அரசுக்கும், டெக் நிறுவனங்களுக்குமான மேலாதிக்க போட்டி!

 

 

 

 



 


அதிகாரப் பந்தயம் - அரசு, சமூக வலைத்தளங்களின் மேலாதிக்க மோதல் போக்கு!


இணையத்தில் உள்ள பல்வேறு சமூக வலைத்தளங்கள் மீது நெருக்கடிகள் திணிக்கப்பட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர் டெலிகிராம் குறுஞ்செய்தி நிறுவனத்தின் தலைவர் பாவெல் மீது குற்றச்சாட்டு பதிவாக, அவர் பிரான்சில் கைதானார். பிரேசில் நாட்டில் எக்ஸ் வலைத்தளம் நீதிமன்ற பிரதிநிதியை நியமிக்காத காரணத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மெட்டா நிறுவனம், பைடன் ஹாரிஸ் ஆகியோரின் நிர்வாகத்தால் சமூக வலைத்தள தணிக்கையை செய்யுமாறு நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறது.

டெலிகிராம் நிறுவனம், போதைப்பொருட்கள் கடத்தல், சட்டவிரோத பரிவர்த்தனைகள், குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல், ஆபாச வீடியோக்கள் பகிரல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளது. இதுபற்றிய தகவல்களை அரசு அமைப்புகளுக்கு தருவதில் டெலிகிராம் ஆர்வம் காட்டவில்லை.

பிரேசில் நாட்டில் உச்சநீதிமன்ற நீதிபதி எக்ஸ் தளத்தை தடை செய்ய உத்தரவு பிறப்பித்திருக்கிறார். நீதிபதி டீ மோரஸ், எக்ஸ் தளம் நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்தும் பிரதிநிதிகளை நீக்கியதால் இப்படியான தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். உச்சநீதிமன்ற நடவடிக்கை காரணமாக, பிரேசில் நாட்டில் எக்ஸ் தளத்தில் முறைகேடாக இணைந்துள்ள வலதுசாரி அரசியல் தலைவரான பொல்சனாரோவின் ஆதரவுக்கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. இதுபற்றி எக்ஸ் தளத்தில் குறிப்பிட்ட எலன் மஸ்க், மோரஸின் நடவடிக்கை சுதந்திர பேச்சுரிமைக்கு எதிரானது என்று குறிப்பிட்டார். இதுபோலவே டெலிகிராம், வாட்ஸ் அப் ஆகிய நிறுவனங்கள் தடையைச் சந்தித்து பிறகு உள்ளூர் பிரதிநிதிகளை நியமித்து மீண்டு வந்துள்ளன. 

பிரேசில் புதிதாக சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கவில்லை. ஒவ்வொரு நாட்டிலும் குறிப்பிட்ட சட்டங்கள் உள்ளன. அவற்றை அனுசரித்தால் நிறுவனங்கள் இயங்கலாம். இல்லையெனில் தடை விதிக்கப்படும். இதில் சீன நிறுவனங்கள் வராது. அவை உலகளவில் சந்திப்பது, அரசியல்ரீதியான தடை.

அமெரிக்க அரசு, மெட்டா நிறுவன வலைத்தளங்களில், குறுஞ்செய்தி நிறுவனங்களில் வெளியான கோவிட் -19 பதிவுகள், 2020ஆம் ஆண்டு தேர்தலுக்கு முந்திய ஹன்டர் பைடன் பற்றிய செய்திகள், நியூயார்க் போஸ்டின் செய்திகளை தவறாக சித்திரித்து முடக்கியது ஆகியவற்றுக்கு விளக்கம் கேட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான போலிச்செய்திகள் பரப்பப்படுகின்றன. அவை ஆளும் அரசுக்கு, மக்களுக்கு அச்சறுத்தலாக மாறுகின்றன. எனவே, சமூக வலைத்தளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தனிப்பட்ட செய்திகளை அனுப்பும் பயனர்கள் மீது அரசின் கண்காணிப்பு ஏவப்படுகிறது. அரசின் புலனாய்வு அமைப்புகள், சமூகவலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளை கண்காணிக்கத் தொடங்குகின்றன. சிலவற்றை முடக்கவும் தொடங்குகின்றன.  

பெரும்பாலான அரசுகள், சர்வாதிகாரத்தன்மையோடு இயங்கத் தொடங்கியுள்ளன. இவற்றை சரியான முறையில் நல்வழிப்படுத்தும் அதிகாரம் கொண்ட நீதிமன்றங்களும் தம் செயல்பாட்டில் அரசியல்ரீதியாக சமரசம் செய்துகொண்டு இயங்குகின்றன. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இந்தியா ஆகிய நாடுகளில் உருவாக்கப்பட்டுள்ள டிஜிட்டல் கட்டுப்பாட்டு சட்டங்கள், சமூக வலைத்தளங்களை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளன. இந்தியாவில் நீதிமன்ற உத்தரவு மூலம் குறிப்பிட்ட பதிவுகளை நீக்க முடியும். தமிழ்நாட்டில் மாநிலம், சுயாட்சி என்றாலே பேஸ்புக் பதிவுகள் நீக்கப்பட்டு விடுகின்றன. அந்தளவு அல்காரிதமே மாற்றப்பட்டு குறிப்பிட்ட வலதுசாரி மதவாத அரசியலுக்கு சாதகமாக மாறியுள்ளது. பிரிவு 69ஏ படி பதிவுகள் மறைமுகமாக தணிக்கை செய்யப்பட்டு வருகின்றன.

தங்களை மீறி செல்வாக்காக வளர்ந்துவிடுமோ என அரசு, சமூக வலைத்தளங்களை நடத்தும்  டெக் நிறுவனங்களைப் பார்த்து பயப்படுகின்றன. எனவே, அரசு தனது அரசு அமைப்புகளின் பலத்தைப் பயன்படுத்தி டெக் நிறுவனங்களின் மீது வழக்குத் தொடர்கிறது. பல்வேறு நெருக்கடிகளைக் கொடுக்கிறது. டெக் நிறுவனங்கள், லாபம் வருவதால் காசு கொடுத்தால் யாருக்கு என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்ற துணிச்சலைப் பெற்றுவிடுகின்றன. எனவே, அவர்களது தளத்தில் குறைந்தபட்ச தணிக்கை என்பதே இல்லாமல் போகிறது. காசு கிடைத்தால் சரி. வெறுப்பு பேச்சோ, ஜனநாயகத்தை குலைக்கும்போக்கோ எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும் என டெக் நிறுவனங்கள் அபாயகரமான இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளன.

வழிபாட்டுத்தலத்தில் உள்ள சிறுபான்மையினரை ஒருவர் துப்பாக்கியை எடுத்துச் சென்று சுட்டுக்கொல்ல முடிகிறது. அதை சமூக வலைத்தள வசதி மூலம் நேரலையில் செய்கிறார். இதை சமூகவலைத்தள நிர்வாகம் தடுக்கவில்லை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? டெக் நிறுவனங்கள் பணம் சம்பாதிப்பதில் காட்டும் அக்கறையை, வேட்கையை மக்கள் நலனில் கூட காட்டலாம். சமூகம் நலம் பெறும். டெக் நிறுவனங்கள் நிலத்தில் கால்பதித்து நிற்க கற்க வேண்டும். 

அரசு தனது அதிகாரத்தை நிலையாக தக்க வைத்துக்கொள்ள தவறான செயல்களை செய்துவருகிறது. டெக் நிறுவனங்களோடு சேர்ந்து சாதி, மத, இனக்குழு பிரிவினைகளை ஆழமாக செய்கிறது. குறுகிய கால லாபத்திற்காக இப்படி தவறான பாதையில் டெக் நிறுவனங்கள் செல்கின்றன. அரசோ, சர்வாதிகாரத்தில் வேறு ஒரு எல்லைக்கு செல்கின்றன. குறிப்பிட்ட பகுதியில் இணையத்தை தடை செய்து அங்கு நடக்கும் ராணுவ அநீதிகளை உலகின் பார்வைக்கு வராமல் தடுக்கிறது. 

 

ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் மக்களை திறந்தவெளி சிறையில் வைத்திருக்கின்றன. பேரினவாத இயக்கங்கள், சிறுபான்மை மக்களை அச்சுறுத்துகின்றன. இந்துத்துவ கும்பல் பகிரங்க இனப்படுகொலையில் இறங்குகின்றன. இதுபோன்ற செயல்களை வலதுசாரி மதவாத அரசுகள், தேர்தல் வெற்றிக்காக செய்கின்றன. சுயநலனுக்காக மக்களை விட்டுக்கொடுக்கின்றன. இவையும் தவிர்க்கப்படவேண்டும்.


பாதிக்கப்படும் மக்கள் விழிப்புணர்வு பெறுவதே முக்கியமானது. அதிகாரத்திற்கு மதிப்பளித்து தனிநபரின் திறமை, நேர்மை புறக்கணிக்கப்படும் சமூகம் மோசமான நிலைக்கு செல்லும் என எழுத்தாளர் சேட்டன் பகத் யங் இந்தியா நூலில் கூறியிருப்பார். அதை நோக்கித்தான் வேகமாக நாம் விரைந்துகொண்டிருக்கிறோமா?


 நிகில் பாவா
டைம்ஸ் ஆப் இந்தியா
தமிழாக்க கட்டுரை

#nikhil pawa #free speech #telegram #meta #us #censorship #elon musk #pavel durov #x #legal representative #ban #judge de moraes balance of power #surveillance #illegal #disinformation #political #privacy #it rules

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்