அரசியல்வாதிகள், காவல்துறை கைகோப்பதால் ஐபிஎஸ் பதவியை கைவிட்டு மாஃபியா தலைவனாகும் நாயகன்!

 

 

காவல்நிலையம்


சுரேஷ்கோபி, ஜோதிர்மயி
மலையாளம்

தயாசங்கர் என்ற எஸ்பி, கேரளத்திற்கு பணிபுரிய வருகிறார். அவருக்கு மனைவி, தம்பி ஆகியோர் உண்டு. காவல்துறை கமிஷனர், அரசியல்வாதிகள், மாஃபியா தலைவன் ஜிவி ஆகியோர் செய்யும் சூழ்ச்சியால் தம்பி கொல்லப்பட்டு தலை வேறு முண்டம் வேறாக ஆக்கப்படுகிறான். மனைவிக்கு முதுகு எலும்பில் அடிபட்டு சக்கர நாற்காலியில் வாழ்க்கை அமைகிறது. தயாசங்கர் ஜிவியை எப்படி பழிவாங்கினார் என்பதே கதை.

படத்தின் தொடக்கத்தில் பாட்டாளி தோழன் என்ற ஒருவரை வில்லனாக காட்ட அரசியல்வாதிகள் முயல்கிறார்கள். அவருக்கு செல்வாக்கு பல பக்கம் இருப்பது போல தெரிகிறது. பல்வேறு சமூக சேவைகளை செய்கிறார். மருத்துவமனை, ஆதரவற்றோர் இல்லம், பெண்கள் காப்பகம் ஆகியவற்றை நடத்தி வருகிறார். அவரை எதிர்த்து அரசியல்வாதிகள் செய்யும் சூழ்ச்சியால், போலீஸ் ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொண்டு செல்லும் உணவுகளை கீழே கொட்டி சோதிக்கிறார்கள். ஆனால் எதுவும் காவல்துறை நினைத்தது போல நடப்பதில்லை. ஆயுதங்கள், போதைப்பொருள் என எதுவும் கிடைப்பதில்லை.
காவல்துறை அதிகாரி குழம்பிப்போகிறார். அவரது காதலி, பாட்டாளி தோழன் நல்ல மனிதர் கெட்டவர் இல்லை என்றாலும்  அதிகாரி அதைக் கேட்பதாக இல்லை. ஒருமுறை பாட்டாளி தோழன் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு்கொல்வதை புகைப்படம் எடுக்கிறார். அதை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்கிறார். அங்கும் பாட்டாளி தோழன் வெல்கிறார். பிறகு, காவல்துறை அதிகாரிக்கு பாட்டாளி தோழன் தனது கதையை சொல்கிறார். திரைப்படம் மெல்ல நகர்கிறது.

பாட்டாளி தோழன் என்ற பாடல் நன்றாக இருக்கிறது. காவல்நிலையம் என தமிழ் டப் படத்திற்கு பெயர் வைக்காமல் பாட்டாளி தோழன் என்று வைத்திருக்கலாம். படத்தில் வரும் வில்லன் ஜிவி ஒரு நயவஞ்சகன். எப்படிப்பட்டவன் என்றால் உதவி செய்தவர்களை இழிவுபடுத்துவதோடு, வேலை முடிந்தவுடன் கொன்றுவிடுவான். அப்படிப்பட்டவனை நாயகன் எப்படி நம்பி வேலைக்கு சேர்கிறார் என்று தெரியவில்லை.
தம்பியை குரூரமாக தலையை வெட்டி கொலைசெய்துவிட்டு மனைவியையும் நடமாட முடியாமல் செய்தவனை செத்துவிட்டானா என்று கூட பார்க்காமல் இருப்பார்? வில்லன் அடிக்கடி புனித திருமறை வாசகங்களை சொல்லிக்கொண்டே அநீதிகளை செய்கிறான். நாயகன் இந்து, வில்லன் கிறிஸ்தவன். இதற்கு ஏதாவது தொடர்பிருக்கிறதா என்று பார்வையாளர்கள்தான் கூறவேண்டும். சுரேஷ் கோபி வேறு இப்போது மதவாத கட்சியின் எம்.பி.

ஜோதிர்மயிக்கு பெரிதாக வேலையில்லை. நாயகனின் தம்பி வரும் காட்சிகள் குறைவு. அதில் வேறு சுரேஷ் கோபி, மனைவி, தம்பி ஆகியோர் தொடர்பான காட்சிகள் பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை. அவர்களை தொடக்கத்தில் காட்டும்போதே நமக்கு புரிந்துவிடுகிறது. வல்லுறவா அல்லது கொலையா, சித்திரவதையா என்றுதான் யோசிக்கிறோம்.

பாட்டாளித் தோழன் சரி. வசதியானவர். தந்திரமானவர். தன்னலமின்றி மக்களுக்கு உழைக்கிறார். சரி. ஆனால், தன்னுடைய எதிரி யாரென கூட விசாரிக்காமல் தெரிந்துகொள்ளாமல் இருப்பாரா என்ன? ஜிவி சொன்ன குறிப்பிட்ட ஆட்களை மட்டுமே அவர் கண்டுபிடித்து சிறையில் அடைக்கும்படி செய்கிறார். அதுவரை அவர்கள்  செய்த தவறான பணிகளுக்கு என்ன தண்டனை? அவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாட்டாளி தோழன் என்ன செய்தார்?

படம் முடிவடையும்போது பாட்டாளியின் செயல்களுக்கு உதவிய அனைவரும் காவல்துறையால், அல்லது ஜிவியால் கொல்லப்பட்டு விடுகிறார்கள். இறுதியாக பாட்டாளி, வில்லனை கொல்கிறார். அவரை கொல்வதால் பாட்டாளிக்கு கிடைப்பதென்ன? ஒன்றுமில்லை. தன்னுடைய உயிரை காப்பாற்றிக்கொள்கிறார். அவ்வளவேதான். கூடுதலாக சுட்டுக்கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரியின் பத்திரிக்கையாளர் காதலியின் கற்பை காப்பாற்றுகிறார்.

komalimedai blog
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்