அமேசானை நெருக்கடியில் தள்ளும் போலிப்பொருட்கள்!

 

 

 

 

 

 

 

அமேசானில் கிடைக்கும் அனேக
டெக் பொருட்கள் போலியானவை!

அனைத்துமே போலி என்று கூறமுடியாது. ஆனால், நிறைய பொருட்களை ஒரே நிறம், வேறு எழுத்துகள் என நுட்பமாக பயனர்களை ஏமாற்றி வருகிறார்கள். இதனால், அமேசானே இப்படி செய்தால் எப்படி என மக்கள் வேறுவேறு இ விற்பனை தளங்களுக்கு மாறி வருகிறார்கள். அலி எக்ஸ்பிரஸ், டெமு ஆகிய இ விற்பனை தளங்களிலும் நிறைய போலிகள் உண்டு என ஊடகங்கள் கூறி வருகின்றன. போலிகளை முற்றாக தடுப்பது கடினம். ஆனால், அதிக விலை கொடுத்து மட்டமான பொருட்களை வாங்காமல் இருக்கலாமே? அதற்கான விழிப்புணர்வை உருவாக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

அமேசானில் ஒரு பொருளை வாங்கி சில நாட்களிலேயே அது போலி என தெரிந்தால், முப்பது நாட்களில் அதை வாங்கிய காசை திரும்ப பெறலாம். இதற்கு ஏ டு இசட் கேரண்டி புரடக்சன் என்ற வலைத்தள பக்கம் உள்ளது. பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், தங்களது பொருட்கள் பற்றி புகார் தெரிவிக்க வாய்ப்பு செய்யப்பட்டுள்ளது. இதில், பயனர்கள் தங்களுக்கு கிடைத்த போலிப்பொருட்களைப் பற்றி புகார் செய்ய முடியாது.

எஸ்டி கார்டுகள்
இதில் சான் டிஸ்க் நிறுவனத்தின் போலிகள் நிறைய உலவுகின்றன. சான்டிஸ்கின் மெமரி கார்டுகள் போலவே போலிகளும் வடிவமைக்கப்படுகின்றன. அசலில் 256 ஜிபியே அதிக விலைக்கு விற்கப்பட்டால், போலி மலிவான விலைக்கு 512ஜிபி அளவுக்கு தருகிறார்கள். எதுபோலி எது அசல் என குழப்பம் ஏற்பட்டுவிட்டால் நேரடியாக சான் டிஸ்கின் வலைத்தளம் சென்று மெமரி கார்டை வாங்கலாம். அதிலேயே உள்ள வலைத்தள பக்கத்தில் இருந்து இ வலைத்தளத்திற்கு வந்து அசல் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். எனவே, அமேசானில் சான்டிஸ்க் எனத் தேடாதீர்கள். இதில் அசலும் போலியும் அதிகம் கலந்தே வரும். அமேசானில் உள்ள ஃபில்டர்களைப் பயன்படுத்தி தேவையான பொருட்களை வடிகட்டி வாங்க முயலுங்கள்.

யுஎஸ்பி ஸ்டிக்

கார்செயர், கிங்க்ஸ்டன், சான்டிஸ்க், லெக்சார், பிஎன்ஒய், சாம்சங், வெர்பாட்டிம் என நிறைய யுஎஸ்பி தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இதில் போலிகள், எளிதாக அசல் பிராண்டின் பெயர்களைப் போலவே நிறம், எழுத்து வைத்து சில எழுத்துகளை மாற்றிப்போட்டு வாங்குபவர்களை ஏமாற்ற முயல்கின்றன. பொதுவாக யுஎஸ்பி விற்கும் பல்வேறு நிறுவனங்களும் மலிவான விலைக்கு வந்துவிட்டன. நீங்கள் பிராண்டின் பெயர், நினைவக அளவு மட்டும் கவனித்துப் பார்த்து வாங்கவேண்டும். அதிக நினைவகம், குறைந்த விலை என்பதில் மட்டும் விழுந்துவிடாதீர்கள். குறிப்பாக வாயில் நுழையவே நுழையாத பெயரில் கூட யுஎஸ்பிகளை அமேசான் விற்கிறது.

எஸ்எஸ்டி

இந்தப் பிரிவில் ஆன்வின்ஐஒய், ஹான்வின்பிஎஸ், வுஇசட் ஆகிய இப்படியெல்லாம் நிறுவனங்கள் எஸ்எஸ்டி விற்கின்றனவா என ஆச்சரியம் தோன்றும்படி சந்தையில் இருக்கின்றன. எனவே, கவனமாக இருந்து எஸ்எஸ்டியைத் தேர்ந்தெடுங்கள், விலை மலிவு என்ற வலையில் மட்டுமே விழுந்து விடாதீர்கள். பாஸ்வேர்ட், வேகம் ஆகியவற்றையும் கவனியுங்கள். இந்த வகையில் சாம்சங் நிறுவனத்தின் பல்வேறு தயாரிப்புகள் ஈர்ப்புடையவனவாக உள்ளன.

பிரிண்டருக்கான இங்க் காட்ரிட்ஜ்

கெனான், எப்சன், பிரதர் என நிறைய பிரிண்டர் நிறுவனங்களின் இங்க் காட்ரிட்ஜ்களை அசலாக வாங்க நினைத்தால் கோமணத்தோடு தெருவுக்கே வந்துவிடுவோம். அந்தளவு விலை வைத்து விற்று வருகிறார்கள். இதற்காகவே அமேசானில் மலிவான இங்க் காட்ரிட்ஜ்களை வாங்கி வருகிறார்கள். இதில் நிறைய போலிகளும் உண்டு. பார்க்க அசல் நிறுவனத்துடையது போலவே இங்க் பேக்குகளை வடிவமைக்கிறார்கள். போலிகளைப் பார்ப்போம்... எஜேய், ஹோய்இன்கோ, லெமேரோ, மைடோனர், உபின்கி என நிறைய டுபாக்கூர் நிறுவனங்கள் உள்ளன. ரம்மி விளையாடி வாழ்க்கையை வளமாக்கி தங்கம்,கார் ஜெயிப்பது எந்தளவு நிஜமோ அதேயளவு நிஜம் கொண்ட இங்க் காட்ரிட்ஜ் நிறுவனங்கள் இவை. கவனம்.

ஆப்பிளின் ஏர்பாட்ஸிலும் ஏராளமான போலிகள் உண்டு. இதை கவனமாக பார்த்துத்தான் வாங்காமல் தவிர்க்கவேண்டும். வெள்ளை நிறத்தில் இருந்தால் அனைத்தும் ஆப்பிள் ஆகிவிடாது அல்லவா?

போலிகளை எப்படி தவிர்ப்பது...


பொருட்கள் வரும் இடம், எங்கிருந்து விற்கப்படுகிறது என அனைத்திலும் அமேசான் என்று இருக்கிறதா என பாருங்கள். மூன்றாம் தரப்பு விற்பனையாளரை தவிருங்கள். அப்படித்தான் போலிகள் நிறைய அமேசானில் புழங்குகின்றன. பொருட்களை தேடும்போது ஸ்பான்சர்ட் லிங்குகள் என வந்தால் அதை புறக்கணியுங்கள். அமேசான் முழுப்பொறுப்பேற்கும் பொருட்களை ஃபில்டரிலேயே நீங்கள் கிளிக் செய்து வைத்துக்கொண்டு தேடலாம்.

நன்றி
கம்யூட்டராக்டிவ்

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்