இந்தியாவை விட்டு தப்பித்து ஓடும் மக்கள்!

 

 

 





 

 


இந்தியாவை விட்டு தப்பித்து ஓடும் மக்கள்!

எதற்காக ஓடுகிறார்கள்? எல்லாம் ஒரு ஜாண் வயித்துக்காகத்தான் அய்யா. கடந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவிற்கு கள்ளத்தனமாக சென்று, தங்குவதற்கு அனுமதி பெற முடியாமல் காவல்துறையில் மாட்டிக்கொண்டவர்களின் எண்ணிக்கை 96, 917. கொரோனா லாக்டவுன் சீரானவுடன் எவனாவது இந்த நாட்டில் இருப்பானா என மக்கள் தலைதெறிக்க மேற்கு நாடுகளைப் பார்த்து ஓட்டம் பிடித்திருக்கிறார்கள். 7,25, 000 இந்தியார்கள் அனுமதி வாங்காமல் அமெரிக்கா, மெக்சிகோ, எல் சால்வடோர் எல்லையில் சுற்றித் திரிந்து வருகிறார்கள் என ப்யூ நிறுவனம் ஆய்வில் தெரிவித்துள்ளது. பைத்தியக்காரர்களின் கையில் தீப்பந்தத்தைக் கொடுத்துவிட்டு உயிருக்கு தப்பி ஓடுவது என்ன புத்திசாலித்தனமோ?

அமெரிக்காவில் அகதிகளைப் பற்றி எப்போது தேடுதல் நடத்தினாலும் அதில் மாட்டிக்கொள்பவர்களில் இந்தியர்களே அதிகம். இவர்கள் அமெரிக்காவில் ஆதார அடையாள அட்டைகள் இல்லாமலே வாழ்ந்து வருகிறார்கள். எல்லைகளிலும் இப்படித்தான் மக்கள் உள்ளே நுழைய முயன்று வருகிறார்கள். காசு கொடுத்தால் சட்டவிரோத பாதை வழியாக ஏஜண்டுகளே மேற்கு நாடுகளில் உள்ளே நுழைய ஏற்பாடு செய்கிறார்கள். இதை டாங்கி ரூட் என குறிப்பிடுகிறார்கள். ராஜ்குமார் ஹிரானி இதைப்பற்றிக் கூட இந்தியில் படம் எடுத்து தோற்றுப்போன நினைவு வருகிறதா?

இந்தி, பஞ்சாபி, குஜராத்தி மொழி பேசும் மக்களே அதிக எண்ணிக்கையில் இந்தியாவை விட்டு வெளியேறி ஆகவேண்டும் என வேட்கை கொண்டுள்ளனர். இவர்களின் வயது பதினெட்டு தொடங்கி முப்பத்து நான்கு வயதுக்குள்ளாக உள்ளது. எண்பது சதவீதம் பேர் ஆண்கள்தான். அனைவருமே சொல்லி வைத்தது போல கள்ளத்தனமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயல்கிறார்கள். குஜராத் மாடலின் வளர்ச்சிக்கு மக்கள் வெளியேற்றம் சிறந்த உதாரணம்.

அகதிகளாக சென்று அதற்கான அனுமதியைப் பெறுவதில் பஞ்சாப் மக்கள் 73 சதவீதம், குஜராத் மக்கள் 53 சதவீதம் என வெற்றி சதவீதத்தைக் கொண்டிருக்கிறார்கள். பரிதாபம்.. இதிலும் பரமாத்மாவின் ஊர் கீழே போய்விட்டது. பத்தில் ஒரு விசா இந்தியர்களுடையது என்ற நிலையில் அமெரிக்காவில் விசா வாங்க இந்தியர்கள் போர் தொடுத்து வருகிறார்கள். அமெரிக்கா அந்தளவு தாராள மனம் கொண்டது கிடையாது. இந்தியர்களுக்கான விசாவை வழங்க கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வந்துவிட்டனர். பிப்ரவரி 2024 கணக்குப்படி, 34 மில்லியன் மக்கள் அமெரிக்க விசா வாங்க காத்திருக்கிறார்கள்.

நாடு என்பது வெறும் நிலமல்ல. மக்கள்தான் அதன் அடையாளம். இப்படியே மக்கள் வெளியேறிக் கொண்டிருந்தால், ஒருகட்டத்தில் மாடுகள் மட்டுமே வாழும் பேய் நாடாக இந்தியா மாறிவிட வாய்ப்புள்ளது.

டிஓஐ



 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்