சர்வாதிகாரத்தை எதிர்கொள்ள தப்பிக்க பல்வேறு வழிமுறைகளை கூறும் நூல்!





 ஆன் டைரனி
டிமோத்தி ஸ்னைடர்

இந்த நூல், சர்வாதிகாரம் எப்படி தொடங்குகிறது, அதற்கு ஆதரவு கிடைப்பது எங்கிருந்து, மக்கள் அதை ஏன் ஏற்கிறார்கள் என்பதை இரு உலகப்போர்கள் பின்னணியில் இருந்து ஆராய்கிறது.

சர்வாதிகாரம் பற்றிய அடிப்படைக் கருத்து ஒன்றைக் கூறிவிட்டு வரலாற்று சம்பவங்களுக்கு நூல் செல்கிறது. இது படிக்க சற்று ஆறுதலைக் கொடுக்கிறது. எழுத்தாளர் டிமோத்தி, வரலாற்றை மட்டும் எடுத்துக்கொண்டு கட்டுரை எழுதினால், அது நூலை பலநூறு பக்கங்கள் கொண்டதாக எளிதாக மாற்றியிருக்கும். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை.

சர்வாதிகாரம் வளர்ந்து வரும் நாடாக இந்தியாவையும் எழுத்தாளர் டிமோத்தி குறிப்பிட்டிருப்பது அவரது தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகிறது. அவர் வரலாற்று ரீதியாக ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளை முன்னுதாரணமாக கொண்டு நிறைய சம்பவங்களை விளக்குகிறார். அவற்றைப் படிக்கும்போதே நமக்கு திகைப்பாக உள்ளது. ஒரு போர் நடைபெறுகிறது. அதற்கு ஆதரவாக, எதிராக அணி திரள்வோருக்கு பல திட்டங்கள், எதிர்பார்ப்புகள் இருக்கும். அதைப்பற்றிய விவரிப்பு யூதர்களின் இனப்படுகொலையை எப்படி வல்லரசு நாடுகள் கண்டும் காணாமலும் இருந்தன என்பதை விளக்கிக் கூறுகிறது.

இந்நூலை வாசிப்பவர், ஓரளவுக்கு சர்வாதிகாரம் எந்த வடிவில் தலைதூக்கும் என்பதை அறிந்துகொள்ள முடியும். அதன் வழியாக அவர் போராட்டங்களில் ஈடுபடலாம். அல்லது தன்னை மட்டும் காப்பாற்றிக்கொண்டு வேறு ஏதாவது நாட்டிற்கு தப்பி ஓடிவிடலாம்.எதை செய்தாலும் சரிதான். உயிர் பிழைத்திருப்பது முக்கியம் அல்லவா?

சர்வாதிகாரிகள், தங்களை கண்ணை மூடிக்கொண்டு நம்பும் பக்தர்களை எப்படி மத தலைவர்கள் போல உருவாக்குகிறார்கள் என்பதே. அந்த வகையில் நூலில் இரு உதாரணங்கள் உள்ளன. ஒன்று ராணுவ வீரர் போரில் கையை இழந்த பிறகும்கூட ஹிட்லரை நம்பிக்கையுடன் வணங்கிப் போற்றுவது, அடுத்து, பக்தர்களுடன் செய்யும் விவாதத்தில் சிந்தனையாளர்கள் மெல்ல நாஜிக்கட்சியின் பக்கம் செல்வதைக் கூறும் பத்தி ஒன்றுள்ளது. இவை இரண்டுமே எப்படி பிரசாரம் மக்களின் மனதை மாற்றுகிறது என்பதற்கு சான்று.

உலக நாடுகள் பலவும் வலதுசாரியின் பக்கம் நகர்ந்து வருகிறது. இந்த சூழலில், சர்வாதிகாரம் மெல்ல வளர்ந்து வருகிறது. மதவாதம் மேலோங்கி வருகிறது. அதைப்பற்றிய அக்கறை இருப்பவர்கள் வாசிக்கலாம்.
கோமாளிமேடை குழு

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்