சிறுவயது குடும்ப வன்முறையால் உளவியல் சிக்கலுக்குள் மாட்டிக்கொள்ளும் உளவுத்துறை அதிகாரி!

 





சிறுவயது குடும்ப வன்முறையால் உளவியல் சிக்கலுக்குள் மாட்டிக்கொள்ளும் உளவுத்துறை அதிகாரி!
மராஸ்லி
துருக்கி தொடர்
இருபத்தாறு எபிசோடுகள்
யூட்யூப்

பழைய புத்தக கடையை முன்னாள் ராணுவ வீரர் நடத்திக்கொண்டு இருக்கிறார். அவர் பெரிதாக யாரிடமும் பேசுவதில்லை. டீ கொண்டு வருபவரிடம் கூட அவர் அதிகமாக பேசுவதால், காசைக் கொடுத்துவிட்டு தன்னுடைய உலகில் மூழ்கிவிடுகிறார். அவர் கையில் நாளிதழில் வெளியான துப்பாக்கிச்சூடு செய்தி இருக்கிறது. அதை படித்துக்கொண்டிருக்கும்போது, இளம்பெண் ஒருவர் வந்து நூல் ஒன்றைக் கேட்கிறார். அதற்கு, ராணுவ வீரர் அதுமாதிரியான நூல் என்னுடைய கடையில் கிடையாது என திட்டவட்டமாக கூறிவிடுகிறார். அந்தப்பெண் எரிச்சல் அடைந்தாலும் சமாளித்து பேசி புகைப்படம் எடுக்க செல்லவேண்டிய இடத்தை அறிந்துகொள்கிறார். அவர் அங்கு செல்லும்போது, அங்கு யாரோ ஒருவரை கட்டி வைத்து சித்திரவதை செய்கிறார்கள். அதை பார்த்து புகைப்பட கலைஞரான இளம்பெண் பதறி ஓடுகிறார். அதேநேரம், அவரைக்கொல்ல கொலைகாரர்கள் துரத்துகிறார்கள். நாயகன், தனது செல்ல நாயை தேடி அங்கு வரும்போது நாயகி மாஹூரைக் காப்பாற்றுகிறான்.

கொலைகார கூட்டம், முன்னாள் ராணுவ வீரனான நாயகனையும், தொழிலதிபரின் மகளான மாஹூரையும் கொலை செய்ய தேடுகிறது. நாயகி எடுத்து புகைப்படங்கள் முக்கிய ஆதாரம். இறந்துபோனவர், அரசு வழக்குரைஞர் என சில நாட்கள் கழித்து செய்தியில் தெரிய வருகிறது.
கொலைகாரர்களின் நோக்கம் என்ன, முன்னாள் ராணுவ வீரனின் கடந்த கால பிரச்னைகள், நாயகி மாஹூரை கொலை செய்ய முயல்வதற்கு அவளது குடும்ப உறுப்பினர்களே ஆதரவாக இருக்கிறார்கள். அவளின் இரு சகோதரர்களில் யார் துரோகி என தொடர் விவரிக்கிறது.

இந்த தொடர் நெடுக ஏராளமான துருக்கி எழுத்தாளர்கள், தத்துவவாதிகள் சொன்ன மேற்கோள்கள், நாவலில் எழுதிய உரையாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை சம்பவங்களை கெடாமல் பயன்படுத்தியிருக்கிறார்கள். நெகாட்டி என்ற பாத்திரம்,ஏராளமான நூல்களை படித்து கரைத்து குடித்த மோசமான குணம் கொண்டவர். அவருடைய இளமைக்கால பின்னணி சிக்கலானது. மது அருந்திக்கொண்டே வீட்டிலுள்ள வேலையாட்களுடன் பேசுவது, குடும்ப உறுப்பினர்களை அவர்களின் கடந்தகாலத்தை வைத்து நக்கல் செய்வது என மனிதர் அபாரமாக நடித்திருக்கிறார். அவரின் நடிப்பில் மூன்று வித பருவங்கள் உள்ளன. ஒன்று குடிகாரராக நூல்களை படித்து கூறுவது, இரண்டாவது, மனநிலை பாதிக்கப்பட்டு நோயாளியாக இருப்பது, மூன்றாவது, மனநிலை சீராகி காதலி பேகியாவை மணம் செய்து எழுத்தாளராக மாறுவது. நெகாட்டி என்ற பாத்திரம், காவியத்தன்மை கொண்டது.
அவர், இளமையில் பதினாறு வயதில் ஒரு கொலையை செய்கிறார். அக்கொலை வழியாக தந்தையின் உயிரைக் காக்கிறார். ஆனால், அதே கொலை யாரைக் காப்பாற்றினாரோ அவரின் அன்பு கிடைக்காமல் போகசெய்கிறது. நெகாட்டி செய்த கொலையை, அவரது அம்மா , தனது கணவர் செய்ததாக நினைத்துக்கொள்கிறார். அவை வசைமாறி பொழிகிறார். அதற்கு ஒரு காரணம் உண்டு. உண்மையில், நெகாட்டியின் அம்மா காதலிப்பது, ஓமர் என்ற ஆசிஸ் துரலின் நண்பரைத்தான். ஆசிஷை அல்ல. ஆனால் ஆசிஷ், ஒருதலைக்காதலில் விழுகிறார். தனது நண்பனென்றும் பாராமல், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மாட்டிவிடுகிறார். இதனால், நண்பன் சிறைக்கு செல்ல, அவனது காதலியை தனது மனைவி ஆக்கிக்கொள்கிறார். ஆனாலும் அவருக்கு முழுமையாக அன்பு கிடைப்பதில்லை. பின்பு ஓமரை ஆசிஷ் கொன்று தனது தோட்டத்தில் புதைக்கிறார்.

நெகாட்டியின் தம்பியான இல்ஹானை ஆசிஷ் விரும்பி தனது நிறுவனத்தைக் கொடுக்கிறார், மூத்தவரான நெகாட்டிக்கு நிறுவனத்தில் எந்த பொறுப்பும் இல்லை. அவரை ஆசிஷ் தனது மனைவியின் காதலை கிடைக்காமல் செய்தவன் என்ற காரணத்தால், வெறுக்கிறார். எந்த உதவியும் செய்வதில்லை. இந்த வெறுப்பு எதுவரை நீள்கிறது என்றால், தீவிபத்தில் சிக்கும்போது கூட இளையமகனை மட்டுமே காப்பாற்றுகிறார். தன் காதலைக் கொன்ற மூத்த மகனை காப்பாற்றுவதில்லை. இளையமகனே அண்ணன் என்று பாய்ந்து சென்று நெகாட்டியை காக்கிறான்.

நெகாட்டிக்கு அப்பா முன்மாதிரி என்றாலும் அவன் செய்த கொலை காரணமாக அப்பாவின் அன்பு வாழ்க்கை முழுக்க கிடைப்பதில்லை. அதனாலேயே அவன் மனநோயாளியாக மாறுகிறான். பழிவாங்கத் தொடங்குகிறான்.

அடுத்து, சாவஸ். இவன் வேறு யாருமல்ல. கொல்லப்பட்ட ஓமரின் மகன். அவருக்கும், செவிலிப்பெண்ணுக்கும் பிறந்த மரபணு குறைபாடு கொண்ட பிள்ளை. சூரிய வெளிச்சம் ஆகாது. வெளிச்சம் பட்டால் தோலில் ஒவ்வாமை ஏற்பட்டு மூச்சு திணறத் தொடங்கிவிடும். சாவஸ், சிறுவயதில் பிற சிறுவர்களால் வெயிலில் தூக்கி எறியப்பட்டு இழிவுபடுத்தப்படுகிறார். அம்மாவுக்கு கணவர் ஓமர் இறந்துபோனது பெரிய அதிர்ச்சியாக, மனநிலை குழம்பிபோகிறது. சாவசுக்கு பிழைக்க வழி தெரியாமல் தெருவில் பிச்சைக்காரனாக வாழ்கிறார். அங்கேயே அடிதடி கற்றுக்கொண்டு மேலே வருகிறார். சாவசுக்கு பழிவாங்கும் எண்ணம் தீவிரமாக உண்டு. ஒருவரை கொல்ல வேண்டுமென்றால் அவரை கட்டிவைத்து பெட்ரோல் ஊற்றி எரிப்பது அவன் பாணி. சாவஸை, நெகாடிதான் ஆதரித்து பணம் கொடுத்து பாதுகாக்கிறான். நெகாடி, சாவஸ் ஆகியோர் காரணமாகவே துரெல் குடும்பம் மண்ணில் வீழ்கிறது. நெகாடி, அம்மா பேசுவதை தவறாக புரிந்துகொண்டுவிடுகிறார். அத்தனை இலக்கியம் படித்து பிரமாதமாக உரையாற்றுபவன் அழிவு சக்தியாக மாறுகிறான்.

சாவசுக்கும் கொஞ்சம் அன்பு கிடைத்திருந்தால் அவன் வாழ்க்கையும் மாறியிருக்கும். ஆனால், அதற்கான சில காட்சிகள் தொடரில் உள்ளன. ஒரு முடிவை எடுப்பது, பிறகு அதை மாற்றுவது, சமரசம் செய்வது, இடையில் திட்டத்தை மாற்றிவிடுவது என சாவஸுக்கு மனநிலையில் நிறைய சிக்கல்கள் உள்ளன. உறுதியான மனிதன் கிடையாது. அவன் வாழ்க்கையில் உறுதியாக செய்யும் விஷயம், குப்பைக்கிடங்கு காரனை கொல்ல அவனது ஆதரவாளர்களை கொல்லத் தொடங்கும் திட்டம் ஒன்றுதான். மற்றபடி அவன் எடுக்கும் முடிவுகள் எல்லாமே நன்மையை விட தீமையை அவனுக்கு கொடுப்பவையே. நெகாடி கொடுக்கும் ஆலோசனைகளை வைத்தே சாவஸ் வெற்றி பெறுவான். தனியாக யோசித்து அவன் எதையும் செய்வது இல்லை. அப்படி செய்தாலும் அது முட்டாள்தனமாகவே முடிகிறது. மஹூரைக் காதலிக்க முயலும் சில காட்சிகள் தொடரில் வருகின்றன. அதுபோல அன்பு மஹூரோ அல்லது வேறு பெண்ணிடமோ கிடைத்திருந்தால் சாவஸ் வாழ்க்கை வேறு மாதிரி இருந்திருக்கும். மோசமான குழந்தைப்பருவம் அவனை இரக்கமற்றவனாக மாற்றுகிறது. மனநிலை குரூரமாக மாறுவதற்கு மரபணு குறைபாடும் முக்கிய காரணம்.

அடுத்தது மெஹ்மத் இன்ஸ். இந்த பாத்திரம் மட்டுமே சிறுவயது வன்முறையை பெரியவனான பிறகும் பிறர் மீது செலுத்தாமல் இருக்கிறது. பதிலுக்கு மராஸ்லி பாத்திரமாக மாறியபிறகு செய்யும் கொலைகள் எல்லாம் கணக்கு வழக்கே கிடையாது. மெஹ்மத் இன்ஸ் - மராஸ்லி என இரு பாத்திரங்களுமே நிறைய வேறுபாடுகளைக் கொண்டவை. மெஹ்மத் இன்ஸ் மென்மையான குணம் கொண்ட, அதேசமயம் கடந்தகால காயங்களை தனக்குள் வைத்துக்கொண்டு இருப்பவர். ஆனால், மராஸ்லிக்கு ஒரே நோக்கம்தான். தனது மகளை காயப்படுத்தி பேசும் திறனை இழக்க வைத்த துரெல் குடும்ப ஆளை கண்டுபிடித்து கொல்வது. அதற்காக அவர் ரிவால்வர், ரைபிள், கத்தி என தூக்காத ஆயுதங்கள் கிடையாது. பெரும்பாலும் அவரோடு போடும் சண்டையில் சாவஸே மிரண்டுபோகிறான். குகை மனிதனோடு சண்டை போட முடியாது என பாதி நேரம் காரில் ஏறி தப்புகிறான். நெகாடி மட்டுமே மராஸ்லியைத் தாக்கி கோமாவுக்கு அனுப்புகிறான். மராஸ்லிக்கு நெவ்சாத் என்ற ஆத்ம நண்பன் இருக்கிறான். அவன்தான் இறுதிவரை அவனுக்கு துணையாக நிற்கிறான். கமாண்டர் - செர்ஜென்ட் உறவு. இருவரும் சேர்ந்து போடும் சண்டையில் எதிரிகள் செத்து வீழ்கிறார்கள். மெஹ்மத் இன்ஸை விட மராஸ்லி மனதளவில் வலிமை கொண்ட ஆள். தவறு என்றால் எந்த இடத்திலும் துப்பாக்கியை எடுக்காமல் இருந்ததில்லை. மஹூரை காதலிக்கும் வேகத்தில் தான் யார் என்பதையே மறந்துபோகிறார்.

தந்தை செய்த குற்றங்களுக்கு மகன்கள் பலியாகிறார்கள், இதயத்தை உடைப்பதை பற்றி நீ எப்போது கவலைப்பட ஆரம்பித்தாய்? உன்னை விட்டு பிரிந்த பிறகுதான், எதுவேண்டுமானாலும் பொய்யாகலாம். உன்னை காதலித்தது மட்டும் உண்மை. அது மாறாது என சில எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். தொடர் முழுக்க ஏராளமான வசனங்கள் அவல நகைச்சுவையாக எழுதப்பட்டுள்ளன.

தொடரின் நாயகனான புனேஷ், நாயகி அலினா ஆகியோரின் நடிப்பு முக்கியமானது. முக்கியமாக நாயகன் நடிப்பு தொடரை அழகாக்கியுள்ளது. மகள் அப்பா என்று ஒரு வார்த்தை கூப்பிட்டு விட மாட்டாளா என ஏங்கி அழுவது, இறந்தகாலத்தில் தன்னால் இறந்துபோன தம்பி இஸ்மாயிலை நினைத்து கண்ணீர் விட்டு அழுவது, மஹூரை மறக்கமுடியாமல் தவிப்பது, பார்க்கும்போதெல்லாம் மகளை உச்சிமுகர்ந்து முத்தமிட்டு மகிழ்வது என துருக்கி நடிகரின் உழைப்பு அசாதாரணமானது.

மெஹ்மத் இன்ஸ் - மராஸ்லி செலால் குன் என இரு பாத்திரங்களின் உச்சரிப்பு, உடல்மொழி, பயன்படுத்தும் வார்த்தைகள் என அனைத்திலும் நேர்த்தியை கொண்டு வந்திருக்கிறார். டிவி தொடர் என்றாலும் இந்தளவுக்கு நடிப்பை அர்ப்பணிப்பாக கொடுக்கும் நடிகரைப் பார்த்தால் பாராட்டாமல் இருக்க முடியாது. அலினா பாத்திரம், உணர்ச்சிவசப்பட்டு அனைத்து விவகாரங்களிலும் தலையிட்டு மாட்டிக்கொள்கிறது. ஆனால் அப்பாத்திரம்தான் மராஸ்லியை கடந்தகால சம்பவங்களில் இருந்து குற்ற உணர்விலிருந்து மீட்கிறது. காதலே மருந்து.


நெகாட்டி, சாவஸ், மெஹ்மத் இன்ஸ் ஆகிய பாத்திரங்கள் அனைவருமே சிறுவயதில் அன்பு கிடைக்காமல் துயரப்பட்டவர்கள். இதில் மெஹ்மத் மட்டும் தவறான வழிக்கு செல்லாமல் அரசு அதிகாரியாகி விடுகிறார். மற்றவர்கள் அப்படியே தேங்கிவிடுகிறார்கள்.

மெஹ்மத் இன்ஸ் பற்றி அந்தளவு பில்டப் கொடுத்தாலும் அவரிடம் அப்படியென்ன தகவல் இருக்கிறது என சரியாக விளக்கவில்லை. நாயகி மஹூர் பிறர் கூறுவதை அப்படியே நம்புகிறாரே ஒழிய எதையும் யோசித்துப் பார்த்து முடிவெடுக்க கூடியவராக கடைசி வரை மாறுவதேயில்லை. ஏன் இந்த பாத்திரம் முதிர்ச்சியே இல்லாமல் இருக்கிறது? மராஸ்லி பொய்யை நுட்பாக சொல்லி சமாளிக்கிறார். ஆனால், மஹூர் ஏன் எதையும் யோசித்து விசாரித்து அறியாமலேயே வாழ்கிறார். அவரை எளிதாக இன்னொருவர் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது. குறிப்பாக நெகாட்டி. மெஹ்மத்தின் அப்பா, குப்பைக்கிடங்கு முதலாளி பற்றி பில்டப் கொடுத்தாலும் காட்சிகள் அக்கூற்றுக்கு நியாயம் செய்யவில்லை. அவரின் கூட்டமே பலவீனமாக இருக்கிறது. அதிலும் சாவசோடு அவர்கள் போடும் சண்டை படுமோசம். குப்பைக்கிடங்கு முதலாளி, உண்மையில் மெஹ்மத்தை கொல்ல வேண்டுமென்றால் எளிதாக செய்திருக்கலாம். ஆனால், அவர் அதை செய்வதில்லை. தன்னை மட்டுமே காப்பாற்றிக்கொள்ள முனையும் இழிந்த பிறவி. அதைத்தவிர சொல்ல ஏதுமில்லை.

ஆசிஷின் இரண்டாவது மகன், இல்ஹான், தான் செய்யவேண்டிய வேலையைக் கூட நண்பனுக்கே கொடுத்துவிடுகிறான். அதுவும் நிறுவன முதலீட்டாளர்கள் விவகாரத்தைக்கூட. இயக்குநரின் வேலை வேறு. பொது மேலாளரின் வேலை வேறு. இயக்குநர், பொதுமேலாளர் என இருவேலைகளையும் நண்பன் ஓசன் செய்கிறான். செய்வதாக பாவ்லா செய்து சாவசுக்காக வேலைசெய்து கம்பெனியை தாரை வார்க்கிறான். அலுவலகத்தில் அதிக நேரம் இருந்தாலும் இல்ஹான் ஏதும் செய்வதில்லை. வீட்டில் குடும்பத்தோடும் நேரம் செலவிடுவதில்லை. இதனால் அலுவலகம் இன்னொருவரின் கைக்கு போகிறது. மனைவி, கள்ள உறவில் ஈடுபடுகிறாள். இல்ஹானை எப்போதும் இன்னொருவர் வந்து காப்பாற்ற வேண்டியிருக்கிறது. இல்ஹானை மராஸ்லி தவிர பலரும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவன் வாழ்க்கையே விரக்தியான ஒன்றாக மாறுகிறது. தந்தை நம்பிக்கை வைத்தாலும் அவர் வாழும் காலத்திலேயே தோற்றுப்போன ஒருவனாக மாறுகிறான்.  

தொடரில் வரும் ஹிலால், நேர்மையான அதிகாரி போல தெரிந்தாலும் அவருக்கு முன்னாள் கணவன் மெஹ்மத் மீது தீராத காதல் இருக்கிறது. அதுவே தொழில்ரீதியாக பாகுபாடான முடிவுகளை எடுக்க வைக்கிறது. அந்த வகையில் பார்த்தால், நெவ்சாத் கடமையை முக்கியமாக கருதினாலும் உயிர்காத்த நன்றியை மராஸ்லிக்கு திரும்பச் செலுத்துகிறான். கடைசி வரை அவனோடு பயணிக்கிறான். தன்னை ஆபத்தான நிலைக்கு தள்ளிக்கொண்டேனும் உதவுகிறான். இந்த வகையில் ஹிலால் மேலதிகாரியாக இருந்தாலும் களத்தில் இறங்கினால் அவர் மிக பலவீனமான வீரர். மெஹ்மத், தான் மஹூரை காதலிப்பதாக கூறும்போது, மனதளவில் நொந்துபோகிறார். குழந்தை பெற்றுக்கொண்டாலும் கூட தன் மீது அவனுக்கு காதல் வரவில்லை என்பதை உடல்மொழி வழியாக வெளிப்படுத்துகிறார்.

முன்னாள் கணவன் என்றாலும் மெஹ்மத், குழந்தை எலிஷ் மீது காட்டும் அன்பை பார்த்து மகிழ்கிறாள். அவளுக்கு இன்னொரு காதல் வந்தாலும், மகளை கணவன் கொஞ்சும் நேரம் அவன் அருகில் இருந்துகொண்டு பெருமையாக பார்த்துக்கொண்டு இருக்கிறாள். முறிந்த உறவுதான். ஆனால், அதில் மெஹ்மத்துக்கு தீவிரமான வெறுப்போ, வன்மமோ இல்லை. அதனால்தான் உன்னை பிரிந்தபிறகுதான் காதல் நொறுங்குவதன் வலியை புரிந்துகொண்டேன் என வெளிப்படையாக கூறுகிறான். பொதுவாக, ஆண் மேலாதிக்கமே பெரிதாக உள்ள உலகில் இதுபோன்ற காட்சிகளைப் பார்க்க முடியாது. பல்வேறு வன்முறைகளை அவன் எதிர்கொண்டாலும், வன்முறை வழியில் மட்டுமே தன்னை மூழ்கடித்துக்கொள்ளவில்லை. அதிலிருந்து வெளியே வர மஹூர் உதவுகிறாள். முதல் மனைவி ஹிலால் செய்யத்தவறிய பணி அது.

தொடர் நெடுக வரும் பாத்திரங்கள் பலரும் அன்பை பெற இயலாமல் அங்கீகாரம் இல்லாமல் தவிக்கிறார்கள். அதுவே அவர்களை தவறாக யோசிக்க வைத்து குற்றங்களை செய்ய வைக்கிறது. ஆசிஷ், சாதிக் ஆகியோர் ஒருகட்டத்தில் செய்த குற்றம், அதற்கான தண்டனையை கூட ஏற்றுக்கொள்ள தயாராகிறார்கள். ஆசிஷ், தனது நண்பரைக் கொன்ற, வாழ்க்கையை திட்டமிட்டு அழித்ததற்காக கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்படுகிறார். அவர் இறக்கும் முன்னர், இளைய மகன் இல்ஹான் நெஞ்சில் கத்தியால் குத்தப்பட்டு இறப்பதை பார்த்து வருந்தியே இறக்கிறார். நெகாட்டி, தனது தவறை உணர்ந்து சாவஸை தடுக்க முயல்கிறார்.இறுதியாக அப்பா, சகோதரன் இருவரையும் தானே பலிகொடுத்துவிட்டதை நினைத்து புத்திபேதலித்து போகிறது.

கதையில் ஆண்களை விட பெண்களை வலிமையாக இருக்கிறார்கள். அவர்கள் வழியாகவே கதை பலம் பெறுகிறது. மஹூர், அவளின் தோழி, இல்ஹான் மனைவி தில்சாத், ஆசிஷின் இரண்டாவது மனைவி, சாதிக்கின் மனைவி நூரான், மகள் பேகியா, மஹூரின் அத்தை, வழக்குரைஞர் திலாரா, உளவுத்துறை அதிகாரி ஹிலால், எலிஷை கவனித்துக்கொள்ளும் வயதான பெண்மணி என்ற நிறைய பாத்திரங்கள் வலிமையாக உள்ளன. கதையில் முக்கிய பங்களிப்பை செய்கின்றன. மகள் எலிஷை தாக்கி பேச்சுத்திறனை இழக்கச் செய்தவர்களை பழிவாங்கும் முயற்சிதான் மெஹ்மத் செய்கிறார். அதன் வழியாக தீவிரவாத இயக்கங்கள், சட்டவிரோத உடல் உறுப்பு விற்பனை குழுக்கள், குறிப்பாக, மெஹ்மத் தனது அப்பாவை இறுதியாக எதிர்கொண்டு சண்டை போடுகிறார்.


 

Final episode date: 13 July 2021
First episode date: 11 January 2021 (Türkiye)
Directed by: Arda Sarigun
Genre: Action
No. of episodes: 26

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!