முகத்தில் ஏற்படும் வாதம், டைபாய்டை பரப்பிய சமையல்கார பெண்மணி - மிஸ்டர் ரோனி

 

 

 







 

அறிவுப்பற்று
மிஸ்டர் ரோனி

டைபாய்ட் மேரி என்று அழைக்கப்படுபவர் யார்?

அமெரிக்காவில் வாழ்ந்த சமையல்காரர் மேரி மலோன், டைபாய்ட் மேரி என அழைக்கப்பட்டார். இவர் உடலில் டைபாய்ட் ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் இருந்தன. அந்த நோயால் அவர் பெரியளவு பாதிக்கப்படவில்லை. ஆனால், அவர் சமையல் செய்த இடங்களில் நிறையப்பேர் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 51பேர் டைபாய்ட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் மூன்றுபேர் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்கள். எனவே, அரசு மேரியை 1907-1910, 1914-1938 ஆண்டுகளில் நார்த் பிரதர் தீவில் அடைத்து வைத்திருந்தது. நியூயார்க் சுகாதாரத்துறை, இனி சமையல் பணிகளில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து விடுதலை செய்தது. ஆனால், மேரிக்கு சமையல் வேலை மட்டுமே தெரியும் என்பதால் அதே வேலையை பிடிவாதமாக செய்தார். அவர் உடலில் இருந்த நுண்ணுயிரிகள் பலருக்கும் பரவி டைபாய்ட் நோயாளிகள் அதிகமானார்கள். எனவே, அரசு சுகாதாரத்துறை மேரியை பிடித்து நார்த் பிரதர் தீவில் அவர் வாதம் வந்து சாகும்வரை 1938ஆம் ஆண்டு வரை சிறையில் அடைத்து வைத்தது.

குடல்புண் உருவாக காரணம் என்ன?

மனப்பதற்றம், கார உணவுகள், மரபணு என தொடக்கத்தில் மருத்துவர்கள் யோசித்தனர். இவற்றை முற்றாக மறுக்கமுடியாது. குடல் புண் உருவானால் அவற்றை மேற்சொன்ன அம்சங்கள் ஊக்குவிக்கின்றன. ஹெலிகாபாக்டர் பைலரி என்ற பாக்டீரியமே குடல்புண்ணுக்கு முக்கியமான கர்த்தா. ஆராய்ச்சியாளர் பேரி மார்ஷல், இந்த பாக்டீரியத்தை அதிகளவு தனது உடலில் செலுத்திக்கொண்டார். பத்து நாளில் அவரது உடலில் குடல்புண் தோன்றியது. இன்று குடல்புண்ணை தீர்க்க எதிர்நுண்ணுயிரி மருந்துகள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றை மருத்துவர் பரிந்துரைப்படி வாங்கி பயன்படுத்தலாம். பேரி மார்ஷலின் மருத்துவப்பங்களிப்பிற்காக 2005ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இப்பரிசை அவருடன் சேர்ந்த பகிர்ந்துகொண்டவர் ஆராய்ச்சியாளர் ஜே ராபின் வாரன்.

கார்பல் டன்னல் சிண்ட்ரோம் பற்றி கூறுங்கள்.

கணினியில் பணியாற்றுபவர்களுக்கு வரும் நோய். தட்டச்சுப் பலகையில் வேலை செய்யும்போது சரியான கோணத்தில் கைகளை வைத்து இயங்க வேண்டும். அப்படியில்லாதபோது, முன்கை, மணிக்கட்டு ஆகியவை பாதிக்கப்பட்டு கார்பல் டன்னல் சிண்ட்ரோம் உருவாகிறது. இதன் விளைவாக, கைவிரல்கள், கைகளில் வலி உருவாகிறது. நடுத்தர வயது பெண்களுக்கு அதிகம் இந்த பிரச்னை உருவாகிறது. தொடக்கத்தில் கை விரல், கைகளில் உணர்ச்சியின்மை தோன்றும். அப்போதே சுதாரித்தால், அறுவை சிகிச்சை அல்லது மருந்துகள் மூலமாக சரிசெய்யமுடியும்.

பெல்ஸ் பால்ஸி ஆபத்தானதா?

முகத்தில் உள்ள தசைகள் பகுதியளவு அல்லது முழுமையாக செயலிழந்து போவதை பெல்ஸ் பால்ஸி என குறிப்பிடுகிறார்கள். இந்த நோய் வந்தால், ஒருவரின் கண் அல்லது வாயில் வறட்சி, கண்கள் அதிகமாக சிமிட்டுவது, உண்ணும் உணவில் சுவை தெரியாமல் போவது, கண்ணில் நீர்வடிவது ஆகியவை ஏற்படும். மருத்துவ சிகிச்சையைத் தொடங்கினால் ஆறுமாதத்தில் தீர்வு கிடைக்கும்.

#bells palsy #paralysis #symptoms #carpal tunnel syndrome #mr roni #median nerve #wrist #middle age women #computer #vulnerable #stomach ulcer #helicobactor pylori # barry marshall #j robin warren #typhoid mary #marry mallon #typhoid bacilli







கருத்துகள்

பிரபலமான இடுகைகள்