சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் - மொழிபெயர்ப்பில் இணையத்தின் தாக்கம், பல்வேறு பிரச்னைகள் பற்றி கவனம் கொள்ளவேண்டும்!

 

 




 

சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்

உலகளவில் ஆக்ஸ்போர்ட் பிரஸ் பதிப்பு நிறுவனம் முக்கியமானது. இந்த நிறுவனம், தனது நூல்களை பல்வேறு உலக மொழிகளில் பதிப்பித்து வருகிறது. பழைய இந்தியாவில் முதல் பிரதமரான நேருவால் தொடங்கப்பட்ட சாகித்திய அகாதெமி நிறுவனம், பத்துக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் படைப்புகளை மொழிபெயர்த்து வெளியிட்டது. இந்து பேரினவாத அரசியலில் சாகித்திய அகாதெமி, நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆகிய நிறுவனங்கள் சிக்கி, தங்களது ஆக்கப்பூர்வத் திறனை எப்போதோ இழந்துவிட்டன.

இணையத்தில் ஆங்கில வழியாக மொழிபெயர்ப்பவர்கள் அதிகம் உள்ளனர். குறிப்பிட்ட மொழியைக் கற்று அதன் வழியாக தமிழுக்கு மொழிபெயர்ப்பவர்கள் அல்லது உள்ளூர் மொழியில் மொழிபெயர்ப்பு செய்வது குறைந்துவிட்டது. இதுபோல மொழிபெயர்ப்பை செய்வதை குறிப்பிட்ட மொழியை திணிக்க முயலும் ஒன்றிய அரசு ஊக்குவிப்பதில்லை. தாய்மொழியை வளர்க்க வேண்டுமெனில் குறிப்பிட்ட மாநில அரசுகள்தான களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும். தெற்காசியாவில் சால்ட் என்ற மொழிபெயர்ப்பு திட்டம் உருவானது. திட்டமாக இப்படி உருவானாலும் அமைப்பு ரீதியாக ஐஎல்டி கொரியா அல்லது கோத்தே இன்ஸ்டிடியூட் போல திறம்பட இயங்கும் மொழிபெயர்ப்பு நிறுவனங்கள் இந்தியாவில் கிடையாது. அப்படி இருந்தாலும் அவையும் வலதுசாரி இந்து கருத்தியலால், சாணி வண்டுகளால் களங்கப்படுத்தப்பட்டுவிட்டன. ஆக, மொழிபெயர்ப்பாளர்களுக்கோ, அவர்களின் மொழிபெயர்ப்புக்கோ பெரிய மரியாதையும் இல்லை. அதை நிதி உதவி செய்து ஊக்கப்படுத்துபவர்களும் இல்லை.

இப்படியான விரக்தியான சூழலில் இலக்கிய வாசிப்பாளன என்ன செய்வது? கவலையுற வேண்டாம். தனிநபர்களாக பெரிய லாபநோக்கின்றி இயங்குகின்ற எழுத்தாளர்கள் குறைந்தளவிலேனும் பல்வேறு படைப்புகளை தமிழுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். உதாரணமாக மொழிபெயர்ப்பாளர் சு கிருஷ்ணமூர்த்தி அவர்களைக் கூறலாம். இவர் வங்க மொழியில் இருந்து முப்பத்தாறு இலக்கிய படைப்புகளை, தமிழுக்கு கொண்டு வந்திருக்கிறார். மிகப்பெரும் படைப்பாளிகள், மொழிபெயர்ப்பிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு தாகூர் தொடங்கி ஜெயமோகன் வரை பல்வேறு சிறந்த எடுத்துக்காட்டுகளைக் காட்டலாம். தனி ஒரு மனிதராக பல்கலைக்கழகம் போன்ற அரசு நிறுவனம் செய்யும் வேலைகளை, இலக்கியப் பணிகளை செய்து புகழும் பெருமையும் இல்லாமல் இறந்துபோன ஆளுமையான மனிதர்கள் தமிழில் உண்டு.  இத்தகைய அர்ப்பணிப்பான இலக்கிய ஆளுமைகளால்தான் தமிழ் இலக்கியம் சாகாமல் இருக்கிறது. இன்று தாமதமாகவேனும் பிற மொழிகளில் உள்ள இலக்கியங்களை வாசிக்க முடிவதற்கு, அர்ப்பணிப்பாக தங்களை ஈடுபடுத்திக்கொண்ட மனிதர்களே காரணம்.  

நவீன காலத்தில் செயற்கை நுண்ணறிவு வந்துவிட்டது. கூகுள் ட்ரான்ஸ்லேட், பிங் ட்ரான்ஸ்லேட், கோபைலட் துணைவன் என பல்வேறு வசதிகள் உள்ளன. ஒருமுறை எம் எஸ் சுப்புலட்சுமி பற்றிய நூலை இடதுசாரி பதிப்பக எழுத்தாளர், கூகுள் ட்ரான்ஸ்லேட் மட்டுமே பயன்படுத்தி மொழிபெயர்த்து அதை அச்சிட்டு வெளியிட்டுவிட்டார். அதை வாங்கிய நண்பர், படித்துவிட்டு விரக்தியில் ஆழ்ந்துவிட்டார். கணினி, இணைய மென்பொருட்கள் வார்த்தைகளை பிற மொழிக்கு மொழிபெயர்ப்பதில் சந்தேகமில்லை. பொருள் சார்ந்த துல்லியத்தில் பிரச்னை இருக்கும். அதை ரத்தமும், சதையும் கொண்ட ஆன்மா குலையாத ஒருவர்தான் எழுத முடியும். நிச்சயம் ஏஐ எழுத முடியாது.

இணைய நூல் பரப்பைப் பார்ப்போம். டெக் வல்லுநர்கள் சிலர் தமிழைக் காப்பாற்றுகிறேன் என இறங்கி இலவச தமிழ் நூல்களை பதிப்பிக்கிறார்கள். ஆனால் அந்த நூல்கள், உலகளவில் தமிழ் வாசிப்போரை ஈர்க்கும் குறைந்தபட்ச தரம் கூட இல்லாமல் வெளியிடப்படுகிறது. எழுத்தாளர் தனது நூலை தந்தால் என்ன என்ற அதிகார, ஆணவ மனநிலையில் டெக் வட்டார ஆட்கள் செயல்படுகிறார்கள். இந்த வலைத்தளங்களில், எழுதுபவனை கௌரவிக்க குறிப்பிட்ட தொகையைக் கொடுப்பது, அங்கீகரிப்பது, விழா நடத்துவது என ஏதும் இருக்காது. ஒருங்கிணைப்பு வேலையை செய்து தமிழை வளர்க்கும் முழுப்பெருமைக்கான அங்கீகாரத்தை உட்கார்ந்த இடத்திலேயே பெற்றுவிடுகிறார்கள்.  டெக் ஆட்கள், எழுத்தாளர்களுக்கு இழைக்கும் அவமரியாதை சாதாரணமானது அல்ல. மிக நுட்பமானது. நூலை வெளியிடுவது, அதன் அட்டை வடிவமைப்பு என எதிலும் எழுத்தாளரின் பங்களிப்பு இருக்காது. ஏன்? ஒருவரின் நூலை இணையத்தில் வெளியிட்டாலும் தகவல் அனுப்ப மாட்டார்கள். அந்த நூல் எங்கெங்கு பதிவாகிறது என எழுத்தாளனுக்கே தெரியாது. ஏதேனும் பிரச்னை வந்தால், உடனே எழுத்தாளனின் மின்னஞ்சலுக்கு கடிதம் அனுப்பி நெருக்கடி கொடுப்பார்கள். இப்படித்தான் நவீன தமிழ் எழுத்தாளர்கள் பூரண கும்ப மரியாதை செய்யப்படுகிறார்கள். வார இதழ்கள், இத்தகைய சர்வாதிகார நிலைமை புரியாமல் தாம்பூலப்பை போல விருதுகளைக் கொடுத்து சிறப்பிக்கின்றன.

உண்மையான திறமைகளை அங்கீகரிக்காமல் யாருக்கு யாரைத் தெரியும், தொடர்புகள் வைத்திருக்கிறவர் என முன்னுரிமை அளித்தால் நல்ல விஷயங்கள் எப்படி வளரும்? எழுதுபவர்கள், மொழிபெயர்ப்பாளர்களுக்குத்தான் எப்படி ஆர்வம் வரும்? தமிழ்நாட்டிலுள்ள இடதுசாரி பதிப்பகங்கள், கருத்தியல் கொள்கை கொண்டவர்களின் உழைப்பில் உருவான நூல்களை ஒரு பைசாக கூட கொடுக்காமல் வெளியிட்டு காசு சம்பாதிக்கின்றன. உரிமைத்தொகையை போராடி பெற்றால்தான் உண்டு. பெரும்பாலும் தர மாட்டார்கள். நல்ல குணம் என்றால் இளிச்சவாயன் என்ற பெயர்தான் மிச்சம். மோசடிக்காரர்களுக்கு சாமர்த்தியசாலி என்ற அங்கீகாரப் பாராட்டு வேறு.

மொழிபெயர்ப்பு உரிமைகளைப் பற்றி பேச வேண்டும் அல்லவா? இளம் எழுத்தாளர்கள், பெரிய நிறுவனங்களிடம் சென்று மொழிபெயர்ப்பு உரிமைகளை பேசி வாங்குவது கடினம். இவற்றைப் பெற்றுத் தருவதற்கு என ஆட்கள் கிடையாது. காலச்சுவடு, ஆனந்தவிகடன் போன்ற நிறுவனங்கள் உரிமைகளைப் பெற்று சிறப்பாக நூல்களை மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்கள். காப்புரிமை பிரச்னை இல்லாத பழைய நூல்களை ஒருவர் மொழிபெயர்த்து வெளியிட முயலலாம். அதுவும் கூட இணையத்தில். தனியாக காசு செலவழித்து அச்சு நூலை பதிப்பித்து அதை விற்று என்பதெல்லாம் மிக கடினமான செயல்பாடாக மாறிவிட்டது.

உலக மொழிகளில் நீதிநெறி நூல்களையே இன்னும் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தால் சமகால நூல்களை மொழிபெயர்க்க சில நூறு ஆண்டுகள் தேவைப்படக்கூடும். நிலைமை இப்படித்தான் என்பதால், வேறுவழியின்றி நம்பிக்கையைப் பேணுவோம்.

தி இந்து ஆங்கிலக்கட்டுரையை(சுசித்ரா, பிரியம்வதா) தழுவியது.

விபுத்தன்




 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்