மருந்து = நஞ்சு ஓமியோபதி மருத்துவமுறை
மருந்து = நஞ்சு
ஓமியோபதி மருத்துவமுறை
நண்பர்களே, ஓமியோபதி முறையைப் பற்றி பேசுவது எனது சொந்த அனுபவம் மற்றும் வாசித்த சில ஆங்கில, தமிழ் மொழி நூல்களை மையமாக வைத்து மட்டுமே. எனவே, ஓமியோபதியை தேர்ந்தெடுக்கும்போது சரியான மருத்துவர் உதவியுடன் மருந்துகளை உண்ணுங்கள்.
வைட்டாலிட்டி என்பதை உயிர்சக்தி என மொழிபெயர்ப்போம். அதாவது, நாம் பிறக்கும்போது, நம் உடலை பாதுகாக்கும் சக்தி உடலோடு உருவாகிறது. இதுவே, பல்வேறு நோய்கள் வந்தாலும் கூட அதில் பாதிக்கப்பட்டு மீண்டு வருவதற்கு காரணமாக உள்ளது. இந்த சக்தி நோய்கள் வரும்போது பாதிக்கப்படுகிறது. அதை தீர்க்கும் முயற்சியில் செலவாகிறது என்று சொன்னாலும் சரிதான். உயிர்சக்தி என்பது ஒருவரின் ஆயுளை தீர்மானிக்கிறது.
ஒவ்வாமை பிரச்னை என்பதை ஒருசமயம் மறந்து நூடுல்ஸில் நிலக்கடலை போட்டு இறுதியாக முட்டையை மேலே ஊற்றி ஆப்பாயில் போல வைத்து சாப்பிட்டேன். உடலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. உடலுக்கு ஒரு உணவுப்பொருள் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் அதை வெளியேற்ற இரு வழிகள் உண்டு. வாந்தி, பேதி. இரண்டுமே இரவு வேளையில் ஏற்பட்டது. பிறகு, அதையொட்டி ஒருவாரம் காய்ச்சல் வந்ததில் ஒவ்வாமைக்கான சித்த மருந்துகளைக்கூட சாப்பிட முடியவில்லை. அதிகமாக காசு பிடுங்கும் தங்கப்பதக்கம் வாங்கிய மயிலாப்பூர் மருத்துவரிடம் சரண்டைந்தேன். பிஓஎஸ் மெஷினுக்கான மாத வாடகையைக்கூட நோயாளிகளிடமே வசூலிக்கும் நல்லிதயம் கொண்டவர். வன்மத்தை தவிர்த்துவிட்டு விஷயத்திற்கு வருவோம். நோயைக் குணமாக்குவதன் வழியாக உடல் சீரான இயக்க நிலைக்கு திரும்புகிறது.
மருத்துவர் சாமுவேல், மலேரியாவுக்கான மருந்தை தயாரிக்கும் பணியில் இருந்தார். மருந்தை தானே செலுத்தி காய்ச்சலை உருவாக்கி பிறகு குணமானார். இப்படி செய்த சோதனைகளை எழுதி வைத்துத்தான் ஆர்கனான் நூல் வெளியானது. அந்த நூலை அவர் எழுதி முடிக்கும்போது எண்பது வயதை எட்டியிருந்தார். அவர் இறந்து எண்பது ஆண்டுகள் கழித்தே ஆர்கனான் நூலை வெளியிட்டனர். 1810ஆம் ஆண்டு குணமாக்கும் கலை என்ற நூலை சாமுவேல் வெளியிட்டார். இதில் உயிர்சக்தி பற்றிய விளக்கங்கள் இருந்தன. பல்வேறு பதிப்புகள் வெளியாகி சிகிச்சைகள் திருத்தம் செய்யப்பட்டன.
ஓமியோபதி மருந்துகள், நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிட்டு நோயை தீர்க்கின்றன. இதற்கு வழங்கப்படும் மருந்துகள் நீர்த்துப்போன இயல்பில் இருக்கும். மருந்தின் வீரியமும் சற்று குறைவானவையே. பொடன்சியேஷன் என்ற முறையில் மருந்துகளை நீர்த்துப்போகவைத்து குலுக்கி உருவாக்குகிறார்கள்.
ஓமியோபதியில் ப்ரூவிங் என்று ஒரு பதம் உண்டு. அதாவது, எது நோயை உருவாக்குகிறதோ, அதுவே நோயைத் தீர்க்கும். இந்தமுறையில்தான் மருந்துகளை பல்வேறு வீரியங்களில் மருத்துவர்கள் கொடுக்கிறார்கள். உடல், மனம், உணர்வு என மூன்று வித அறிகுறிகளையும் மருத்துவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் நோயாளிக்கு தேவையான மருந்துகளை வழங்கமுடியும். ஓமியோபதியின் மருந்து உருவாக்க கோட்பாடுகள் இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக மாறவில்லை. அதாவது அதுவே நோயாளிகளுக்கு பயன் கொடுப்பதாக உள்ளது. மற்ற மருத்துவ முறைகள் நிறைய கருத்துகளை மாற்றிக்கொண்டுள்ளன.
ஓமியோபதி மருத்துவர்கள் மருந்துகளை ஆரோக்கியமானவர்களுக்கு கொடுத்து சோதிப்பதை பரிசோதனை என்று அழைக்கிறார்கள். ஆங்கிலத்தில் ப்ரூவிங் என்று கூறுகிறார்கள். இதன்படி, ஐந்து முதல் இருபது நபர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். மருந்துகளை கொடுத்து ஆறு முதல் பத்து வாரங்களுக்குப் பிறகு அவர்களிடம் அறிகுறிகள் கேட்கப்பட்டு பதிவு செய்யப்படுகிறது. இதில் பெரும்பாலானோர்க்கு தீவிரமான அறிகுறிகள் ஏற்படுவதில்லை. அப்படி ஏற்பட்டாலும் அவர்கள் ஓமியோபதி மருத்துவரை உடனே அணுகலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக