தில் இருப்பவன் இரண்டு மனைவிகளை கட்டியாள்வான்!
தில் இருப்பவன் இரண்டு மனைவிகளை கட்டியாள்வான்
தில் உன்னோடு
தெலுங்கு
சாய், ஜாஸ்மின் பாசின், பிரியதர்ஷினி கோஷ்
டிராவல்ஸ் வைத்து நடத்தும் சாய், ஐடி பணியாளரான சைத்ரா, வங்கி ஊழியரான சிம்ரன் என இருபெண்களை காதலிக்கிறார். இருவரையும் விட்டுக்கொடுக்காமல் காதலித்து மணம் செய்துகொண்டாரா இல்லையா என்பதே கதை.
படத்தில் எந்த லாஜிக்கும் பார்க்காதீர்கள். பார்த்தால் படம் உங்களுக்கு பிடிக்காது. படத்தில் நடிகர் சாய் சங்கர் மட்டுமே தேறுகிறார். மற்றபடி வடக்கு தேச நடிகைகளில் பிரியதர்ஷினி கோஷ் மட்டுமே கொஞ்சமேனும் தேறுகிறார். நடிகை ஜாஸ்மி்ன் பாசினுக்கு அழகான உடைகளை அணிந்து நடக்கவிட்டிருக்கிறார்கள். அவர் பல காட்சிகளில் உள்மூலம் வந்தது போல முகத்தை வைத்துக்கொண்டு நிற்கிறார்.
சாய் டிராவல்ஸ் வைத்து நடத்துகிறார், அவரது அம்மா சீட்டுபிடித்து அதில் சம்பாதித்து வருகிறார். மால் ஒன்றில் சாய், சைத்ராவைப் பார்த்து உடனே காதல் கொள்கிறார். ஆனால், சைத்ராவோ காதலிப்பது போல நடித்து சாயின் பணம் இரண்டு லட்சத்தை தனது ஆடைகளுக்காக செலவழிக்க வைக்கிறார். இளிச்சவாயனான சாய், பெருந்தன்மையாக காதலுக்காக பணத்தை விட்டுக்கொடுத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கிறார்.
இணையத்தில் சைத்ரா அவரது புகைப்படத்தை போட்டு கேலி செய்ய பதிலுக்கு சாய், சைத்ராவின் தோழி முகத்தை சன்னி லியோன் உடலில் பொருத்தி மார்பிங் செய்து மிரட்டுகிறார். தான் செலவழித்த காசைக் கேட்கிறார். பிறகு என்னவோ, திடீரென காதலுக்காக பணத்தை வேண்டாம் என்கிறார். இரண்டு லட்ச ரூபாயை அம்போவென விட்டுவிடுகிறார்.
இந்த நேரத்தில் அவருக்கு சைத்ரா போன் செய்த எண் ஒன்றில் உள்ள இளம்பெண்,கெட்டவார்த்தையில் திட்டியது நினைவுக்கு வருகிறது. அந்த பெண்ணை தேடுகிறார். அடையாளம் கண்டுபிடித்தால், அந்த பெண் பஞ்சாபி. சிம்ரன்கவுர். வங்கியில் வேலை செய்யும் இளம்பெண். அழகாக வேறு இருக்கிறாள். அந்தபெண்ணிடம் சாய் நல்ல குணங்களை அடையாளம் காண்கிறார். பிள்ளை பக்திமான். ஓட்டல் என்று சொல்லி அந்த பெண்ணை நேரடியாக தனது வீட்டுக்கே சாப்பிட கூட்டிச் செல்கிறார். சைத்ராவை விட அனைத்து விதங்களிலும் சிம்ரன் கவுர் கெட்டிக்காரப் பெண்தான். ஆனால் சாய் திடீரென சைத்ராவை சாலையில் பார்க்கிறார்.அவள், விபத்துக்குள்ளான தம்பதியை காப்பாற்ற கோருகிறாள். அதையும் செய்கிறான். அவர்களது உறவு மீண்டும் மலர்கிறது. அவள் தான் அவனிடம் ஏமாற்றி செலவு செய்த பணத்தை திரும்ப கொடுக்கிறாள். சாய் அதை வாங்க மறுக்கிறான். அடுத்து, சிம்ரன் கவுர் தனது தோழி பார்ட்டியில் கலந்துகொண்டு போலீசில் சிக்கிவிட்டதாக கூறுகிறாள். அந்த இடத்திற்கு சென்று சாய் போலீசுக்கு தன் கையில் உள்ள தங்க பிரஸ்லெட்டை கொடுத்து சிம்ரனின் தோழியை மீட்கிறான். இப்போது சிம்ரன், சைத்ரா இருவருக்குமே சாய் மீது காதல் பூக்கிறது.
சாய்க்கு இரண்டு லட்டுமே தேவைப்படுகிறது. இருவருமே நல்ல வேலையில் இருப்பதால் கூட இருக்கலாம். இருவரையும் நண்பர்களாக்கினால் ஒரே நாளில் இருவரையும் கல்யாணம் செய்துகொள்ளலாம் என நினைக்கிறான். ஆனால், அந்த உண்மை இரு பெண்களுக்கும் தெரிந்ததா, அவர்களது குடும்பம் என்ன செய்தது என்பதே கதை.
எழுத்தாளர் பாலகுமாரன் கூட இருமனைவிகளைக் கொண்டவர்தான். சட்டப்படி இரு மனைவிகள் என்பதை அரசு ஏற்பதில்லை. சொத்துரிமையில் வரும் நிர்வாக பிரச்னைகளை அவர்கள் கவனம் கொள்கிறார்கள். ஆனால், சாய் என்ன சொல்ல வருகிறார் என்றால் இரண்டில் ஒன்று சரிபட்டு வராது. இரண்டு பெண்களும் இல்லாமல் என்னால் வாழ முடியாது. இருவருமே எனக்கு மனைவியாக தேவை என வாதிடுகிறார். அவரின் லாஜிக் ஒன்றும் தெளிவாக புரியவில்லை.
இரு காதலிகளையும் மனைவிகளாக்க இருவரும் நட்போடு இருக்கவேண்டும் என நினைத்து தாய்லாந்துக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு நடக்கிற சம்பவங்கள் ஏதும் கவரவில்லை. எந்த புதுமையுமில்லை.
படத்தில் உள்ளவை காதல் பாடல்களா, இல்லை குத்துப்பாட்டுகளா என்று தெரியவில்லை. நாயகிகளை பார்த்தவுடனே வரும் காதல் பாட்டுகளில் கூட நாயகிகளுக்கு நாகரிகமான உடைகளை கொடுத்திருக்கிறார்கள். தாய்லாந்துக்கு போனாலும் கூட உடைகள் குறையவில்லை. ஆனால், நடிப்பதற்கு வாய்ப்பில்லாத அல்லது அவ்வளவு நடிப்பு வராத நாயகிகளை கவர்ச்சியாக காட்டியிருந்தாலாவது படம் பார்க்க ஏதேனும் உந்துதல் கிடைத்திருக்கும். ஆனால், இயக்குநர் ஏனோ அப்படி யோசிக்கவில்லை. தான் சொல்ல வரும் இரண்டு பொண்டாட்டி கருத்து பலவீனமாக மாறிவிடக்கூடும் என நினைத்திருக்கிறார். அப்படி நினைப்பது சரியானதுதான். தனது கருத்துக்கு ஆதரவாக அவர் எந்த காட்சியையும் திட்டமாக தீர்க்கமாக உருவாக்கவில்லை.
படம் ஒரு கட்டத்தில் சீரியல் போல மாறிவிடுகிறது. எனவே, பெரிய ஆர்வம் ஏதும் வரமாட்டேன்கிறது. ஒளிப்பதிவு, இசை எல்லாமே சராசரிக்கும் கீழே உள்ளது. எப்போதுமே தெலுங்கு நாயகர்கள் இரண்டு நாயகிகளை வடக்கு தேசத்தி்ல இருந்து கூட்டி வந்து பாடல்களில் கக்கத்தில் வைத்து ஆடி, காதல் உணர்வு கூடி வல்லுறவு செய்வது போல அடையாளமாக காட்சிகளை அமைப்பாளர்கள். இந்தமுறை இரண்டு பேரையும் வைத்து குடும்பமே நடத்தலாம் என கூறியிருக்கிறார்கள்.
ரெட்புல் குடிப்பவர்களுக்கானது.
கோமாளிமேடைகுழு
கருத்துகள்
கருத்துரையிடுக