தொடர்ச்சியாக கொல்லப்படும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் !
பூட் சவுண்ட்
சுரேஷ் கோபி, பாலா, ஹனி ரோஸ்
மலையாளம்
பிரிவு உபசார விழா நடத்தப்பட்ட போலீஸ் அதிகாரி, வீட்டுக்கு போகும் வழியில் கழுத்து அறுத்து கொல்லப்படுகிறார். அதை விசாரிக்க நாயகன் வருகிறார். கூடுதலாக, ஓய்வு பெற்ற இன்னொரு போலீஸ்காரரின் மகள் காணாமல் போகிறாள். இந்த வழக்கையும் நாயகனே விசாரிக்கிறார். அதில் அவருக்கு நிறைய உண்மைகள் தெரிய வருகிறது.
கேரளத்தில் அவசரநிலை காலகட்டத்தில் காவல்துறை செய்த வல்லுறவு, கொலைகளை பின்னணியாக கொண்ட கதை. அவசர நிலையை சாதகமாக பயன்படுத்தி, காவல்துறை அதிகாரிகள் பத்திரிக்கையாளர் குடும்பத்தை அழிக்கிறார்கள். பத்திரிக்கை நடத்துபவரின் மனைவியை வல்லுறவு செய்கிறார்கள். அவரது மகள் கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு காவல்நிலையத்தில் கொல்லப்படுகிறாள். பத்திரிகையாளர் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு பல்வேறு போலி வழக்குகள் வழியாக இரட்டை ஆயுள்தண்டனை விதிக்கப்படுகிறது.
கல்லூரி படிக்கும் மகள் காணாமல் போன செய்தியை ஒய்வுபெற்ற அதிகாரி, நாயகனுக்கு கூறுகிறார். நாயகனும் அதை ஏற்று மகளை தேடித்தருவதாக குறிப்பாக உயிரோடு... என்று கூறுகிறார். மகளைப் பற்றிய தகவல்களை விசாரித்தால், எந்த துப்பும் கிடைப்பதில்லை. அப்போது, ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் இளைஞன் ஒருவரை சந்திக்கிறான் நாயகன். அவன், தான் காணாமல் போன இளம்பெண்ணின் காதலன். அவளை ரிசார்ட் முதலாளி அடைத்து வைத்துள்ளார். ருக்மணி என்ற அவரது முன்னாள் மனைவியைக் கொன்றால்தான், காதலியை உயிரோடு விடுவேன் என அச்சுறுத்துகிறார் என்று கூறுகிறான். அந்த இடத்தில் நாயகன், இக்கதையை கூறும் இளைஞன் பற்றி பெரிதாக சந்தேகப்படவில்லை. அவனைப் பற்றிய தொடர்பு தகவல்களை கூட வாங்குவதில்லை.
நாயகன் நேராக ரிசார்ட்டுக்கு செல்கிறான். அங்கு சென்று இளைஞன் கொடுத்த தகவல்படி விசாரிக்க முனைகிறார். அங்குள்ளவர் கூறும் தகவல்படி, இளைஞன் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியின் மகளை அங்கு கூட்டி வந்ததே அவளை அனுபவிக்கத்தான். திருமணம் செய்வதற்கு அல்ல என்று மற்றொரு கதை கூறப்படுகிறது. இதில் எது உண்மை? அந்த இளைஞனைத் தேடிப்போனால், அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்து, ரிசார்ட்டின் முதலாளியும் காணாமல் போகிறார்.
நாயகன் குழம்பிப்போகிறார். அந்த இளைஞன் யார், ஏன் அவன் சொல்லும் கதையும், ரிசார்ட் முதலாளி சொல்லும் கதையும் வேறு மாதிரி உள்ளது என யோசிக்கிறார். அந்த நிலையில், அவர் வீட்டில் அவரைக் கொல்வதற்கான தாக்குதல் நடைபெறுகிறது. அதை வெற்றிகரமாக சமாளிக்கிறார். அடிக்க முயன்ற கூட்டத்தில் கதை கட்டிய இளைஞன் இருக்கிறான். அவன் பெயர் ராகுல்.
உண்மையில் ஏன் அவன் தாக்குதல் நடத்துகிறான், அதன் பின்னணி பற்றி ஆராய்வதுதான் திரைக்கதை சுவாரசியம்.
மலையாளப்படங்கள் நிதானமாக நகர்ந்தாலும் கதை சொல்வதிலுள்ள அழுத்தம் திறம்பட உள்ளது. இது ஒரு புலனாய்வு கதை. வலி நிரம்பிய நினைவுகளைக் கொண்டு வாழ முடியாமல் தவிக்கும் குடும்பத்துடைய வழக்கு. நடிப்பு என்ற வகையில் அனைவருமே சிறப்பாக பங்களித்திருக்கிறார்கள். அவசரநிலைமை காலத்தில் நடந்த அநீதிகளை வைத்து குற்ற புலனாய்வு படம் என்பது நல்ல சிந்தனை. மூன்று காவல்துறை அதிகாரிகளை கொல்வதற்கான காரணங்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இறுதியாக தேயிலை தோட்டத்தில் நடைபெறும் சண்டை இன்னும் கொஞ்சம் கவனத்துடன் இருந்திருக்கலாம். உடை, ஆயுதங்கள் அனைத்தும் வினோதமாக உள்ளன. அல்டிமேட்டான நோக்கம் ஓய்வுபெற்ற அதிகாரியை கொல்வது என்றால் அதற்கு எளிமையாக திட்டமிட்டாலே செய்திருக்கலாம். அதை எதற்கு நீட்டிக்கிறார்கள் என்று புரியவில்லை. இறுதியாக நாயகன், கொலையாளி யார் என்று அடையாளம் கண்டுகொள்கிறான். கொலையாளியை கைது செய்யாமல் விட்டுவிடுகிறார்.
தெலுங்கு படங்களைப் போல தேவையில்லாத பெருமை வீராப்பு வசனங்கள் இல்லாதது நிம்மதியைக் கொடுக்கிறது. சுரேஷ் கோபி, இதில் நாயகன். புலனாய்வு செய்வதில் தொடக்கத்தில் சறுக்கினாலும் பின்னர் சுதாரித்துவிடுகிறார். காவல்துறையின் அதிகாரத்தைப் பற்றிய பெருமை கொண்டிருந்தாலும் இறுதியாக குற்றவுணர்ச்சி கொண்ட மனதுடன் பணிக்கு திரும்புகிறார். படத்தில் ஹனிரோஸ் நாயகி. கேரளத்தின் புகழ்மிக்க பாடகர்களோடு மார்பிங் செய்த புகைப்படங்களை பார்க்கையில் சற்று வேதனையாக இருந்தது. மற்றபடி நடிப்பில் பரவாயில்லை ரகம்தான். ஏறத்தாழ வணிக சினிமாக்களில் தமிழ் லூசுப்பெண். ஓய்வுபெற்ற ஐஜி மகள். பெரிய வேலை வெட்டி இல்லாத இளைஞனை, அதுவும் குடும்ப பின்னணி கூட இல்லை. அவனை காதலிக்கிறாள். திருமணம் செய்யக்கூட சம்மதிக்கிறாள். அதுவும் இரண்டுமாத பழக்கத்தில்... நம்ப முடியவில்லை.
வலுவான பின்கதை படத்தை ரசிக்க வைக்கிறது.
கோமாளிமேடை குழு
Release date: 8 February 2008 (Kerala)
Director: Shaji Kailas
Screenplay: Rajesh Jayaraman
Music director: Ishaan Dev, Rajamani
Executive producer: G. Suresh Kumar
Language: Malayalam
கருத்துகள்
கருத்துரையிடுக