பேசுவது என்பது தேவையை நிறைவேற்றும் கோரிக்கை!

 

 

 



 

 

 அகிம்சை மொழி
3
பேசுவது என்பது தேவையை நிறைவேற்றும் கோரிக்கை!

புகழ்பெற்ற கோவிலில் லட்டு, மாட்டு கொழுப்பில் செய்யப்பட்டுள்ளது என கோவில் தலைவர் கூறுகிறார். இந்த வாசகத்தைப் பார்த்தால் அவர் என்ன எதிர்பார்க்கிறார், என்ன வேண்டுகிறார் என்றே தெரியாது. நெய், தாவர நெய்யில் செய்யப்படவேண்டுமா?, மாட்டுக் கொழுப்பில் செய்ததற்காக யாரையாவது தண்டிக்க வேண்டுமா என நிறைய கேள்விகள் நமக்குள் எழுகின்றன. ஆனால், எதற்கும் எந்த பதிலும் இல்லை. இவற்றை இழிவான மலிந்த அரசியல் நோக்கங்களை மையமாக கொண்டு கூறப்படும் குற்றச்சாட்டு என கூறலாம்.

பொதுவாக ஒன்றைக் கூறுவது என எதையும் கூற முடியாது. ஒருவர் ரயில் மெதுவாக போகிறது என சலிப்புடன் கூறுகிறார். அவருடன் அருகில் உள்ள மனைவி அதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. அதே வாக்கியத்தை மூன்று முறை உரக்க கூறுகிறார். உடனே மனைவி, இப்போது நான் என்ன செய்யட்டும்? கீழே இறங்கி தள்ளனுமா என்று கேட்டால், அந்த உரையாடலில் பிழை உள்ளது என்று அர்த்தமாகிறது. கணவர், ரயில் தாமதமாக சென்றால், விமானத்தை பிடிக்க நேரமாகிவிடும் என்பதைக் கூற நினைத்திருக்கலாம். ஆனால், அதை மனைவியிடம் தெளிவாக உரையாடலில் கூறவேண்டும். அப்படி கூறவில்லை. அதுதான் தவறாகிப்போனது. வெறும் உணர்ச்சி மட்டுமே உரையாடலை அர்த்தமுள்ளதாக மாற்றாது. தெளிவும் தேவை.

எனக்கு தாகமாக இருக்கிறது என்று கூறுவதை விட கொஞ்சம் குடிக்க தண்ணீர் கொண்டு வருகிறாயா? என நேரடியாக கோரிக்கையை கூறிவிடுவது நல்லது. சொல்லும் தொனி கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இருக்கவேண்டும். உதவி கேட்கும்போது, அதிகாரத்தொனியை கையாள்வது நல்லதல்ல. உலகின் மிகப்பெரும் ஜனநாயகம் என பெருமைப்படும் நாடுகளில் கூட கேள்வி கேட்டால் காவல்துறை வைத்து கேள்வி கேட்டவர்களை அடித்து உதைப்பது நடைமுறைக்கு வந்துவிட்டது. இப்படியான வன்முறை மனப்போக்கு கொண்டவர்களிடம் முதுகை வளைத்துக்கொண்டு கேள்வி கேட்டு பதிலைப் பெறுவது தன்மானம் கொண்டவர்களுக்கு சாத்தியமானதல்ல. பிறரின் காலணிகளை நாக்கால் துடைத்து முன்னேறியவர்கள், நேரிய வழியில் உழைப்பால் முன்னேறியவர்களை அதிகாரத்தால் மிரட்டி கேள்விகளை உரையாடல்களை முடக்குகிறார்கள். இது பரஸ்பரம் மரியாதையை உருவாக்குவதல்ல. பயத்தை உண்டாக்குவது.

உறவோ, நட்போ அனைத்துமே பரஸ்பர நலன்களை அடிப்படையாக கொண்டே உருவாகிறது. அறிமுகமாகி ஐந்து நிமிடங்களுக்குள் ஒருவரை அலுவலகத்தில் என்ன வேலை, அதிகாரம் என்ன, தான் கொள்ளும் நட்பால் பிரயோஜனம் ஏதும் உண்டா என ஆராய்ந்து சாட்ஜிபிடியின் திறனுக்கே சவால் விடும் மனிதர்கள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். நாம் சொல்லும் சொற்களுக்கு, ஒருவரின் நேர்மையான எதிர்வினை என்ன என்பதைக் கவனிக்க வேண்டும். அதைப் பொறுத்து பேச்சை தொடரலாமா என முடிவு செய்யலாம். யோசிக்காமல் கருத்தை தெரிவித்துவிட்டு சாவகாசமாக சங்கடப்படக்கூடாது.

வன்முறையில்லாத உரையாடல் என்பதில் கேள்வி கேட்பவரும் வினயமாக கேட்கவேண்டும். பதில் தருபவரும் பதிலை விருப்பமாக அளிக்கவேண்டும். பதில் அளிப்பவரின் தொனி, அலட்சியமாகவோ, அதிகாரத்திற்கு, தண்டனைக்காக பயந்தோ, கோபமாகவோ, வழிபாடு கொண்டதாகவோ மாறிவிடக்கூடாது. அப்படி நடந்தால் அங்கு அகிம்சை வழி உரையாடல் நடக்கவில்லை என்று அர்த்தம். மனசாட்சி கொண்டவர்களிடத்தில் அகிம்சை உரையாடலை நடத்துவது எளிது. அதிகாரம், தண்டனை என மிரட்டுபவர்கள் தங்கள் பீடத்தை விட்டு கீழிறங்கி நிலத்தில் கால் வைத்து நடந்தால்தான் உரையாடல், மக்களின் மனநிலை என்பதே புரிபடும்.

மக்களை சந்தித்து அவர்களின் கஷ்டங்களைக் கேட்டு புரிந்துகொண்டு அதற்கேற்ப கொள்கைகளை வகுத்து அரசை நடத்துபவர்கள் வரலாற்றில் இடம் பிடிப்பார்கள். ஊடகங்களின் முதுகை பணம் கொடுத்து வளைத்து, வெற்றுப் புகழ்ச்சி மூலம் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தவர்கள் பலர். அவர்களின் பெயர்கள் கூட மக்களின் நினைவில் இல்லை. அகிம்சை வழி உரையாடலில் கேள்வி கேட்பவரின் உணர்வு, பதிலைக் கேட்டு எதிர்தரப்பை புரிந்துகொள்ளும் இயல்பைக் கொண்டிருக்கவேண்டும். அவமதிப்பு, ஏளனம், தண்டனை என்பதைக் கொண்டிருந்தால் அதற்கான பதிலடியும் தீவிரம் கொண்டதாக இருக்கும். அது உரையாடலின் அடிப்படையையே கெடுத்துவிடும்.

மூலம் நான் வயலன்ட் கம்யூனிகேஷன்
தமிழாக்கம் வின்சென்ட் காபோ


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்