காளான் வழியாக கல்லீரலை பாதிக்கும் நச்சு!

 

 


அறிவியல் கேள்வி பதில்கள்
மிஸ்டர் ரோனி

உணவு நச்சில் பாக்டீரியாவின் பங்குண்டா?

ஏன் இல்லாமல்... குளோஸ்டிரிடியம் பாட்டுலினம் என்ற பாக்டீரியா உணவில் நச்சுத்தன்மையை ஏற்படுத்துகிறது. ஒரு கிராம் நச்சு மூலம் பதினான்கு மில்லியன் வயது வந்தோரை கொல்ல முடியும். நீரை நூற்று இருபது டிகிரி செல்சியசில் கொதிக்க வைத்தால் மட்டுமே பாக்டீரியாவை அழிக்க முடியும். உடல் செயலிழப்பு, வாந்தி பிறகு இறப்பு வந்து சேரும். எனவே கேன் உணவுகளை கவனமாக பார்த்து மேற்கு நாடுகளின் தர கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டதா என பாருங்கள்.

உருளைக்கிழங்கை தாக்கும் முக்கியமான கிருமி எது?

பைடோதோரா இன்ஃபெஸ்டான்ஸ்  என்ற கிருமி, உருளைக்கிழங்கை தாக்கி அழிக்கும் திறன் பெற்றது. ஐரிஸ் மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு இடம்பெற, இக்கிருமி முக்கிய காரணம். 1845-49 ஆகிய காலகட்டத்தில் மட்டும் கிருமி ஏற்படுத்திய பஞ்சத்தால் நான்கு லட்சம் மக்கள் பட்டினியால் இறந்துபோனார்கள். ஏராளமானோர் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டனர்.

பூஞ்சைகளை விளக்கமாக வரைந்த குழந்தை நூல் எழுத்தாளர் யார்?

பீட்ரிக்ஸ் பாட்டர், பூஞ்சைகளைப் பற்றி 1888ஆம் ஆண்டே விளக்கமாக பல்வேறு படங்களை வரைந்தார். ஆனால் அதை  அறிவியலாளர்கள் எப்போதும் போல ஊதாசீனம் செய்தனர். பிந்தைய காலங்களில் வந்த திறந்த மனம் கொண்டவர்கள், பீட்ரிக்ஸ் வரைந்த பூஞ்சை படங்களை ஏற்றுக்கொண்டனர். பீட்ரிக்ஸ் பாட்டர், தி டேல் ஆப் பீட்டர் ராபிட் என்ற நூலை எழுதிய எழுத்தாளர்.

காளான்களில் சமைப்பதற்கு உகந்தது, நச்சானது என எப்படி பிரிப்பது?

இருநூறு காளான் வகைகள் சாப்பிட ஏற்றவை. எழுபது இன காளான்கள் நச்சுத்தன்மை கொண்டவை.

அமனிடா காளான்களின் சிறப்பு என்ன?

பெரும்பாலான நச்சு காளான்கள் அமானிடா இனத்தைச் சேர்ந்தவைதான். இதிலுள்ள நச்சான அமாடாக்சின் சிறிதளவு நமது உடலுக்குள் சென்றாலும், கல்லீரல் பாதிக்கப்பட்டுவிடும். சாகும்வரை அப்பாதிப்பை சரி செய்வது கடினம்.

நச்சு பாதிப்பு எப்படி இருக்கும்?

காளான்களில் உள்ள பூஞ்சை நச்சு ஒருவரின் உடலுக்குள் சென்று கல்லீரலை சேதப்படுத்துகிறது.எனவே, இறப்பு என்பது உறுதி. இதை தடுக்கும் எதிர் மருந்துகள் பெரிதாக இல்லை. நச்சு உடனடியாக அறிகுறிகளை வெளிப்படுத்தாது. ஐந்து அல்லது ஆறு நாட்களுக்குப் பிறகே உடல்நலக்குறைவு தொடங்கும். உணவில் ஏதோ கோளாறு என பலரும் நினைப்பார்கள். அந்த நேரத்தில் கல்லீரல் பழுதாகிவிட்டிருக்கும். எனவே, கல்லீரலை மாற்றுவதே ஒரே வழி.  

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்