இறக்கும் நிலையிலுள்ள இளவரசனை கொலை செய்ய முயலும் கூலிப்படையினர்!

 

 



இல் மாஸ்டர் ஆப் பேக் கிளான்
குன்மாங்கா.காம்.

பேக் என்ற இனக்குழுவில் பிறக்கும் மூத்த பிள்ளை, தற்காப்புக்கலை கற்றுக்கொள்ள முடியாத உடல்நலக்குறைபாடு ஏற்படுகிறது. பிறக்கும்போதே, ஆன்ம ஆற்றல் தடை என்பது உடலில் ஏற்பட்டுவிடுகிறது. இதனால், அவனுக்கு வரவேண்டிய குடும்ப தலைவர் பதவி தம்பிக்கு செல்கிறது. யிகாங், குடும்பத்தில் புறக்கணிக்கப்பட்டு சற்று தொலைவில் உள்ள வீட்டில் தங்க வைக்கப்படுகிறான். இழிவும் அவமானப்படுத்தல்களும் தினசரி நிகழ்ச்சியாகின்றன. இப்படியான சூழலில் அவனை படுகொலை செய்ய அன்னிய சக்திகள் முயல்கின்றன. அந்த முயற்சியில், அவன் அன்பு கொண்டிருந்த பணிப்பெண் சோ ஹ்வா இறந்துபோகிறாள். அது அவனது மனதை பாதிக்கிறது.

நாயகன் யிகாங், தப்பி ஓடும்போது ஓரிடத்தில் நிலவறை போல ஓரிடம் உள்ளது. அங்கு உள்ள துருப்பிடித்த வாளை கையில் எடுக்கிறான். அதில் உள்ள ஆன்மா தூக்கம் கலைந்து எழுகிறது. அது வேறுயாருமல்ல. பேக் இனக்குழுவின் முன்னோடியான வாள்வீரர் ஒருவர்தான். அவரின் ஆன்மா, வாளோடு இணைக்கப்பட்டுள்ளது. அவர், நாயகன் யிகாங் உடலில் புகுந்து எதிரிகளை கொல்கிறார். இதனால், யிகாங் அவனது அப்பாவைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. பெரிதாக மகனை கண்டுகொல்லாத அப்பா. மகனின் நோயை அவரால் தீர்க்க முடியவில்லை. நேரடியாக மகனுக்கு எதையும் செய்வதில்லை. படுகொலை நடந்தது பற்றி விசாரிக்கிறார். மகன், தன்னால் முன்னோரின் ஆவியை பார்க்க முடிவது பற்றியோ, அதன் உதவியால் கூலிப்படையை கொன்றது பற்றியெல்லாம் கூறுவதில்லை.

யிகாங், உடலில் குறைபாடு இருந்தாலும் தற்காப்புக்கலையை முன்னோரின் ஆவி உதவியுடன் பயிற்சி செய்கிறான். உடலில் ஆன்ம ஆற்றல் தடைபட்டிருப்பதால், எதிர்பார்த்த வேகம், வலிமை கிடைப்பதில்லை. ஆனால், அவனுக்கு சூழலை கவனிக்ககூடிய, புரிந்துகொள்ளும் திறன் கூர்மையாக உள்ளது. யிகாங்கின் தம்பிக்கு பயிற்சி அளிக்கும் படைத்தலைவர், யிகாங்கின் திறமையைக் கண்டு வியக்கிறார். ஒருமுறை தனது இனக்குழுவிற்கு சொந்தமான கலையைக்கூட சொல்லிக்கொடுக்கிறார்.

முன்னோரின் வாளை நாயகன் பயன்படுத்துவதால், அவரின் வாள்வீச்சு கலையை நாயகன் கற்கத்தொடங்குகிறான். ஆனாலும் வாள்வீச்சு கலைக்கு ஆன்ம ஆற்றல் முக்கியமானது. அதற்கு அவன் தனது உடலிலுள்ள நோயைத் தீர்த்துக்கொள்ளவேண்டும். அதற்காக சியோன்கிராம் என்ற தாவோ இனக்குழுவிற்கு செல்லும் தேவையுள்ளது. வாளில் உள்ள முன்னோருக்கு சென்கிரோம் இனக்குழுவினர், நன்றிக்கடன் பட்டுள்ளனர். அதை தீர்க்க டிராகன் ஒன்றின் கண்ணை அடையாள சின்னமாக எடுத்துச்சென்றால் போதும். யிகாங், பேக் இனக்குழுவில் தலைவரின் மூத்தமகன் மட்டுமே. தற்காப்புக்கலையில் மேலே வரமுடியாத சூழல் உள்ளதால், அவன் தனது தம்பிதான் பொருத்தமானவன் என்று கூறி விலகிக்கொள்கிறான். அதாவது எதிர்காலத்தில் உடலிலுள்ள குறைபாடு தீர்ந்தாலும் கூட இனக்குழுவில் எந்த பதவியையும் வேண்டாம் என கூறிவிடுகிறான்.

அதுவரை விலகியிருந்த தம்பியிடமும் வெறுப்பை கைவிட்டு பேசுகிறான். அவன் தம்பி, அண்ணன் மேல் பிரியமும் மரியாதையும் கொண்டவனாக இருக்கிறான். ஆனால், முன்னோரின் ஆவி, யிகாங்கை எச்சரிக்கிறது. எதிர்காலத்தில் பதவிக்காக நீ அவனோடு சண்டைபோடும்படி சூழல் உருவாகும். நீ அவனிடம் பேசவில்லையென்றாலும் அது நல்லதுதான் என கூறுகிறார். யிகாங் அதைப் பற்றி பெரிதாக கவலைப்படுவதில்லை.

யிகாங், தற்காப்புக்கலை பயிற்சி செய்தபடியே தன்னை படுகொலை செய்ய முயற்சித்தவர்களைப் பற்றிய தகவல்களை ஹாவோ இனக்குழு மூலம் பெறுகிறான். அவர்களில் ஒருவரின் உயிரைக் காப்பாற்றி, நட்பை உருவாக்கிக்கொள்கிறான். கொடுக்கும் தகவல்களுக்கு வெள்ளி நாணயங்களையும் வழங்குகிறான். இறுதியாக தன்னை கொலை செய்த முயன்ற மாமாவை ஆதாரங்களோடு பிடித்து தண்டிக்கிறான். அந்த செயல் யிகாங்கை இனக்குழுவில் சற்று புதுமையாக காட்டுகிறது. இனக்குழு தலைவர்கள், அவனை உதவி தலைவராக பதவியேற்க கூறும்போதும் தம்பியே தகுதியானவன் என விலகிக்கொள்கிறான். கூடவே, தன் உடலைக் குணமாக்கிக்கொள்ள சியோன்கிராம் இனக்குழுவிற்கு செல்ல தயாராகிறான். அதற்கு முன்னர் மோயோங் இனக்குழுவிலிருந்து இருவர் பேக் இனக்குழுவின் மாளிகைக்கு வருகிறார்கள். அவர்களது நோக்கம், அவர்களது சொத்தான ஏழு நட்சத்திரம் என பெயரிடப்பட்ட வாளை, தற்காப்புக்கலையில் வென்று பெறுவதுதான். ஆனால், யிகாங் முன்னமே அறிந்துகொண்டு போட்டியில் அவர்களை தோற்கடித்து, சதியை அம்பலப்படுத்தி பிறகு அவனே வாளை அவர்களுக்கு கொடுத்துவிடுகிறான். போட்டியில் கலந்துகொண்டவனின் அண்ணனிடம் சூழ்ச்சி எண்ணம் இருக்கும். அதை யிகாங் உடைத்து எறிவான்.
பிறகு கதை, சியோன்கிராம் இனக்குழுவின் இடத்திற்கு செல்கிறான். அங்கு அவனை இனக்குழுவில் மாணவனாக சேரச்சொல்கிறார்கள். அதை நாயகன் ஏற்றானா, இல்லையா, அவனது முன்னோர் ஆவி ஏன் வாளில் பிணைக்கப்பட்டுள்ளது என்பதற்கான விடைகளை கதையைப் படித்து அறியலாம்.

இந்த படக்கதையில், நாயகன் அணிந்து வரும் ஆடை, அலங்காரம் கொண்டதாக கவனம் ஈர்ப்பதாக உள்ளது. கருப்பும் சிவப்பும் கொண்ட நிறம் அழகாக உள்ளது. இதற்கு மாறாக தம்பி ஹாஜூன் வெள்ளையும் தங்கநிறமும் கொண்ட உடையை அணிந்திருக்கிறான். முன்னோரின் ஆவி சாந்தியடைந்தபிறகு, இன்னொரு பைத்தியக்கார நீலக்கண் என்ற இளம்பெண்ணின் ஆவி நாயகனுடன் பேசத் தொடங்குகிறது. செய்யவேண்டிய விஷயங்களை அவனுக்கு வழிகாட்டுகிறது. கதையில் வரும் ஹாவோ இனக்குழு ஆட்களின் தங்கநிற பரிசுப்பெட்டி மர்மம் சிறப்பாக உள்ளது. பெட்டியை திறப்பவர்கள் எப்படி இறந்தார்கள் என்பதை யிகாங் கண்டுபிடித்து கடைசியில் கூறுவதுதான் அந்த வழக்கின் முக்கியமான அம்சம்.

தாவோயிச கருத்துகளை இடையிடையே கூறுகிறார்கள். அதுவும் கதையில் முக்கியமானது.
கோமாளிமேடை குழு



 
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்