காங் குடும்பத்தை உளவாளிகளை அனுப்பி படுகொலை செய்ய முயலும் வுபெங் கூலிப்படை!

 

 

 



 

 

மை ஜர்னி டு யூ
சீன டிராமா
24 எபிசோடுகள்

யூட்யூபில் இலவசமாக கிடைக்கும் சீன தொடர். காங் என்ற மருத்துவத்தை அடிப்படையாக கொண்ட குடும்பம் தனியாக நகரத்தை உருவாக்கி இயங்கி வருகிறது. மருந்துகள், விஷம், மேலும் பல பொக்கிஷங்களை வைத்திருக்கிறார்கள். இவர்களை வுபேங் என்ற கூலிக்கொலைகாரர்கள் இயக்கம், தாக்கி அழித்து பொக்கிஷங்களை கைப்பற்ற முயல்கிறது. அவர்களின் உளவாளிகள் திருமண மணப்பெண் போர்வையில் ஊடுருவுகிறார்கள். அதை காங் குடும்பம் எப்படி எதிர்கொண்டது என்பதை கூறியிருக்கிறார்கள்.

காங் குடும்பம், அதன் உறுப்பினர்கள், அவர்களுக்குள் உள்ளே உள்ள பிணக்குகள், பிரச்னைகள் ஆகியவற்றை நிதானமாக காட்சிபடுத்தியுள்ளனர். இதனால், தற்காப்புக்கலை சார்ந்த சண்டைகளை எதிர்பார்ப்பவர்கள் இருபத்து நான்காவது எபிசோடு வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இதிலேயே அடுத்த சீசன் எடுக்கும் ஐடியாவும் உள்ளது. அதற்கான காட்சிகளையும் இறுதியாக சேர்த்திருக்கிறார்கள்.

காங் இசு, தாயில்லாமல் தந்தையில் கண்டிப்பில் வளர்ந்து வரும் பாத்திரம்.இவர்தான் நாயகன். அப்பா, அண்ணன் திடீரென இறந்துபோக இனக்குழு தலைவர் பொறுப்பை ஏற்று அதை எப்படி செயல்படுத்துகிறார் என்பதே மையமாக உள்ளது. அந்த காட்சிகள் அனைத்துமே நிதானமாக நகர்கின்றன. சீன தொடர் என்றாலும், இதை படம்பிடித்த கேமராவின் கோணங்கள் திரைப்படங்களுக்கான தரத்தைக் கொண்டுள்ளது. காட்சிகள் முழுக்க பழுப்பு, கருப்பு நிறம் கொண்டதாக எடுக்கப்பட்டது, கதையின் பூடகத்தன்மைக்கு உதவியுள்ளது.

காங் இசு பார்க்க அடிப்படையில் பொறுப்பற்ற தன்மையில் இருந்தாலும் இனக்குழு தலைவராக பொறுப்பேற்ற பிறகு அந்த பாத்திரம் மாறுகிறது. மெல்ல விரிவாவதோடு,பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வுபேங் ஏற்படுத்திய அழிவுக்கு பதிலடி கொடுப்பதாக திட்டம் வகுக்கிறது. இந்த திருப்பம்தான் தொடரை ரசிக்க வைக்கிறது. அதை வுபேங் நம்பி, காங் குடும்பத்தை தாக்கி தோற்றுப்போய் உயிரை விடுகிறார்கள். காங் ஷாங்ஜூ பாத்திரத்தில் நடித்த நடிகர், அதை நன்றாக புரிந்துகொண்டு நடித்திருக்கிறார். மெல்ல புன்னகைத்தபடியே காங் இசுவின் கேள்விகளுக்கு பதில் சொல்வது, வுபேங்கால் அவரது அம்மா, தம்பி கொல்லப்பட்ட இறந்தகால காரணத்தால் உளவாளி என்றாலே கறுப்பு கறுப்புதான் என கொல்வதற்கு வாளை உருவுவது, எந்த உணர்ச்சியையும் காட்டாமல் நிதானமாக சொற்களை எண்ணி பேசுவது என என்ன யோசிக்கிறார் என கூறமுடியாத பாத்திரம்.

கதையில் நல்லவர் கெட்டவர் என யாருமில்லை. அப்படி பார்வையாளர்கள் புரிந்துகொண்டு இருந்தாலும். வுபேங் பற்றிய உண்மை வெளியே வரும்போது மெல்ல நிலைமை மாறுகிறது. அனைத்து பாத்திரங்களுமே நல்லவர், கெட்டவர் என பாகுபாடு இல்லாமல் எழுதப்பட்டுள்ளது. அனைவருக்குமே தாங்கள் செய்யும் செயலில் ஒரு நியாயம் இருக்கிறது. அதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்கிறார்கள். எல்லை எதுவென்பதில் வரம்பே கிடையாது என்பதுதான் பிரச்னையாகிறது.

காங் இசு, இனக்குழு தலைவராகவேண்டும் என நினைப்பதில்லை. அந்த சூழல், அவரது எதிரிகளால் திடீரென ஏற்படுத்தப்படுகிறது. அந்த எதிரி யார் என்பது பார்வையாளர்களுக்கு முன்பே தெரிந்துவிடுகிறது. மற்ற பாத்திரங்களுக்கு எப்படி தெரிகிறது என்பதுதான் கதையின் இறுதிப்பகுதி. காங் இசுவின் அக்கா, நகைச்சுவைக்கு பொறுப்பேற்றிருக்கிறார். நன்றாகவும் நடித்திருக்கிறார். இவரின் கூடவே வரும் யங் மாஸ்டர் ஹூவா பாத்திரமும் சிறப்பாக உள்ளது.

யுன் வெய்ஷான் பாத்திரத்தில் எஸ்தர் யு என்ற நடிகை நடித்துள்ளார். பயம், காதல், அன்பு, குற்றவுணர்ச்சி என அனைத்தையும் பிரமாதமாக வெளிப்படுத்தியுள்ளார். அனேகமாக அடுத்த சீசன் வந்தால், இவரை மையப்படுத்தியே நகர அதிக வாய்ப்புள்ளது. இவரது பயிற்சியாளராக வருபவருடனான உரையாடல் தத்துவார்த்தமாக உள்ளது. சுவரை கட்டிக்கிறதால, சூரியன் உதயமாவறதை தடுக்க முடியாது. இருட்டுங்கிறது ஒருநாள் முடிவுக்கு வந்துதான் ஆகணும் என நிறைய வசனங்கள் விரக்தி நிறைந்த சூழலில் நம்பிக்கையை ஊட்டுகி்ன்றன.

ஜின்பேனுக்கும், காங் இசுவுக்குமான உறவு இரு நண்பர்களைப் போலத்தான் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஜின்பேன், காங் இசுவுக்கு மாமா முறையில் மாறுகிறார். ஆயுதங்களை, வெடிமருந்துகளை தயாரிக்கும் ஷாங் இனக்குழுவின் இளவரசியும், காங் இசுவின் அக்கா, ஜின்பேனை காதலிக்கிறார். இருவருக்குமான காதல் காட்சிகள், குறைவு என்றாலும் சிறப்பாக உள்ளன. ஜின்பேனை பிழைக்க வைக்க காங் இசு, அரிய மூலிகையை விட்டுக்கொடுக்கும் காட்சியும், அதற்கு விளக்கம் கொடுப்பதும் நெகிழ வைக்கிறது.

இனி பிழைகளைப் பார்ப்போம்.


ஒருமுறை ஒருவருக்கு தீ்ங்கு செய்துவிட்டால், அவருடன் உறவு கொள்வது தொடர்புடையவருக்கு பழிவாங்கிக்கொள் என வாய்ப்பை தானே கொடுப்பது போலாகும். இந்த நிலையில், வெய்ஷான், லேடி வூஜியை எப்படி நம்பி மருமகளுக்கான பரிசை வாங்கி விஷ ஊசியால் தாக்கப்படுகிறார்?

ரகசியப் பாதை என்பது யாருக்கும் தெரியாமல் இருப்பது. அதை அனைவரும் அறிந்தபிறகு, அதை காங் இசுவும், வெய்ஷானும் இறுதியாக வுபேன் உளவாளியும் பயன்படுத்துவது எப்படி?

வெய்ஷான், காங் அரண்மனையிலிருந்து வெளியேற வேண்டும். ஆனால் அவர் அங்கேயே இருக்கிறார். அப்படி வெளியேறிய பிறகும் கூட சுதந்திர வாழ்க்கைக்கு செல்லவில்லை.

காங் ஷான்சு கண்டிப்பான பாதுகாப்பு அதிகாரி. ஆனால், அவர் தனது தம்பி யுவான்சி கூறுவதை நம்புவதில்லை. இதனால், யுபேன் உளவாளிப்பெண் எளிதாக பல்வேறு உளவு வேலைகளை செய்கிறாள்.

காங் இசுவுக்கு இறுதியாக வுபேங் கூலிப்படையை சந்திக்க போகிறோம் என தெரியும். அப்போதும் கூட உடலில் கவசம் அணியாமல் பதவி ஏற்கும் நிகழ்ச்சிக்கு எப்படி வருகிறார்?

இதுபோல ஏராளமான கேள்விகள் நமக்கு தோன்றுகின்றன. மெதுவாக நகரும் சீனதொடர் அனைவருக்கும் பிடிக்கும் என கூற முடியாது.

இறுதியாக நடக்கும் திருப்புமுனை, நாயகனின் அசகாய புத்திசாலித்தனம், மக்களைக் காக்கும் முறை ஆகியவை தொடரை பார்க்கும் ஆர்வத்தை தூண்டுகின்றன.

கோமாளிமேடை டீம்
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்