தூக்க குறைபாடுகளின் வகை, விமானப் பயண ஜெட்லாக் - மிஸ்டர் ரோனி

 

 

 

 

 





அறிவுப்பற்று
மிஸ்டர் ரோனி

தூக்க குறைபாடு நோய்கள் வகைகள் உண்டா?

அனைவரும் அறிந்த தூக்க குறைபாடு என்பது இன்சோம்னியா. இரவில் தூக்கமின்மை, தூங்காமல் விழித்திருப்பது, படுத்தாலும் ஓய்வே இன்றி எழுவது ஆகியவை இன்சோம்னியாவின் அறிகுறிகள். இக்குறைபாட்டிற்கு காரணமாக மன அழுத்தம், சோர்வு, மது அருந்துவது, காபி, தேநீர் அருந்துவதை காரணமாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஹைப்பர் சோம்னியா, பகல் இரவு என பாராமல் எப்போதும் தூங்கி வழிவது. இந்த வகையில் இக்குறைபாடு, இன்சோம்னியாவிற்கு அப்படியே எதிரானது. நார்கோலெப்சி, எப்போது ஒருவர் தூங்குவார் என்றே கூறமுடியாது. சில நிமிடங்களில் தூக்கத்தில் ஒருவர் ஆழ்ந்துவிடுவார். தூக்க செயலிழப்பு என மருத்துவர்கள் நார்கோலெப்சியைப் பற்றி குறிப்பிடுகிறார்கள். உணர்ச்சிகரமான நிகழ்வுகள், திடீர் தூக்கத்தை தூண்டிவிடுகின்றன. கண்கள் விழித்திருக்கும், மூச்சுவிடுவார்கள், மூளை செயல்படும். ஆனால் உடல் செயலிழந்த நிலையில் இருக்கும்.

ஸ்லீப் அப்னியா, குறைபாட்டில் ஒருவர் தூங்கும்போது திடீரென மூச்சு நின்றுபோய்விடும்.இதனால், அவர் தூக்கத்தில் இருந்து எழ நேரிடும். பலருக்கு பொதுவாக அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியா குறைபாடு ஏற்படுகிறது. தூங்கும்போது மூச்சு உள்ளேயும், வெளியேயும் போகாமல் இருப்பது அல்லது மூக்கு, வாயில் மூச்சு விட முடியாத நிலை என கூறலாம்.

மெனிங்கிடிஸ் எதனால் ஏற்படுகிறது?

நோய்த்தொற்று அல்லது அழற்சி என இதைக்கூறலாம். பாக்டீரியா, வைரஸ் அல்லது பூஞ்சையால் ஒருவருக்கு ஏற்படும் நோயே மெனிங்கிடிஸ். திடீரென ஏற்படும் காய்ச்சல், கடுமையான தலைவலி, கழுத்து இறுக்கமாக இருப்பது முக்கியமான அறிகுறி. இன்னும் நோய் தீவிரமாக இருந்தால், குமட்டல், வாந்தி, பசியின்மை, ஒளி கூசுவது, களைப்பு, குழப்பம், உடல் சமநிலை இழப்பது ஆகிய அறிகுறிகள் தெரியும். எதிர்நுண்ணுயிரி மருந்துகளை மருத்துவர் வழங்கினால் நோயாளி உயிர் பிழைக்க வாய்ப்புள்ளது.

விமானப்பயணத்தில் ஏற்படும் ஜெட்லாக் உடலை எப்படி பாதிக்கிறது?

விமானப்பயணத்தில் ஒருவர் பல்வேறு கால மண்டலங்களை கடந்து செல்கிறார். இதன் விளைவாக, உடலுக்கும் மனதுக்கும் ஏற்படும் அழுத்தமே ஜெட் லாக் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒருவரின் உடலில் சிர்காடியன் ரிதம் எனும் உயிரியல் கடிகார அமைப்பு உள்ளது. இந்த அமைப்பு இருபத்து நான்கு மணிநேரமும் இயங்குகிறது. இதன் விளைவாகவே ஒருவருக்கு பசி, தூக்கம், நினைவு, தீர்மானம் எடுப்பது ஆகிய விஷயங்களை செய்ய முடிகிறது. பல்வேறு காலமண்டலங்களை விமானத்தில் கடக்கும் பயணிக்கு, இந்த செயல்பாடு இசைவின்றி போகிறது. விமானப் பயணம் முடிந்தபிறகு சற்றுநேரம் ஓய்வெடுத்தால் உடல் மெல்ல பழைய நிலைக்கு திரும்பிவிடும். இதில் பெரிதாக கவலைப்பட அவசியமில்லை. மேற்கு திசையை விட கிழக்கு திசை நோக்கி பயணிக்கும்போது ஜெட்லாக் பிரச்னை தீவிரமாகிறது.



 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்