தனிமையில் உள்ளவர்களை இணைக்கும் நட்பு கம்யூனிட்டிகள்!

 

 

 

 




சமகாலத்தில் நட்பு எப்படி இருக்கிறது?

இன்று நட்பு என்பது தொடர்ச்சியாக பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகத்திலிருந்து அப்படியே தொடர்வதில்லை. அலுவலக நட்பு என்பது பெரும்பாலும் ஆபத்திலும், நமக்கு நாமே குழிவெட்டிக்கொள்வதிலுமே முடியும். எனவே, பெரும்பாலான அலுவலக பணியாளர்கள், வேலையை செய்துவிட்டு வந்து தனியாகவே இருக்கிறார்கள். நட்பு வேறு, திருமண வாழ்க்கை உறவு வேறு. அவர்களுக்கு ஒரே நட்பாக ஸ்மார்ட்போன் உள்ளது. சிலர் புத்தகங்களை கிண்டிலில் படித்துக்கொண்டு பொழுதை ஓட்டுகிறார்கள். என்னுடைய விதியை நானே தீர்மானிப்பேன் என துணிச்சலாக உள்ளவர்கள், பம்பிள் போன்ற ஆப்பை தரவிறக்கி அதன் வழியாக புதிய நண்பர்களை, காதலை தேட முயல்கிறார்கள். டேட்டிங் ஆப் என கூறப்பட்டாலும் அதில் நீங்கள் நண்பர்களையும் தேடலாம். பெறலாம். ஒருவர் இருக்கும் இடத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ளவரோடு நட்பு சாத்தியமாவதில்லை. குறிப்பிட்ட வட்டாரத்தில் உள்ளவர்களோடு நட்பு பூண முயல்கிறார்கள்.

அறிமுகமில்லாத நண்பர்கள் எனும்போது உயிருக்கு ஆபத்து, பெண்களுக்கு வல்லுறவு அபாயம், கொள்ளையடிக்கப்படுதல், தாக்கப்படுதல் ஆகிய பிரச்னைகளை சிலர் எழுப்புகிறார்கள். நெருங்கிய உறவு, பள்ளி, கல்லூரி கால நட்புகள் நம்ப வைத்து ஏமாற்றி பணத்தை வாங்கிக்கொண்டு பேச்சை நிறுத்துவதில்லையா? ஆபத்துகள் அனைத்திலும் உண்டு. ஆனால், தைரியமாக இறங்கி விளையாடுபவர்கள் உலகில் நிறையப் பேர் உண்டு. நட்புக்காக அப்படி புதிய மனிதர்களை தேடிப்போக தயங்காதவர்கள் அதிகரித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஊக்கம் அளிக்க, எக்ஸைடட் கிளப், ஸ்மால் வேர்ல்ட் போன்ற அமைப்புகள் உதவுகின்றன. இந்த குழுக்களில் நீங்கள் காசு கட்டி இணைந்துகொண்டால், வார இறுதியில் பல்வேறு செயல்பாடுகளை அறிமுகமற்ற நண்பர்களோடு சேர்ந்துகொள்ளலாம். இதில் நட்பு உருவாகலாம். அதைக்கடந்தும் நீங்கள் செல்லலாம். இதெல்லாம் உங்களுக்கு எதிரில் இருப்பவரைப் பொறுத்தது.

ஸ்மால்வேர்ல்ட் என்பது இன்ஸ்டாகிராமில் இயங்குகிற அமைப்பு. இந்த அமைப்பு சமையல் பழகுவது, பயணம் செய்வது, மண்பானை செய்வதைக் கற்பிப்பது என நிறைய திறன் வளர்ப்பு பயிற்சிகளை வழங்குகிறது. அதில் இணைந்துகொண்டு தனிமையைத் தவிர்க்கலாம். எக்ஸைடைட் கிளப்பும் இதுபோல இன்ஸ்டாகிராமில் இயங்கி வருகிறது. செயல்பாடுகளும் அறிமுகம் இல்லாதவர்களை இணைத்து நட்பு பூண செய்வதுதான் நோக்கம்.

போன், கணினி இல்லாமல் உண்மையான நட்பை உருவாக்க விரும்புவதே இப்படி தொடங்கும் அமைப்புகளின் நோக்கம். டேட்டிங் வித் ஸ்ட்ரேஞ்சர்ஸ் என்ற நிகழ்ச்சி, நகரங்களில் பிரபலமாகி வருகிறது. இதில் 2,500 ரூபாய் கட்டி இணைந்துகொண்டால், ஒருநாளில் இரவு உணவு நேரத்தில் ஒன்பது பேர்களை நீங்கள் சந்திக்கலாம். ஒருவருக்கு முப்பது நிமிடம் ஒதுக்கி பேசி உணர்வுகளை பரிமாறி நண்பராகலாம். அதற்குமேல் அப்டேட் ஆவது என்பது உங்கள் சாமர்த்தியம். பெரும்பாலானோர், நட்புக்காகவே இதுபோல சந்திப்புகளில் பங்கேற்கிறார்கள்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என்று இருந்தாலும் இதெல்லாம் மெய்நிகர் உலகம். அங்கு உண்மையான நட்போ, சந்திப்போ கிடைக்குமா என்றால் ஆச்சரியம்தான். மிகவும் விதிவிலக்காகவே சிலர் ஒன்றாக சேர்ந்து நட்பு கொள்வார்கள். இணையம் முழுக்க காழ்ப்புணர்வும், கசப்பும், பாகுபாடும், கும்பல் படுகொலை செய்திகளுமாகவே இருக்கிறது. இதில் எங்குபோய் நட்பை வளர்ப்பது? சாதி,மதம் கேட்டு நட்பு வளர்ப்பது அரசியலுக்கு, சாதி, மத மாநாடுகளுக்கு உதவலாம். வேறு எந்த நல்ல விஷயமும் நடக்காது.

அறிமுகமில்லாதவர்களை சந்திப்பவர்கள் நிறையப்பேர், அதை இணையத்தில் படம் பிடித்து போடுவதைக் கூட தவிர்க்கிறார்கள். அதை தனியாக அந்தரங்கமாக கருதி விடுவதால் இப்படி செய்கிறார்கள். இதுபோல டிரெண்டும் உருவாகி வருகிறது. அகவயமானவர்கள் பெரும்பாலும் இதுபோல சந்திப்புகளுக்கு வருகிறார்களா என்றால் தேவையில்லையே என தனக்குள்ளேயே ஆழ்ந்துபோகும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. பிறருடன் பழகவேண்டும், நண்பர்கள் வேண்டும் என நினைப்பவர்கள் பல்வேறு துரோகங்கள், ஏமாற்றுதலுக்குப் பிறகும் நம்பிக்கையை கைவிடுவதில்லை. தொடர்ச்சியாக தேடி வருகிறார்கள். அவர்களுக்காகவே ஸ்மால் வேர்ல்ட், எக்ஸைடைட் கிளப் ஆகிய அமைப்புகள் உதவுகின்றன. இவற்றை அமைப்புகள் என்று கூற முடியாது. குறிப்பிட்ட நண்பர்களின் குழு என கூறினால் சரியாக இருக்கும்.

இன்றும் நட்பு உள்ளது. ஆனால், அதை தேடும்விதம் வேறாக உள்ளது. நவீன தொழில்நுட்பம் அதற்கு கைகொடுக்கிறது. அதை தனிமையில் உள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஏதாவதொரு வகையில் நல்ல நட்பு என்பது மனநிலைக்கு முக்கியம். கிடைத்தால் சரிதான்.

 லிவ் மின்டின் கட்டுரையைத் தழுவியது. 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்