அசைவம் உண்ணுபவர்கள் குற்றவுணர்ச்சி கொள்ள வேண்டுமா?
சைவர்களின் பெருமையும், ஆணவமும்!
சைவம், அசைவம் இரண்டில் எது உயர்ந்தது? இன்றைய இந்தியாவில் இது முக்கியமான விவாதப்பொருள். இதுபோன்ற விவாதங்களை சைவ உணவுபழக்கத்தினர்தான் உருவாக்கி வாதிட்டு வருகிறார்கள். சைவ உணவுமுறைதான் மனிதர்களுக்கானது என்று அவர்களே வாதிட்டு வென்று வருகிறார்கள். அவர்களுக்கு எதிர்தரப்பே தேவையில்லை என்று கூறலாம். அசைவ உணவுப்பழக்கத்திற்கு சைவ உணவுப்பழக்கத்திற்கு உள்ளது போன்ற விவாதம் செய்யும் நபர்கள் இல்லை. ஆனாலும் கூட அசைவம் உண்ணும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சைவர்கள், அதிகரித்து வரும் அசைவர்கள் பற்றி அக்கறையோடு நிறைய கட்டுரைகளை எழுதி வருகிறார்கள். இந்தியாவில் உள்ள பெரும்பாலான நாளிதழ்கள், மாத இதழ்கள், தொலைக்காட்சிகள், வானொலிகள், இணைய வலைதளங்கள் மதம், ஆன்மிகம் பற்றிய நிகழ்ச்சிகளை எழுதி ஒளி(லி)பரப்பிவழங்கி வருகின்றன. இவற்றிலும் சைவ உணவு கோஷம் தீவிரமாக உள்ளது. அதை பாராட்டியும் பேசி வருகிறார்கள்.
சைவ உணவுப்பழக்கம் அந்தளவு புகழ்மிக்கது, பயன்மிக்கது என்றால் எந்த விளம்பரம், பிரசாரம் இன்றியே அசைவ உணவுப்பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருவது எப்படி? பல்வேறு சாதி, மதத்தை அடிப்படையாக கொண்டவர்கள் அசைவ உணவுப்பழக்கத்திற்கு மாறுகிறார்கள்? இவர்கள் கூட முன்னர் சைவ உணவுப்பழக்கத்தை ஆதரித்தவர்கள்தான். எதற்காக சைவர்கள், அசைவர்களின் ஆரோக்கியம் பற்றி இந்தளவு கவலைப்படுகிறார்கள்? ஒருவர் சமைப்பது, சாப்பிடுவது பற்றி இன்னொருவர் எப்படி தீர்மானிக்க முடியும்? ஒருவரின் சமையலறையில் புகுந்த என்ன சமைக்கவேண்டும் என்று ஒருவர் கூறுவது அடிப்படையான தேர்ந்தெடுக்கும் உரிமையை பறிப்பது ஆகாதா? அசைவர்கள், சைவர்களை இறைச்சி சாப்பிட வற்புறுத்தியதில்லை. அவர்களுக்கான எந்த தேர்வையும் இதுவரை முன்வைத்ததில்லை.
சைவர்கள், அசைவர்களை அறத்தில் தாழ்ந்தவர்களாகவும், குற்றவுணர்ச்சி கொள்ள வைக்கவும் தொடர்ச்சியாக முயல்கிறார்கள். இதற்கு சைவர்களின் மதம், கலாசாரம் காரணம்,. அவர்கள் சமூக ரீதியாக தங்களை உயர்வானவர்களாக கருதிக்கொள்கிறார்கள். இந்த பெருமை, ஆணவம் ஒன்றாக சேர்ந்து சமூக இயல்பாக, கருத்தியல் வாதமாக மாறுகிறது. சைவர்களின் உணவுப்பழக்கம் உயர்ந்தது என்றால் எதற்காக அந்த உணவுப்பழக்கம் கொண்டவர்கள் இதயநோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்?
சைவர்கள் அந்தளவு வலிமை பெற்றவர்கள் என்றால், அசைவர்கள் எப்படி விண்வெளி ஆராய்ச்சி, அறிவியல் துறைகளில் சாதிக்கிறார்கள்? அசைவர்கள்தானே கார், ஸ்மார்ட்போன்கள், கணினி ஆகிய தொழில்நுட்பங்களை உருவாக்கி மேம்படுத்துகிறார்கள். அது எப்படி சாத்தியமாகிறது? டேப்லட்டுகளை கண்டுபிடித்தவர்கள் சைவர்களா? அசைவர்கள்தானே? மேற்குலகில் அசைம் சாப்பிடும் மக்கள் அதிகம் உள்ளனர். அவர்கள், மத ரீதியாக தவறுகளை செய்தாலும் ஒத்துக்கொள்ளும் குணம் உண்டு. ஆனால், இந்த குணம், சாத்வீக சைவர்களிடையே மிக குறைவு.
அடுத்த வாதம் ஒன்றை பார்ப்போம். பூனை, சிறுத்தைகள் குட்டிகளை போட்டாலும் அவற்றை வெகுகாலம் வைத்து பராமரிக்க வேண்டியுள்ளது. மான், பசு ஆகியவற்றின் கன்றுகள் வேகமாக எழுந்து நின்று நடமாடத் தொடங்கிவிடுகின்றன என சைவர்கள் வாதம் ஒன்றைத் தொடங்கினர். உண்மைதான், அசைவ இரையுண்ணி விலங்குகள் தாயை சார்ந்துதான் வாழ்கின்றன. ஆனால், இந்த வாதத்தில் பெரிய ஓட்டையுள்ளது. மனித இனத்தில், குழந்தைகள் கூட தாயைச் சார்ந்துதான் தனது வாழ்க்கையை வாழ்கிறது. தன்னை தனியாக வாழும் அளவுக்கு பலப்படுத்திக்கொண்ட பிறகே, பெற்றோரை விட்டு பிரிகிறார்கள். அதுவரை பாதுகாப்பு, அன்பு, அரவணைப்பு தேவைப்படுகிறது. மனிதர்கள் குழந்தைகளோடு நின்றுவிடுவதில்லை. அவர்களின் பேரன், பேத்திகள் என குடும்பத்தை விரிவாக்குகிறார்கள். அவர்களை தங்களை சார்ந்து இருக்குமாறு செய்கிறார்கள். அதோடு தங்கள் முடிவை பிள்ளைகள் ஆதரிக்கவேண்டும் என வற்புறுத்துகிறார்கள். விலங்குகளைப் பொறுத்து சைவமோ, அசைவமோ அவற்றுக்கு மனிதர்களைப் போல உணவு உண்பதில் பெரிய லட்சியமோ, நோக்கமோ கூட இருந்திருக்குமா என்று தெரியவில்லை.
சைவர்களுக்கான உணவு பல லட்சம் விவசாய மக்களின் உழைப்பால் சாத்தியமாகிறது. அவர்களில் விவசாயிகள் பலரும் வேளாண்மையை அடிப்படையான வாழ்வாதாரமாக கொண்டிருக்கலாம். உண்மையில் சைவர்கள், அவர்கள் உண்ணும் தானியங்களை விளைவிக்கும் விவசாயிகள் சைவர்களா அசைவர்களா என கவலைப்படுவார்களா? அவர்களின் உணவுப்பழக்கத்தை ஆய்வகத்தில் சோதனை செய்தபிறகுதான் சாப்பிடுகிறார்களா என்ன? அசைவர்கள் நாட்டை எண்ணூறு ஆண்டுகாலம் ஆள்வதற்கு உதவி செய்தவர்கள் யார்? தூய சைவ உணவுப்பழக்கத்தை தூக்கிப்பிடிப்பவர்களின் சாதி, வர்க்கம் என்ன? அவர்கள்தான் குறிப்பிட்ட இடத்தில் அசைவர்கள் உள்ளே வரக்கூடாது என்று கூறுகிறார்கள்.
அடிப்படையில், உணவு உண்ணுதல் என்பது ஒருவரின் தனிப்பட்ட விவகாரம். ஒருவர் உண்ணும் உணவு வழியாக நல்ல இயல்பை பெறுகிறார் என்றால், இந்திய கலாசாரத்தில் சாதிமுறை, வர்க்க முறை எதற்கு இருக்கப்போகிறது? சுரண்டல், ஒட்டுண்ணித்தனம் என்பதெல்லாம் மதத்தின் பெயரால் நடந்திருக்காது அல்லவா? ஒருவன் சாப்பிடும் உணவுகளை ஓரங்கட்டி வைத்துவிட்டு பிறரை எப்படி நடத்துகிறான் என்பதைப் பார்த்தாலே போதுமானது. ஒருவன், தான் சாப்பிடும் உணவு வகைகளைப் பற்றி பெருமைப்படுவதை விட பிறரை துன்புறுத்தாமல் இருப்பது, பிறரின் உணவு விருப்பங்களில் தலையிடாமல் இருப்பது என்பதே முக்கியமானது. உண்மையில் சாத்வீகம் என்பது செயல்பாடாக இப்படித்தான் இருக்க முடியும்.
மூலம்
தலித் கிச்சன்ஸ் ஆப் மராத்வாடா - சாகு படோல்
சைவர் - சைவ உணவுப்பழக்கம் கொண்டவர்கள்
அசைவர் - அசைவ உணவுப்பழக்கம் கொண்டவர்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக