முஸ்லீம்களை தீவிரவாதிகளாக்கும் அமைச்சர், காவல்துறை உயரதிகாரி, தீவிரவாதி ஆகியோரைக் கொன்றால் வாய்மை வென்றுவிடும்!
சத்யமேவ ஜெயதே
தெலுங்கு
ராஜசேகர், சிவாஜி, சஞ்சனா, ஷெரில் பின்டோ
இசை சின்னா
இயக்கம் ஜீவிதா
அரசு மருத்துவர் இக்பால் அன்சாரி என்பவர், தீவிரவாதி என குற்றம்சாட்டப்படுகிறார். அவரை குறிப்பிட்ட இடத்திலுள்ள நீதிமன்றத்திற்கு கூட்டிச்செல்ல வேண்டும். அதற்கு நாயகன் உட்பட சில அதிகாரிகளை தேர்ந்தெடுத்து குழுவை தயாரிக்கிறார்கள். அக்குழு, இக்பாலை நீதிமன்றத்தில் சமர்பித்ததா இல்லையா என்பதே கதை.
மீண்டும் என்கவுண்டர் அதிகாரியாக ராஜசேகர் நடித்திருக்கிறார். இம்முறை படத்தில் சிவாஜிக்கு இடம் கொடுத்திருக்கிறார்கள். அவரும் ஷெரில் பின்டோவுக்கும் பாடல் காட்சிகள், கிளு கிளு காட்சிகள், காமெடி ஆகியவை உண்டு. குழுவிலுள்ளவர்களின் குடு்ம்பங்களை காட்டும்போதே, இவர்களை கொத்துக்கறியாக்கப் போகிறார்கள் என்று தெரிந்துவிடுகிறது. அதேதான் அதேதான்.
படத்தில் பாஸ்டர்ட் என்ற கெட்ட வார்த்தையை மட்டும் நாயகன் எத்தனை முறை சொல்லியிருப்பார் என்று எண்ண முடியாது. அத்தனை முறை விரக்தி அடைகிறார். கையாலாகாத்தனம், இயலாமையில் அலறிக்கொண்டே இருக்கிறார். படத்தில் நகைச்சுவைக்கென இருக்கும் ஒரே ஆன்மா சிவாஜி மட்டுமே. காதல் என்ற பெயரில் மகாலட்சுமி என்ற இளம்பெண்ணிடம் அவர் செய்யும் விஷயங்களை மானபங்கம், பாலியல் வல்லுறவு என எதைச்சொல்லி புரிய வைப்பது? அந்த பாத்திரம் கொஞ்சம் வேறுபட்டது என முதல்முறை பார்க்கும்போதே தெரிந்தது.
படித்த தைரியமான இளம்பெண். அனாதை ஆசிரமத்திற்கு உதவி செய்ய வருகிறாள். சரிதான். பிழையேதுமில்லை. ஆனால் காதல் என்ற பெயரில் ஒரு போலீஸ்காரர் செய்யும் மோசமான விஷயங்களை சில்மிஷங்களை பாலியல் சீண்டல்களை எப்படி ஏற்கிறார் என சந்தேகம் இருந்தது. ஒருவழியாக சிவாஜிக்கு இருந்தது போன்ற அதிர்ச்சி ஏதும் ஏற்படவில்லை.
மகான்காளி படத்தைப் போலவே இதிலும் நாயகன் ஆவேசம் கொண்டவர். அதிகம் யோசிக்காத முட்டாளாகவே இருக்கிறார். அவரது குணாதியத்தை விளக்க தொடக்கத்திலேயே ஒரு காட்சியை வைத்திருக்கிறார்கள். அதெல்லாம் சரி. ஆனால், போலீஸ் உயரதிகாரியும், அமைச்சரும் ஊழல் செய்பவர்கள் என அவருக்கு குற்றம்சாட்டப்பட்ட இக்பால் சொல்லித்தான் தெரியும் என்று கூறினால், ஆத்திரம் வராதா மக்களே?
உண்மை தெரிந்தபிறகு கூட புதிதாக ஏதாவது திட்டம் போட்டு நம்மை ஆச்சரியப்படுத்துவார் என்று பார்த்தால் போனிலேயே தொடர்புடைய ஆட்களுக்கு தடுத்துப்பார் என சவால் விடுகிறார். கையில் தோட்டாக்கள் கூட இல்லாத நிலையில் இப்படியொரு சவால்.
இறுதியாக சொன்ன செய்தி நவீன காலத்திற்கு முக்கியமானது. முஸ்லீம்கள் தொடங்கிய சர்பத் கம்பெனி பொருட்களை கூட வாங்காதீர்கள் என மதவாதிகள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். வக்பு வாரிய சொத்துக்களை சட்டம்போட்டு கொள்ளையடிக்க முயல்கிறார்கள். இந்த நேரத்தில் முஸ்லீம்களை ஆதரவளிப்பது, காப்பது முக்கியம். உ.பியில் குழந்தைகள் மூச்சு திணறி இறந்தபோது உதவி செய்த முஸ்லீம் மருத்துவரை அந்த மாநில அரசு வழக்கு போட்டு தீவிரவாதியாக காட்ட முயன்றது நினைவுக்கு வந்துபோகிறது. அவர் பின்னர் தமிழ்நாட்டிற்கு வந்து நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
படத்தில் இறுதியில் மதவாத வெறுப்பு மூட்டியவர்களை நாயகன் திட்டமிட்டு சம்பவம் ஒன்றை உருவாக்கி கொல்கிறார். சரிதான். ஆனால், அந்த குற்றம்சாட்டப்பட்ட மருத்துவரின் வீடு எரியூட்டப்பட்டது. அவரின் உறவுகளின் வீடுகள் தாக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டது. காவல்துறையினர் அவரை பகிரங்கமாக எச்சரித்து தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பேசியது, கடும் மன உளைச்சல் ஏற்படுத்தியது இதற்கெல்லாம் என்ன இழப்பீடு தரப்போகிறது சமூகம்?
உண்மையில் முஸ்லீம் தேசதுரோகி என்றால் ஊடகங்கள் எப்படி நம்புகின்றன?, காவல்துறையினர் எப்படி அதை ஏற்கிறார்கள். குற்றம் நிரூபிக்கப்படாதவரையில் அவர் குற்றவாளி கிடையாதுதானே? அதுவரை ஊடகங்கள் தீவிரவாதி என குற்றம்சாட்டப்பட்டவரை போட்டு தேவையான அளவு சம்பாதித்துக்கொள்வது தவறில்லையா?
படத்தில் நிறைய கோமாளியான காட்சிகள் உள்ளன. நாயகன், அவரது மாமனார் வீட்டை தீவிரவாதிகள் தாக்கும்போது, வெறும் ரிவால்வரை வைத்து சண்டை போடுகிறார். எதிரிகள் ரைபிள்களை வைத்து சுடுகிறார்கள். சிவாஜி கூட கோப்பை எடுத்து வரும்போது, டார்ச் லைட்டை வைத்து சண்டை போடுகிறார். எதிரிகள் தானியங்கி துப்பாக்கியை இயக்கி சுடுகிறார்கள். இதெல்லாம் என்ன புத்திசாலித்தனமான சண்டைகள் என படம் பிடித்தார்களோ தெரியவில்லை.
ஆவேசம் அதிகம். புத்திசாலித்தனம் குறைவு.
கோமாளிமேடைகுழு
கருத்துகள்
கருத்துரையிடுக