பூச்சிமருந்து கண்டுபிடிக்கும் பேராசிரியர் நகரத்தில் சக்திவாய்ந்தவர்களை நண்பனுக்காக பலியெடுக்கும் கதை!
ஆயுதம்
தெலுங்கு
ராஜசேகர், குர்லின் சோப்ரா, சங்கீதா
பேராசிரியர் சித்தார்த்தன், தனது ஆருயிர் நண்பனைக் கொன்ற மூன்று அதிகார பலம் பெற்றவர்களை நேரம் குறித்து சவால்விட்டு கொல்கிறான். கொல்வதில் எப்போதும் போல பெரிய சுவாரசியம் ஏதுமில்லை. ஆனால், என்ன காரணத்திற்காக சித்தார்த்தனின் நண்பன் இறந்தான் என்பதே ஒரே சுவாரசியம்.
டாக்டர் ராஜசேகரின் படம். படம் முழுக்க அவரின் ஆதிக்கம்தான். குர்லின் சோப்ராவுக்கு பக்கத்து ஊர் தலைவரின் மகள் வேடம். நடிப்பிற்கு வாய்ப்பில்லை. காட்சிகளில் கவர்ச்சி காட்டி பாடல்களை பார்க்கும்படி செய்கிறார். சொந்த மாமன் மகள் சங்கீதாவுக்கும் இதே வேலைதான். அடிக்கடி திகைப்புக்கு உள்ளாக்கும்படி கவர்ச்சிப் பாடல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. வந்தே மாதரம் ஶ்ரீனிவாஸி்ன் இசை கேட்கும்படி இருக்கிறது.
படத்தில் சித்தார்த்தன் பாத்திரம், விவசாய மருந்துப்பொருள் கண்டுபிடிப்பாளர். படத்தின் தொடக்க காட்சியில், தொழிலதிபரின் வீட்டில் அவரது மகனுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெறுகிறது. அவர்கள் கொடூரமானவர்கள் என்பதைக் காட்ட வேலைக்கார சிறுமியை வல்லுறவு செய்கிறார்கள். அதுவும் மூன்றுபேர். எதற்கு இதுமாதிரியான காட்சி என்று தெரியவில்லை. அப்போதுதான், நடைபெறும் கொலையை பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ன? டிசம்பர் 31 என்ற அச்சு இறந்தவர்களின் மார்பில் இருக்கிறது. அதை வைத்து குற்றவாளியை கண்டுபிடிக்காவிட்டாலும் பரவாயில்லை. அவர் பயன்படுத்திய விஷ மருந்தைக்கூடவா ஆராயாமல் இருப்பார்கள்.
கலாபவன் மணி போலீசாக வருகிறார். அவரை தெலுங்கு சினிமாக்காரர்கள் குறளி வித்தை காட்ட வைத்து சிரிப்பு போலீசாக மாற்றுகிறார்கள். இதேபோல்தான் நகரம் என்ற படத்திலும் நடிக்க வைத்து வீணடித்திருப்பார்கள். எந்துக்கு? அவரது கடமை குற்றவாளியைப் பிடிப்பதுதானே, இறுதியாக சித்தார்த்தன் வட இந்திய நாயகியை மணக்கும்போது மணமேடை முன்பு வந்து குத்துடான்ஸ் ஆடுகிறார். கலாபவன் மணியை அல்ல காவல்துறையை கோமாளியாக சித்தரித்து சிதைக்கிறார்கள்.
தொழிலதிபர், அரசியல் தலைவர், காவல்துறை தலைவர் என மூன்று பெரும் சக்திகள் நகரங்களில் பல்வேறு அட்டூழியங்களை செய்கிறார்கள். இவர்களை எதிர்த்து நாயகன் செய்யும் போராட்டம் காலணா அளவுக்கு கூட நம்பகத்தன்மை கொண்டதாக இல்லை. அதுவும் அந்த மூன்று கொலைகள். இரு கிராம தலைவர்களை ஒன்றாக திரட்ட எதற்கு சித்தார்த்தன் திருமணம் செய்யவேண்டும்? எதிரி என்றால் எப்படியாவது அழிக்கவேண்டும், அவன் செய்யும் செயல்கள் ஊருக்கே நன்மை என்றால் கூட அதை ஆதரிக்க கூடாது என்று பிடிவாதம் பிடித்து ரவுடித்தனம் செய்பவர், அவரது மகன் இறந்துபோனதையொட்டி உடனே எப்படி மனம் மாறுகிறார். தனது பேத்தியை நாயகனுக்கு கட்டிக் கொடுக்கிறார் என்று புரியவில்லை.
இதில் எதிரியான ஊர்த்தலைவரின் முட்டாள்தனத்தை, கொடூரத்தைக் காட்ட வயல்காட்டை பயிர் வளர்ந்திருக்கிற நிலையில், பெட்ரோல் ஊற்றி கொளுத்துகிறார். ஸ்ஸ்..... தெலுங்கு படம் என்றால் சும்மாவா?
நாயகன் க்ரீன் வேலி என்ற பெயரில் தானாகவே பூச்சி மருந்தை தயாரித்து தனது ஊர்மக்களுக்கு வழங்குகிறார். அதை விட எதிரிகளை கொல்லும் நஞ்சிற்காகவே மெனக்கெடுகிறார். தெலுங்கு நடிகர் சிவாஜி படத்தில் நடித்திருக்கிறார். கொல்லப்படும் ஸ்டீரியோடைப் பாத்திரம். பரவாயில்லை.
கோமாளிமேடை குழு
கருத்துகள்
கருத்துரையிடுக