எதிரிகளை அழிக்க தனது குடும்பத்தை நண்பர்களை இழந்து தன்னையே தியாகம் செய்யும் அதிகாரி!
எதிரிகளை அழிக்க தனது குடும்பத்தை நண்பர்களை இழந்து தன்னையே தியாகம் செய்யும் அதிகாரி!
மகான்காளி
ராஜசேகர், மாதுரிமா
இயக்கம் கார்த்திகேயன்
இசை சின்னா
என்கவுன்டர் சிறப்பு அதிகாரியான மகான்காளி, நாயக், இரு மாஃபியா தலைவர்களுக்கு இடையில் சிக்கிக்கொண்டு தனது குடும்பத்தை இழக்கிறார். பிறகு தனது குழுவை பலி கொடுக்கிறார். இறுதியாக தன்னையே தியாகம் செய்து எதிரிகளை அழித்தொழிக்கிறார்.
மேற்சொன்ன அம்சங்கள்தான் படத்தில் காட்டப்படுபவை. ராஜசேகரின் படங்கள் பெரும்பாலும் காவல்துறையின் வன்முறையை நியாயப்படுத்துபவை. நீதிமன்றத்திற்கு நியாயம் பெறும் சமயத்தில் சூது நிகழ்ந்துவிடும். பிறகு என்ன மீண்டும் துப்பாக்கியை தூக்கி நியாயத்தை நிலைநாட்டுவார். இவரது மகான்காளி என்ற இந்தப்படம் பார்த்து முடித்தபிறகு, மனதில் ஒரு அமைதியின்மை, விரக்தி பரவுகிறது. ஒருவகையில் காட்சி ரீதியாக சொல்ல நினைத்த விஷயங்களை கூறிவிட்டார் எனலாம். படத்தின் திரைக்கதையில் நடிகர் ராஜசேகரின் மனைவி ஜீவிதாவும் பங்களித்திருக்கிறார்.
படத்தில் மாதுரிமாவின் பங்கு பாடல்களுக்கு மட்டும்தான். அவரை எப்படி பயன்படுத்துவது தெரியாமல், மானபங்கம் செய்யும் காட்சிகளில் அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவர் முதலில் போதை ஊசி போடப்பட்டு வல்லுறவு செய்யப்படுகிறார். பிறகு அவரை சாலையில் தூக்கி எறிந்துவிட்டு செல்கிறார்கள். அடுத்து அவர் மகான்காளியை மணந்துகொண்டபிறகு, ரவுடி ஒருவரால் கொல்லப்படும்போதும், அவரை சேலையை பிடித்து இழுத்து ஏதோ செய்ய நினைத்து பிறகு வயிற்றில் கத்தியால் குத்தி கொலை செய்கிறார்கள். என்ன ஒரு கிரியேட்டிவிட்டி. அதை ஆபாச வீடியோ போல பதிவு செய்து வில்லனுக்கு அனுப்புகிறார்கள்.
மகான்காளி, ஆவேசமானவர் ஒழிய புத்திசாலி கிடையாது. உள்துறை அமைச்சர், மகான்காளியை வைத்து வெளிநாட்டில் இருந்து ஆட்களை இயக்கி வரும் மாஃபியா தலைவரை அச்சுறுத்த முயல்கிறார். வெளிநாட்டு மாஃபியாவிற்கு கமிஷனரே அடிமை. அவர்களுக்கு ஆதரவாக இயங்குகிறார். இதை தெரிந்தும் கூட மகான்காளி, இரு தரப்பில் யார் செத்தால் என்ன கிடைத்தவரை லாபம் என சுட்டுத் தள்ளிக்கொண்டே இருக்கிறார். அந்த வகையில் படத்தில் பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் லட்சம் தேறும். எதற்கு இந்த அர்த்தமில்லாத கொலைகள் என்றே புரியவில்லை.
காவல்துறை அதிகாரியாக இருப்பவருக்கு அமைச்சர் யார், எப்படிப்பட்டவர் என்று தெரியாதா, அல்லது கமிஷனர் ஊழல் செய்பவர் என்று புரியாதா? எதற்கு அவராக போய் வம்பில் மாட்டிக்கொண்டு சிறை செல்லவேண்டும். அதுவும் படத்தில் ஊடகங்களை காட்டியுள்ள விதமும் எரிச்சல் ஊட்டுகிறது. ஏறத்தாழ கைக்கூலிகளாக காட்டுகிறார்கள். ஒருவர் கூட நேர்மையாக இல்லையா? படத்தில் காட்டப்படும் விதத்தில் பார்த்தால் நாயகன், அவரின் ஐந்து நண்பர்கள், நாயகனுக்கு உதவும் ஒரே மேலதிகாரி தாண்டி ஊரில் நல்லவர்களே நேர்மையானவர்களே இல்லை. மற்றவர்கள் எல்லோருமே மாஃபியாவுடன் தொடர்புடையவர்கள். சிபிஐ, நீதிமன்றம் கூட மாஃபியாவின் காசுக்கு ஆசைப்படுகிறார்கள். பிறகு சொல்ல என்ன இருக்கிறது?
மகான்காளி சார், இப்படிப்பட்ட அழுகிப்போன சமூகத்தில் வாழ்ந்துதான் என்ன பிரயோஜனம் சொல்லுங்கள். நாமே தற்கொலை செய்துகொள்ளலாம். இறுதியாக கூட வில்லன், மகான்காளியின் நண்பர்கள், மனைவி எல்லோரையும் திட்டமிட்டப்படி கொல்கிறான். இந்த சூழ்நிலையில் சிறையில் உள்ள கைதியான வில்லன் வலுவாகவே இருக்கிறான். ஆனால், நாயகன் பலவீனமாக கோமாளியாக தோன்றுகிறான். இறுதியாக வில்லனை சுட்டுக்கொல்வது கூட ஒருவித ஆறுதல்தான். அவனுடைய நண்பர்கள், அம்மா, மனைவி யாருமே அவனுடன் இல்லை. நீதி, நியாயத்தை காப்பாற்றியபிறகு அவன் தனியாகவே நிற்கிறான்.
இறுதியாக வெல்வது யார் என்றால் நம்மிடம் எந்த பதிலுமில்லை. அரசின்மை பற்றிய கொள்கைகளை வாசிக்கவேண்டியதுதான். செய்வதற்கு வேறு ஒன்றுமில்லை.
கோமாளிமேடை குழு
கருத்துகள்
கருத்துரையிடுக