இறந்துபோனவராக கருதப்பட்ட ராணுவ வீரர் திரும்ப கிராமத்திற்கு வருகிறார்!

 

மெயின் ஹூம் மூசா
மலையாளம்
சுரேஷ்கோபி

கேரள கிராமம். அந்த கிராமத்தில் மூசா என்ற ராணுவ வீரர் பிரபலம். கார்கில் போரில் பலியானதால், அவருக்கு சிலை வைத்து கல்லறையைக் கூட ஊரின் மத்தியில் வைத்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் இறந்துபோனதாக கருதப்படும் மூசா பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வருகிறார். அங்குள்ள அவரின் நண்பர்கள், உறவு, குடும்பம் எல்லாம் என்னாகிறது என்பதே கதை.

ஒரு ராணுவ வீரன், அவனுடைய குடும்பம், அவனை மறந்துவிட்டது. அவனை பயன்படுத்தி உள்ளூரில் வாக்குகளைப் பெறுகிறார்கள். அவனது மனைவி, மூசாவின் தம்பியை மணந்துகொள்கிறாள். மூசா ராணுவத்தில் வேலை செய்து செத்து்ப்போனதால் ஓய்வூதியம் கிடைக்கிறது. அதை முழுக்க அனுபவிக்கிறார்கள். ஆனால், மூசா உயிரோடு திரும்ப வரும்போது, அவனைப் பயன்படுத்திக்கொண்டவர்கள் அனைவருமே அவன் செத்துப்போயிருந்தால் நல்லது என நினைக்கிறார்கள். ஒரே ஒரு விதிவிலக்கு. அவன் பால்ய நண்பன் மட்டுமே. அவன் சாராயக்கடை ஒன்றை நடத்துகிறான். மூசாவை தனது வீட்டில் தங்க வைத்து பார்த்துக்கொள்கிறான். மூசா இறந்துவிட்டதாக அனைவரும் நம்புகிறார்கள். அவன், ராணுவ அலுவலகத்திற்கு சென்று தனக்கு நேர்ந்த சிறை அனுபவங்களை கூறுகிறான். அங்குள்ளவர்கள், தங்களது பதவிக்கு பிரச்னை வந்துவிடுமோ என பார்த்து அவனுக்கு சேர வேண்டிய அங்கீகாரம், பணபலன்களை தர மறுக்கிறார்கள். அதேசமயம் அந்த விவகாரத்தை மேலிடத்திற்கும் தெரிவிக்கிறார்கள்.

இந்த படத்தில் முக்கியமானது. சுரேஷ் கோபியின் நடிப்பு. வயதாகி, தான் நாட்டிற்காக செய்த தியாகத்தை சொந்த நாடு ஏற்க மறுக்கிறதே என விரக்தியில் சுற்றுபவராக நடித்திருக்கிறார். அவருக்கும், நண்பன் வீட்டிலுள்ள வயதான அம்மாவுக்கு இடையிலான உரையாடல் நெகிழ்ச்சியானது. பலா வற்றல் போடும் அந்த அம்மாவை, மூசாவின் நண்பன் கூட்டி வந்து வீட்டில் வைத்து பராமரிக்கிறான். அந்த அம்மாளின் மகன், அவளை கோவில் ஒன்றில் கைவிட்டுவிட்டு செல்கிறான். அதை அவர் விவரிக்கும் இடம் சிறப்பாக உள்ளது. கடவுளுக்கு பசின்னா என்னன்னு தெரியாது, கூட்டம் அதிகமாக இருந்தது. அதனால் என்னோட பையனுக்கு வர்றதுக்கு நேரமாயிடுச்சு, பிரார்த்தனைகளே எல்லா பிரச்னைகளையும் தீர்த்திடும்னா, நாம ஏன் இவ்வளவு கஷ்டப்படுறோம் என தமிழில் வசனங்களை ஓரளவுக்கேனும் சரியாக எழுதியிருக்கிறார்கள்.

இந்தப்படம் ஒருவன் இழந்த தனது அடையாளத்தை தேடும் கதை. படம் முடியும்போது, ராணுவ வீரர் ஒருவரின் பெயரைப் போடுகிறார்கள். மூசா, திரும்பி வரும்போது அவனுடைய மனைவி, சொந்த தம்பிக்கு உரியவளாக இருக்கிறாள். அவனது மகள், தனது தந்தை சித்தப்பாதான் என்கிறாள். தங்குவதற்கு கூட இடமில்லை. ஊரில் அவனை பயன்படுத்தி வெற்றி பெற்றவர்கள் கூட காலணாவுக்கு உதவியை செய்வதில்லை. சலூன்காரர், மூசாவுக்கு இலவசமாக ஷேவிங் செய்கிறார். அவன் காசு கொடுத்தும் அதை மறுக்கிறார்.

குடும்பம் கடந்து பிறர் காட்டும் அக்கறை மூசாவை வாழச் செய்கிறது. அவனது நண்பர் ஆம்ரோசைக் கேட்டு அவரது மகள் வந்து சேருகிறாள். அவளுக்கு, பாட்டி மட்டுமே இருக்கிறாள். தன் தந்தை உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை. மூசா திரும்பி வந்ததால், அவரிடம் கேட்கலாம் என வந்து அவனோடு தங்கிவிடுகிறாள். மூசா, ஆம்ப்ரோஸ் பற்றி எந்த தகவலையும் சொல்ல மறுக்கிறார். ஒருகட்டத்தில் தன் கண்முன்னே இறந்துபோனான் என்று சொல்லிவிடுகிறார். படத்தின் இறுதியில் ஆம்ரோசின் மகளைக் கூட்டிக்கொண்டு ராணுவ உடையோடு நடந்துபோவதோடு படம் முடிகிறது.

ஆம்ரோசின் மகளாக நடித்தவர் நன்றாக நடித்திருக்கிறார். மூசாவின் நண்பர், அவரது வீட்டிலுள்ள அம்மா, முன்னாள் மனைவி ஆகியோர் பாத்திரங்களும் சிறப்பாக உள்ளன. மூசா தன்னை இழிவுபடுத்தும் தம்பி, அடித்து உதைக்கும் மச்சானைக் கூட பெரிதாக நினைப்பதில்லை. பெரும்போக்காக விட்டுவிடுகிறார். தான் ராணுவ வீரன் என்ற அங்கீகாரம் போதும் என்கிறார். இறுதியாக, அவர் இறந்துபோன ஆம்ரோசின் கபாலத்தை எடுத்து வந்து, நண்பனின் மகள் வீட்டுக்கு போகும்போது கொடுக்கிறார்.

மூசா தனது வாழ்நாளில் பெரும் சித்திரவதைகளை, வலியை வேதனை அனுபவித்தவர். சிறைவாசம் முடிந்தாலும் கூட வெடிகுண்டு துகள் மூளையில் இருப்பதால் அடிக்கடி மயக்கம் வந்து விழுகிறார். அப்படியான போதும், அவர் தன்னை பயன்படுத்திக்கொண்ட குடும்பத்தினர் மீது கசப்பு கொள்வதில்லை. காலமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முயல்கிறார். பட்டன் போனை வாங்கி பேசிப்பழகுகிறார். முன்னாள் மனைவியிடம் போனில் பேசுகிறார். மகளின் கல்யாணப்பத்திரிக்கையை கொண்டு வந்து கொடுக்கும்போது, அதில் இறந்துபோனவர் என மூசாவின் பெயர் உள்ளது. அப்போது கூட முன்னாள் மனைவியிடம், நாம ஓடிப்போயிடலாமா என்று கேட்கிறார். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் நண்பனின் மகளை ஆற்றுக்கு குளிக்க அழைத்துப்போகிறார். வயது வந்த பெண் குளிக்கும்போது அவரை பார்த்தவாறே மூசா உட்கார்ந்திருக்கிறார். அந்த பெண்ணும் ஏதும் சொல்வதில்லை. இவரும் அப்படியே உட்கார்ந்தபடி பேசுகிறார். பிறகு, நடந்துசெல்லும்போது, ஊரிலுள்ளவர்கள் பெண்ணை ஒருமாதிரி பார்க்க ஈரமான உடைகளை தோளில் வைத்து மறைத்து, உடைகளை இப்படியே காயவைத்துக்கொள்ளலாம் என்கிறார். இது குழந்தைத்தனமா, விடலைத்தனமா என்று புரியவில்லை.

சொந்த மகளோடு உருவாகாத பாசப்பிணைப்பு நண்பனின் மகளோடு உருவாகிறது. அவளை இறுதியாக தோளில் அணைத்துப் பிடித்து கூட்டிச்செல்கிறார். அந்தப்பெண்ணுக்கான வாழ்வை அவர் உருவாக்கிக் கொடுப்பதாக இருக்கக்கூடும்.

படத்தில் முஸ்லீமாக நடித்து நாட்டுப்பற்று, தனக்கான அங்கீகாரம் தேடிய சுரேஷ்கோபி, மதவாத கட்சியின் ஒரே கேரள எம்பி. அந்த மாநிலத்தில் மதக்கலவரங்களை உருவாக்க ஆதாரமாக மாறிவிட்டதை காலத்தின் கோலம் என்றுதான் சொல்லவேண்டும்.

கோமாளிமேடை குழு



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்