ஆயுர்வேத அடிப்படைகளை விளக்கிப் பேசும் நூல்!
பதார்த்த விஞ்ஞானம்
எல் மகாதேவன்
தமிழ்நாடு அரசு மின்னூலகம்
பதார்த்த விஞ்ஞானம் என்ற நூல், மொத்தம் 393 பக்கங்களைக் கொண்டது. இந்த நூலின் அடிப்படை ஆயுர்வேதம் என்றால் என்ன, அதில் நோய்களை எப்படி மருத்துவர்கள் அடையாளம் காண்கிறார்கள் என்பதை விளக்குவதேயாகும். ஆனால், நூலின் பெரும்பகுதியில் ஆயுர்வேதத்திற்கு அடிப்படையான பல்வேறு மெய்யியல் நூல்களை வரிசையாக விளக்கி கூறிக்கொண்டே வருகிறார் ஆசிரியர். பிறகு, ஆயுர்வேத நூலான சரக சம்ஹிதைக்கு வருகிறார்.
வடமொழி நூல்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட தமிழ்நூல் என்பதால், வடமொழி சொற்கள், வார்த்தைகள், சுலோகங்கள், பாடல்கள் நிறைய உள்ளன. வடமொழியை புகழ்ந்தும் இறுதியில் வாசகம் உள்ளது. நூல் முடியும்போது, வடமொழியை ஏன் தொன்மை ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்தார்கள் என தந்திரயுக்தி பகுதி விளக்குகிறது. வடமொழியைக் கற்றவர்கள்தான் ஆயுர்வேதம் கற்க முடியும், கற்கவேண்டும் என அழுத்திக் கூறப்படுகிறது.
ஆயுர்வேதத்தின் அடிப்படை, மூன்று தோஷங்கள், பஞ்ச பூதங்கள், கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள், மனம் என பல்வேறு விஷயங்களை வாசகர்களுக்கு தெளிவாக விளக்க முனைகிறது. அனைத்திலும் வடமொழி பெயர்கள் என்பதால் உடனே நினைவிலிருந்து நழுவிப்போகிறது. நூலில் ஓரிடத்தில் சரகர் சொல்வதாக நாத்திக கொள்கை பாவகொள்கை என நூலாசிரியர் கூறுகிறார். அது எதற்கு என்று புரியவில்லை. சரகர், மறுபிறப்பு, ஆன்மா, கர்மா என பலதையும் நம்புகிறார். அவருக்கு அவரது நம்பிக்கை பெரிதாக தெரிகிறது. அப்படியே மற்றவர்களுக்கும் தெரிய வேண்டும் என்பது ஒன்றும் கட்டாயமில்லையே.
இந்தியாவின் நீதிநெறி நூல்கள், மெய்யியல் நூல்கள் சார்ந்த தேடல்கள் உங்களுக்கு உண்டா, அப்படியென்றால் பதார்த்த விஞ்ஞானம் நூலை தரவிறக்கி வாசிக்கலாம். இதன் வழியாக மேலும் பல்வேறு நூல்களைத் தேடிச் செல்ல முடியும்.
பெரும்பாலான பக்கங்களில் நூல், அடிப்படையான நீதிநெறி நூல்களை விளக்கிச் சொல்லவே மெனக்கெட்டுள்ளது. அந்த நூல்களில் சாங்கிய மரபு நூல்கள் மட்டுமே சற்று அறிவியல் தன்மை கொண்டதாக உள்ளது. மற்றவை அனைத்துமே கட்டளைத் தன்மை கொண்டவை. வடமொழி நூல்கள் பற்றி தமிழில் இப்படியான நூலை அரசுத்துறை வெளியிட்டுள்ளது பாராட்டுக்குரியது. இந்த நூலை ஆசிரியர் எல் மகாதேவன் எவ்வித பணமும் பெறாமல் எழுதிக்கொடுத்துள்ளார். அதை அவரே தன்னடக்கத்துடன் கூறியுள்ளார். அமரராகிவிட்ட அவரின் பெயர் சொல்லும் நூல்களில் இதுவும் ஒன்று. ஆயுர்வேதம் சார்ந்து எழுபத்தியொரு நூல்களை நூலாசிரியர் எழுதியுள்ளார். ஆர்வமுள்ளவர்கள் வாங்கி வாசிக்கலாம். பயன் பெறலாம்.
கோமாளிமேடை குழு
கருத்துகள்
கருத்துரையிடுக