத இயக்கங்களுக்கான தடையை நீக்கி செயல்படுவது எப்படியாம்?
மக்களுக்கு சொர்க்கத்தை காட்டுவது ஆட்சியாளர்களுக்கு மகத்தான லட்சியக்கனவாக இருக்கக்கூடும். ஆனால், சொர்க்கத்தைப் பார்த்தால் உயிரை விட வேண்டியிருக்குமே என மக்கள் புரிந்துகொண்டால் சரிதான்...
குற்றங்களை செய்தீர்களே என யாராவது புகார் சொல்கிறார்களா, பதற வேண்டாம். அப்படி சொல்பவர்களையும் குற்றத்தில் பங்குகொள்ள வைத்துவிட்டால். குற்றச்சாட்டுகளே எழாது. எப்போதும் போல ஊழலை செவ்வனே கர்மயோகியாக தொடரலாம்.
உண்மைக்குத்தான் நிரூபணம் தேவை. பொய்க்கு கிடையாது. பொய்யால் ஏற்படும் குழப்பத்தைப் பயன்படுத்தினாலே வெற்றிதான் என்பதை பொய் கூறுபவர்கள் தெளிவாக புரிந்துவைத்திருக்கிறார்கள்.
நல்லவனை கெட்டவனாக காட்டுவதற்கு இழிவுபடுத்துவதற்கு விசுவாச ஊடகங்கள் ஏராளம் உண்டு. அரசு, அவர்களுக்கு சொல்லாமல் விட்ட இன்னொரு வேலை, நல்லவனாக வேடமிட்டு மோசமானவர்கள் செய்யும் மோசடி வேலைகளைப் பற்றி சொல்லாமல் மௌனம் காப்பது. ஊடகங்கள் இதை யாரும் கற்று்க்கொடுக்காமலேயே செய்கிறார்கள். பரிணாம வளர்ச்சி இதுதான்.
சொன்ன விஷயங்கள் அல்ல சொல்லாமல் விட்டதில்தான் ஏராளமான உண்மைகள் புதைந்து கிடக்கின்றன.
பசுவை புனிதமாக காட்ட அதன் சாணியைக் கொண்டு ரயிலை உருவாக்கும் திட்டத்தைக் கூட மதவாதிகள் செய்யலாம். இதைப்பற்றிய பகடிக்கதையை தி ஜானகிராமன் எப்போதோ எழுதிவிட்டார். உண்மையில், அக்கதையில் கோமாளித்தனமான அறிவியலாளரின் பரிசோதனை, அரசின் நிர்வாக கோளாறுகள் அங்கதமாக கூறப்பட்டிருக்கும். ஆனால், அதெல்லாம் இன்று உண்மையாகவே நிறைவேற வாய்ப்புள்ளது என்பதை எழுத்தாளரே உயிரோடு இரு்ந்தாலும் நம்பியிருக்க மாட்டார்.
எந்த நாசகார செயலாக இருந்தாலும் அதை சொல்லும்போது உத்வேகம் தொனிக்கும்படி சுலோகன் ஒன்றை வைத்துவிட வேண்டும். சிலருக்கு கோஷத்தின் உள்நோக்கத்தை பற்றி அக்கறை இருக்காது. மற்றவர்களுக்கு அது பற்றி ஒன்றுமே தெரியாது.
ஞானம் என்பது அடைந்தவர்களுக்கு விளக்கத் தெரியாது. அறியாதவர்களுக்கு அதுபற்றிய எண்ணம், கருத்து என ஏதும் இருக்காது.
வீழ்ச்சி என்பது வெளியில் தெரிவதாக நடைபெறும் விஷயங்களில் மட்டுமல்ல. உள்ளே உடைந்து நொறுங்கும் அற மதிப்பீடுகளிலும் உள்ளது.
நாட்டின் சட்ட அமைச்சராக இருந்தவருக்கு பகிரங்க இழிவுபடுத்தல் நடக்கும்போது, அவர் பிறந்த மண்ணில் உள்ள பிரிவினைவாத கட்சித்தலைவர், நாட்டை அடிமையாக்கி ஆண்டவர்களுக்கு உறுதுணையாக நின்ற தீவிரவாதி ஒருவருக்கு அரசின் உயரிய விருதைக் கோருகிறார். ஒரு நாடு மண்ணில் வீழ வேறு என்ன காரணம் வேண்டும்?
முதுகெலும்பை இழந்துவிட்டால் வேறு வழியே இல்லை கீழே ஊர்ந்துதான் பிழைக்கவேண்டும். அதில் வெட்கம் மானம் பார்க்க என்ன இருக்கிறது?
சொத்து, நீதி, நேர்மை, கௌரவம் என அனைத்தையும் இழந்துவிட்டால் ஒரு நாடு விரைவில் மண்ணில் வீழும் என சீனப்பழமொழி சொல்கிறது. இதில், எதிரிகள் படை எடுத்து வந்து வீழ்த்துவதற்கு ஒன்றுமில்லை. காலில் விழுவதுதானே மிச்சமாக உள்ள செயல். அடிமைதேசம் அப்படியேதான் இருக்கிறது. காலத்திற்கேற்ப உரிமையாளர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக