மாநில பொருளாதார நலனுக்காக கனவு கண்ட லட்சியவாதித் தலைவர்! - புத்ததேவ் பட்டாச்சார்ஜி - அஞ்சலி
அஞ்சலி
புத்ததேவ் பட்டாச்சார்ஜி 1944-2024
மேற்கு வங்கத்தின் இடதுசாரிக்கட்சி, தனது முக்கியமான தலைவர்களில் ஒருவரான புத்ததேவை இழந்திருக்கிறது. அவருக்கு மனைவி மீரா, மகன் சுசேட்டன் ஆகியோர் உண்டு. மாநிலத்தில் இரண்டு முறை தொடர்ச்சியாக தேர்தலில் வென்று முதல்வராக பதவி வகித்தார். 2000-11 வரையிலான காலகட்டத்தில், மேற்கு வங்கத்தை தொழில்துறை சார்ந்த மாநிலமாக பல்வேறு முதலீடுகளை ஈர்க்கக் கூடியதாக மாற்ற கனவு கண்டார். ஆனால் அக்கனவு நிறைவேறவில்லை. புத்ததேவின் இறப்பு முக்கியமான காலகட்டத்தில் நடந்திருக்கிறது என்றே கூறவேண்டும். அவர் முதல்வராக பதவியேற்றது இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு.... 1977 ஆம் ஆண்டு ஜோதிபாசு தலைமையின் கீழ் இடதுசாரி கட்சி தேர்தலில் பெரும் வெற்றியை பெற்று ஆட்சி அமைத்தது.
அன்றைய காலம் அரசியல் சிந்தனையாளர்களுக்கானது. பல்வேறு அரசியல் தத்துவவாதிகளின் கொள்கை, கோட்பாடுகள், மேற்கோள்கள், செயல்பாடுகள் என அரசியல்தளம் மாறியிருந்தது. இப்படியான சூழலில் வளர்ந்து வந்த புத்ததேவ் கவிதைகளை எழுதினார். புத்தக திருவிழாக்களுக்கு தொடர்ந்து சென்றுகொண்டிருந்தார். காப்ரியல் கார்சியா மார்கேஸ் நூல்களை மொழிபெயர்த்தார். திரைப்படங்களைப் பார்த்தார். இலக்கிய நூல்களை வாசித்தார். கவிஞர் தாகூரின் ஐநூறுக்கும் மேற்பட்ட கவிதைகளை மனப்பாடம் செய்து வைத்திருந்தார் என அவரது நண்பர்கள் தகவல் தெரிவிக்கிறார்கள். காப்காவின் உருமாற்றம் என்ற கதையை மொழிபெயர்த்து போகா என்ற பெயரில் நாடகமாக எழுதினார். பல்வேறு முறை அரங்கேற்றப்பட்டு, விமர்சனங்களைப் பெற்ற நாடகங்களில் இதுவும் ஒன்று.
மேற்கு வங்கத்தை தொழில்துறை சார்ந்து வலிமையான மாநிலமாக மாற்ற புத்ததேவ் கனவு கண்டார். அதை நிறைவேற்ற கடுமையான உழைத்தார். தனது செயல்பாடுகளை நேர்மையாக அமைத்தார். தனது செயல்பாட்டில் எந்த தவறையும் அவரால் காண முடியவில்லை. ஆனால், அதன் காரணமாகவே துன்பமுற்று இறுதியாக ஆட்சியையும் இழந்தார். கட்சியினரே விமர்சித்தாலும், மேற்கு வங்க மக்கள் காண்பதற்கான மாபெரும் கனவை புத்ததேவ் உருவாக்கினார். அக்கனவை நிஜமாக்கும் முயற்சியில் அவர் தோற்று, ஆட்சியை இழந்தாலும் பெரிதாக அதைப் பற்றி கவலை கொள்ளவில்லை. ஏனெனில் அவர் கண்ட கனவு எதிர்காலத்திற்கானது.
மறைந்த புத்ததேவின் தொழில்துறை அமைச்சர் நிருபம் சென், முதலாளித்துவத்தோடு சமரசம் செய்துகொண்ட கம்யூனிஸ்ட் என குறிப்பிடுகிறார். 2001-2006 காலகட்டங்கள், புத்ததேவின் அரசியல் வாழ்க்கையில் முக்கியமானவை. அக்காலத்தில் மாநிலத்தை தொழில்துறையில் முன்னேறியதாக மாற பல்வேறு திட்டங்களை முதல்வர் புத்ததேவ் தீட்டினார். இடதுசாரி கட்சி என்பதால், தொழில்மயமாக்கலுக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனால், முதல்வர் புத்ததேவ் ஒருபுறமும், அவரது கட்சியினர் மறுபுறமும் நிற்பதாக விமர்சனங்கள் உருவாயின. கட்சியில் இதுபோல மாறுபட்ட கருத்துகள் உருவாவது இயல்புதான். அதை நாங்கள் பேசித் தீர்த்துக்கொள்வோம். இப்படியான விவாதங்கள் ஆரோக்கியமானதுதான் என்று புத்ததேவ் கூறினார்.
2006ஆம் ஆண்டு, புத்ததேவ் தலைமையில் இடதுசாரி கட்சி தேர்தலை சந்தித்து ஏழாவது வெற்றியைப் பெற்றது. 294 இடங்களில், கட்சி 235 இடங்களை கைப்பற்றி இருந்தது. இக்காலகட்டத்தில் பிராண்ட் புத்தா என்ற பெயர் பிரபலமாகி இருந்தது. அப்போதும் கூட புத்ததேவ், தேர்தல் வெற்றியை தன்னுடையதாக கருதவில்லை. அன்று பிரண்ட்லைனுக்கு அளித்த பேட்டியில் கூட இந்த இடத்தில் நான் என்பது கேள்வியல்ல. நாம் என்பதுதான் கேள்வி. நகர்ப்புறத்தில் உள்ள மக்கள் இடதுசாரி கட்சிக்கு வாக்களித்துள்ளனர். இது அனைவரும் சேர்ந்து உழைத்து பெற்ற வெற்றி என குறிப்பிட்டார்.
சிங்கூர், நந்திகிராமில் விவசாயிகளின் நிலங்களைப் பெற்று அதை தொழில்துறைக்கு வழங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே முதல்வர் புத்ததேவின் திட்டம். ஆனால், அதற்குள் ஏழை மக்களின் நிலங்களை பிடுங்கி தொழில்துறையினருக்கு கொடுக்கிறார்கள் என்ற எதிர்கட்சியினரின் வாதம் வலுவடைந்துவிட்டது. கிராம மக்களும் போராடத் தொடங்கிவிட்டனர். வேளாண்மைத்துறையில் மட்டுமே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாது. நாம் அத்துறையில் இருந்து தொழில்துறைக்கு நகரவேண்டும் என புத்ததேவ் கூறியதை மக்கள் எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
2007ஆம் ஆண்டு, மார்ச் 14 அன்று, நந்திகிராமில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய பதினான்கு போராட்டக்காரர்கள், காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானார்கள். இந்த சம்பவம், முதல்வராக இருந்த புத்ததேவின் பெருமையை, புகழை அழித்தது. இதற்கு அடுத்த ஆண்டு, டாடா மோட்டார்ஸ் நிறுவனம், மேற்கு வங்கத்திலிருந்து வெளியேறியது. ஜங்கல்மண்டலில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் பெற்றது, டார்ஜிலிங்கில் கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கை என பல்வேறு பிரச்னைகள் உருவாயின. முப்பது ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் கூட இடதுசாரி கட்சியால், பிரச்னைகளை தீர்க்க முடியவில்லை. சுமூகமான தீர்வை எட்ட முடியவில்லை.
2011ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தனது ஆட்சியை திரிணாமூல் காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியிடம் இழந்தது. புத்ததேவ் போட்டியிட்ட இடத்திலும் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
1944ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதி, கொல்கத்தாவின் வடக்குப் பகுதியில் புத்ததேவ் பிறந்தார். இவரது மாமா புகழ்பெற்ற கவிஞரான சுகந்தா பட்டாச்சார்ஜி. பள்ளிப்படிப்பை சைலேந்திர சர்க்கார் வித்யாலயாவில் படித்தார். பிரசிடென்சி கல்லூரியில் வங்க இலக்கியத்தில் பட்டம் பெற்றார். 1968-1982 காலகட்டத்தில் கல்லூரி படிப்போடு, இடதுசாரி இளைஞர் இயக்கத்தில் இணைந்து மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1972ஆம் ஆண்டு, இடதுசாரி கட்சியின் மாநில கமிட்டிக்கு தேர்வானார். 1982ஆம் ஆண்டு கட்சியில் மாநில செயலாளரானார். 1985ஆம் ஆண்டு கட்சியின் மத்திய கமிட்டியில் இணைந்தார்.
1987-1996 காலகட்ட இடதுசாரிகளின் ஆட்சியில் தகவல்தொடர்பு மற்றும் கலாசார தொடர்பு அமைச்சராக பணியாற்றினார். வெள்ளை வேட்டி, குர்தா அணிந்த அரசியல்வாதி. 1995ஆம் ஆண்டு, சர்வதேச திரைப்பட திருவிழாவை கொல்கத்தாவில் நடத்தினார். அரசியலில் ஈடுபட்டாலும் கிடைக்கும் நேரங்களில் புத்தகங்கள், இசை, திரைப்படங்களை விரும்புகிற மனிதராக புத்ததேவ் இருந்தார். அதேசமயம், அரசியல் பதவிக்காக தனது கொள்கைகளை சமரசம் செய்துகொள்ளாதவர். 1993ஆம் ஆண்டு அமைச்சர் பதவியை விட்டு விலகி அரசு, கட்சியோடு ஓராண்டுக்கும் மேலாக எந்தவித தொடர்பும் கொள்ளாமல் இருந்தார்.
தனிப்பட்ட மனிதராக புத்ததேவ், கூச்சசுபாவியாக இருந்தார். அதிகம் புன்னகைக்காதவர். இதை அரசியல் வட்டாரத்தில் ஆணவம் கொண்டவராக, கோபம் கொண்டவராக அர்த்தம் செய்துகொண்டனர். மிகச்சில நண்பர்களைக் கொண்ட புத்ததேவ், வாய்ப்பு கிடைக்கும்போது நூல்களை எழுதுவார். வீட்டில் அமர்ந்து கொண்டு நூல்களை வாசித்தபடியே இருப்பார். 2017ஆம் ஆண்டு, தி பர்த் அண்ட் டெத் ஆப் தி நாசி ஜெர்மனி என்ற நூலை எழுதி வெளியிட்டார். இடதுசாரி கட்சி, புத்ததேவின் புகழை, பெருமையைக் கொண்டே தேர்தல் வெற்றியைப் பெற்றது உண்மை. மாநிலத்தை மேம்படுத்த அவருக்கென தொலைநோக்கான கனவு இருந்தது. அதை சாத்தியப்படுத்த அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு தயாராக இருந்தார். துரதிர்ஷ்டவசமாக அக்கனவு, நிறைவேறவில்லை. நந்திகிராமில் மக்கள் பலியான சம்பவம் அவரது புகழைக் குலைத்தாலும் அரசியலில் அவரது நேர்மை என்பது பலரும் அறிந்த ஒன்று. இன்று இடதுசாரி கட்சி சந்திக்கும் தேர்தலில் கூட புத்ததேவின் ஏஐ தேர்தல் பிரசாரம் இணைந்துள்ளதே அவரது மங்காத புகழுக்கு சாட்சி. வெற்றி, தோல்வி என இரண்டையும் சமமாகவே பாவித்தார். அவரது வாழ்க்கை எதிர்காலத்தில் உருவாகும் அரசியல் தலைவர்களுக்கான வழிகாட்டுதலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
2024ஆம்ஆண்டு ஆகஸ்ட் எட்டாம்தேதி புத்ததேவ் பட்டாச்சார்ஜி இயற்கை எய்தினார்.
தமிழாக்க கட்டுரை
மூலம் - சுரித் சங்கர் சட்டோபாத்யாய்
நன்றி
பிரன்ட்லைன்
#communist #marxism #west bengal #kolkata #protest #industry #tribute #economy #shot #tata nano #integrity #writer #politics #maoist #intellect #buddhadeb bhattacharjee #bengali #bhadralok #resurgent state #jyoti basu #left front #cpim #honesty #mistakes #brand buddha #capitalism #fall from grace #leader #subtle humour #reputation #legacy
கருத்துகள்
கருத்துரையிடுக