உரையாடலில் தேவையை, உணர்வுகளை வெளிப்படுத்த கற்கவேண்டும்!
நம் உணர்வுகளை வெளிப்படுத்த கற்க வேண்டும்!
ஒரு தம்பதியினர் இருக்கிறார்கள். திருமணமாகி இருபது ஆண்டுகள் இருக்கும். மனைவிக்கு கணவர் தான் பேசினால் அதற்கு பெரியளவில் எதிர்வினையோ, கருத்து கூறுதலோ செய்வதில்லை என வருத்தம். கோபத்தில் அவர், நீங்கள் எதையும் பேசாமல் சுவர் போல இருக்கிறீர்கள் என கூறிவிடுகிறார். இப்போது அங்கே என்ன விதமான உரையாடல் நடக்கும் என எதிர்பார்க்கிறீர்கள். பெரிதாக ஏதும் நடக்காது. கணவர் சுவர் என்ற விமர்சனத்தால் பாதிக்கப்பட்டு முன்னைவிட மயான அமைதியை கடைபிடிப்பார். மனைவிக்கு கணவரோடு உரையாடுவது இஷ்டம். அதை அவர் தனது உணர்வுநிலை இப்படி இருக்கிறது என கூறலாம். நீங்க என்னிடம் பேசினால் சந்தோஷமா இருக்கும் என கூறினால், அங்கு உரையாடல் நடக்கலாம். இந்த வாக்கியத்தை கவனித்தால், இதில் அவர் தனக்கு என்ன தேவை என்று கூறியிருக்கிறார். கணவர் மீதான விமர்சனம் ஏதுமில்லை. முன்முடிவுகள் இல்லை. மனைவி அவரது மனநிலையைக் கூட குறிப்பிடலாம். தவறில்லை. தேவையை வெளிப்படையாக கூறுவதில் தவறேதும் இல்லை.
ஒரு நாடு இருக்கிறது. அங்கு மக்களுக்கான புதிய திட்டங்களை சிந்தனையாளர்கள் குழு உருவாக்குகிறது. அதை அவர்கள் விவாதிக்க மக்களவைக்கு அனுப்புகிறார்கள். நாட்டின் தலைவர், உடனே தனது கட்சியினரின் பெரும்பானமை அதிகாரத்தை பயன்படுத்தியோ, அரசு புலனாய்வு அமைப்புகளை வைத்தோ எதிர்கட்சியை மிரட்டினால் திட்டம் நிச்சயம் வெற்றி பெறாது. அங்கு தேவை, எதிர்கட்சிகளையும், தனது அணியில் உள்ள பிற கட்சியினரையும் கூட்டி வைத்து திட்டங்களை விளக்கி அதை வெற்றிப் பெறச்செய்ய ஒத்துழைப்பு கோர வேண்டும். ஜனநாயக குடியரசு இந்த முறையில் செயல்படும். இந்த எதிர்த்தரப்புடனான உரையாடலில் நாட்டின் தலைவர், தன்னுடைய மனதில் திட்டம் பற்றி தோன்றும் கருத்தை எதிர்பார்க்கும் பயன்களை வெளிப்படையாக கூறவேண்டும். தவறான உள்நோக்கங்களை மனதில் வைத்துக்கொண்டு மூர்க்கமாக திட்டங்களை ஒற்றை மனிதராக நிறைவேற்ற முயல்வது எதிர்ப்பை, பயத்தை, வெறுப்பை மட்டுமே உருவாக்கும். ஒரு திட்டம் மக்களுக்கு பயன் கொடுக்கும் என விளக்கத் தெரியவில்லை என்றால், மக்களுக்கு எந்த பயனும் இல்லை.
இன்றைய நவீன தலைமுறையினர் எவரும் போன் அழைப்பை ஏற்று பேசுவதில்லை. அப்படி பேசினால் அது அரிதுதான். மின்னல் வேகத்தில் தட்டச்சு செய்து பதில் அனுப்புகிறார்கள். அனைத்துமே குறுஞ்செய்திகள்தான். ஏன் இப்படி என விமர்சிப்பதை விட அவர்கள் செய்திகளை அனுப்புவது ஏன் என புரிந்துகொண்டு ஏற்றவாறு இயங்கி வெற்றி பெறுவதே முக்கியம். நீங்கள் இளையோரை விமர்சித்தால், அவர்களுடனான உரையாடலை தவிர்க்கிறீர்கள். வேண்டாம் என நினைக்கிறீர்கள் என்று அர்த்தம். தகவல்தொடர்பு எந்த வகையில் இருந்தாலும் வேலை நிறைவானால் சரிதான் என்ற நிலைக்கு மேலாளர்கள் வந்து சேர்ந்திருக்கிறார்கள். குறுஞ்செய்தி எழுதுவதும் கூட சற்று குறைந்து குரல் பதிவுகள் வரத் தொடங்கிவிட்டன. கூகுள் மெசேஜில் நீங்கள் டேட்டாவைப் பயன்படுத்தி குரல் பதிவுகளை அனுப்ப முடியும். இதில், குறுஞ்செய்திகளை விட சற்று உணர்ச்சி கூடுதலாக இருக்கும்.
ஒரு பிரச்னை பற்றி விவாதிக்கும்போது அதிலுள்ள சிக்கல்களை வெளிப்படையாக உணர்வுப்பூர்வமாக கூறுவது மட்டுமே, அதை தீர்க்க உதவும். ஒரு வகுப்பிற்கு ஆசிரியராக செல்கிறீர்கள். அங்குள்ளோர் அனைவரும் உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள். உடனே ஆசிரியர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி பாடம் நடத்தலாம். ஆனால் பெரிய பயன் இருக்காது. யாரும் கவனிக்க மாட்டார்கள்.நீங்கள் மாணவர்களைப் பற்றியும் மாணவர்கள் உங்களைப் பற்றியும் அறிவது அவசியம். அப்போதுதான் அங்கு உரையாடல் நடைபெறும். நம்பிக்கை பிறக்கும். கேள்வி கேட்பதற்காக மாணவரை கன்னத்தில் அறைந்து மருத்துவமனையில் சேர்ப்பது, உரையாடலை வளர்க்காது. வன்முறையை, பகையை வளர்க்கும்.
ஒரு நாட்டில் ரயில்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றன. பல்லாயிரம் மக்கள் இறந்துபோகிறார்கள். துறைசார்ந்த அமைச்சர் இந்த இடத்தில் தனது உணர்வுகளை வெளிப்படையாக கூறி, தவறுகளை திருத்திக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால், ஊடகங்களின் முன்னிலையில் அழுது மூக்கு சிந்துகிறார் என்றால், அவரால் என்ன பயன் என மக்களுக்கு தோன்ற தொடங்கிவிடும். துறையில் இப்படியான சிக்கல்கள் உள்ளன.அதை சரிசெய்து வருகிறோம் என மனப்பூர்வமான ஒற்றைபேச்சு கூட இல்லை. இப்படியான நிலையில் நேர்மையான உரையாடல் நடக்கவே இல்லையே!
பிறர் மீதான விமர்சனங்களையே நம்மில் பெரும்பாலானோர் முன்வைக்கிறோம். என்னைச் சுற்றியுளோர் பொருட்படுத்தாமல் புறக்கணித்தனர். இது பிறர் மீதான மதிப்பீடு. இங்கு கூறுபவரின் மனநிலையைத் துல்லியமாக எடுத்துக்காட்ட, எனக்கு ஊக்கம் கிடைக்கவில்லை என்று கூறினால் போதுமானது. ஒன்றை எந்த வித மதிப்பீடுகளும் இன்றி கவனிப்பது மிக கடினம். இதை தத்துவவாதி
ஜே கிருஷ்ணமூர்த்தி எளிதாக கூறிக்கடக்கிறார். யோசித்துப் பார்த்து பின்தொடர்ந்தால் எவ்வளவு முக்கியம் என்று உங்களுக்கே தோன்றும்.
நாம் என்ன யோசிக்கிறோம், எப்படி உணர்கிறோம் என்பதை ஒருவர் துல்லியமாக வெளிப்படுத்தினால் அங்கு சுவர் இருக்காது. அன்புக்குரிய பல்லாயிரம் இதயங்களைக் காணலாம். அவர்களோடு இணைந்துகொள்ளலாம்.
மூலம் நான் வயலன்ட் கம்யூனிகேஷன்
தமிழாக்கம் வின்சென்ட் காபோ
கருத்துகள்
கருத்துரையிடுக